பாகிஸ்தானுக்கு ஆதரவாக “வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்”.. 25 வயது பெண் கைது! பரபர கர்நாடகா! என்னதான் வைத்தார்?
பெங்களூரு : பாகிஸ்தானில் குடியரசு தினத்தன்று வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் ஒன்றை வெளியிட்டதற்காக கர்நாடகாவின் பாகல்கோட் மாவட்டத்தில் 25 வயது பெண் ஒருவர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹிஜாப் விவகாரத்தைத் தொடர்ந்து கர்நாடக மாநிலத்தில் கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.
ஹிஜாப் விவகாரம் ஹிஜாப் குறித்த கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு பாஜக அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் அடுத்தடுத்த சர்ச்சை பேச்சுகள் என பரபரத்துக் கிடக்கிறது கர்நாடகா.

கர்நாடகாவில் சர்ச்சை
கர்நாடக அமைச்சர் ஈஸ்வரப்பா கடந்த சில நாட்களுக்கு முன்பு பேசும் போது இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்கள் ஆர்எஸ்எஸ்ஸில் சேர்வார்கள் என்ற பேச்சு பெரும் புயலைக் கிளப்பியது. அடுத்ததாக மதரஸாக்களை தடை செய்ய வேண்டும் என பேசிய பாஜக எம்எல்ஏ ரேணுகாச்சாரியா அங்கு பாரத் மாதா கி ஜே என சொல்லப்படுவதில்லை எனவும் அவ்வாறு செய்யாவிட்டால் மதுக்கடைகளை மூட வேண்டும் எனவும் தெரிவித்தார் இதற்கு இஸ்லாமிய அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

பாகிஸ்தான் ஆதரவு ஸ்டேட்டஸ்
இந்த நிலையில்தான் பாகிஸ்தான் குடியரசு தினத்தன்று அந்நாட்டுக்கு ஆதரவாக வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்த குற்றச்சாட்டில் இளம்பெண் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது மீண்டும் அதிர்வலைகளை கர்நாடகாவில் ஏற்படுத்தி உள்ளது. குத்மா ஷேக் என்ற பெண் முதோல் பகுதியைச் சேர்ந்தவர். இவர் அருகிலுள்ள மதரஸாவில் படித்து வருகிறார். பாகிஸ்தானின் குடியரசு தினமான மார்ச் 23 அன்று அவர் தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் உருது மொழியில், "அல்லா ஹர் முல்க் மீ இத்திஹாத்...அமன்...சுகூன்...அதா ஃபர்மா மௌலா." என பதிவிட்டுள்ளார்.

இளம்பெண் கைது
"கடவுள் ஒவ்வொரு தேசத்தையும் அமைதியுடன் ஆசீர்வதிக்கட்டும், ஒற்றுமை மற்றும் நல்லிணக்கம் வேண்டும்" என்பதுதான் அதன் அர்த்தம். இந்நிலையில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக அவர் பதிவிட்டிருப்பதாக அருண்குமார் பஜந்த்ரி என்ற சமூக ஆர்வலர் முதோல் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து குத்மா ஷேக் கைது செய்யப்பட்டார். ஷேக் கைது செய்யப்பட்ட மார்ச் 24 அன்று காவலில் வைக்கப்பட்ட அவருக்கு அடுத்த நாள் ஜாமீன் வழங்கப்பட்டது.

வழக்குப் பதிவு
அருண்குமார் பஜந்த்ரி அந்தப் பெண் இனப் பதட்டத்தைத் தூண்டுவதை நோக்கமாகக் கொண்டதாகவும், அவர் மீது தேசத்துரோகக் குற்றச்சாட்டு சுமத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்த நிலையில், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 153(A) (மதம், இனம் அல்லது பிற குணாதிசயங்களின் அடிப்படையில் குழுக்களிடையே வெறுப்பைத் தூண்டுவது) மற்றும் 505(2) (மதம், இனம் அல்லது பிற காரணிகளின் அடிப்படையில் குழுக்களிடையே வெறுப்பைத் தூண்டுவது) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

கடும் விமர்சனம்
அவரது கைது சர்ச்சையான நிலையில், அமைதி மற்றும் ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக ஷேக் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. "அவரது ஸ்டேட்டஸ் பாகிஸ்தானின் குடியரசு தின கொண்டாட்டத்திற்காக வைக்கப்பட்டிருக்கலாம் எனவும், இது கலவரத்தை தூண்டும் என்றும், "நாங்கள் போதுமான அளவு விரைவாக செயல்பட்டிருக்கவில்லை என்றால், அது கலவரத்தை ஏற்படுத்தியிருக்கும்." என காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இக்கைது குறித்து பேசியுள்ள வழக்கறிஞரும் தகவல் அறியும் உரிமை ஆர்வலருமான பீமனகவுடா பரகொண்டா,குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிற்காது என்றும், காவல்துறையின் வலுவில்லாத எதிர்வினைகள் அப்பாவி மக்களைத் துன்புறுத்துவது போல் இருப்பதாகவும் கூறினார்.












Click it and Unblock the Notifications