தங்கம் கடத்திய நடிகை ரன்யா ராவ்.. வளர்ப்பு தந்தையான டிஜிபிக்கு கட்டாய விடுப்பு! வெளியான திடுக் தகவல்
பெங்களூர்: துபாயில் இருந்து 14.80 கிலோ தங்கம் கடத்தி வந்த வழக்கில் பெங்களூர் விமான நிலையத்தில் தமிழ் நடிகை ரன்யா ராவை வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணையில் போலீசாருக்கு தொடர்பு உள்ளதாக கூறப்படும் நிலையில் ரன்யா ராவின் வளர்ப்பு தந்தையும், ஐபிஎஸ் அதிகாரியும் டிஜிபியுமான ராமச்சந்திரராவ் கட்டாய விடுமுறையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இதன் பின்னணி குறித்த திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
கர்நாடகாவை சேர்ந்தவர் ரன்யா ராவ். இவர் கன்னடம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். கன்னட மொழியில் நடிகர் கிச்சா சுதீப்பின் மாணிக்யா என்ற படத்தில் நடிகையாக அறிமுகம் ஆனார்.

அதன்பிறகு ரன்யா ராவ் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். நடிகர் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு நடிப்பில் 2016ல் வெளியான ‛வாகா' திரைப்படத்தில் ஹீரோயினாக ரன்யா ராவ் நடித்தார்.
இந்நிலையில் தான் கடந்த 3ம் தேதி துபாயில் இருந்து விமானத்தில் ரன்யா ராவ் பெங்களூரில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் வந்து இறங்கினார். அப்போது அவரை விமான நிலைய போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் போலீஸ்காரர் பசவராஜ் என்பவர் பாதுகாப்பாக அழைத்து சென்றார். இந்த வேளையில் ரன்யா ராவ் நடத்தையில் வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு திடீர் சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து அவரை பிடித்து அதிகாரிகள் பரிசோதித்தனர். அப்போது நடிகை ரன்யா ராவ் 14.2 கிலோ எடை கொண்ட ரூ.12.56 கோடி மதிப்பிலான தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. தனது தொடையில் வைத்து தங்கத்தை அவர் கடத்திவந்தபோது அதிகாரிகளிடம் சிக்கினார். இதையடுத்து ரன்யா ராவை வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர்.
ரன்யா ராவின் வீட்டில் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ரொக்கப்பணம் மற்றும் தங்கங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து சிறப்பு நீதிமன்றத்தில் ரன்யா ராவை ஆஜர்படுத்திய அதிகாரிகள் அவரை காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது மேலும் அவர் கடந்த 15 நாளில் 3 முறை துபாய் சென்று வந்தது தெரியவந்தது. அப்போதும் அவர் தங்கம் கடத்தி வந்து இருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
இதுதவிர தங்கம் கடத்தல் கும்பலுடன் ரன்யா ராவுக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும் போலீசார் சந்தேகிக்கின்றனர். அதுமட்டுமின்றி ரன்யா ராவின் வளர்ப்பு தந்தையான ராமச்சந்திரராவ் கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக உள்ளார். இவர் தற்போது கர்நாடகா மாநில போலீஸ் குடியிருப்பு மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகத்தின் டிஜிபியாக பொறுப்பு வகித்து வருகிறார். இதனால் போலீசாருக்கும் இந்த தங்கம் கடத்தலில் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.
இதற்கிடையே தான் ரன்யா ராவின் வளர்ப்பு தந்தையான ராமச்சந்திரராவ் கட்டாய விடுப்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இன்னும் புரியும்படி கூற வேண்டும் என்றால் ரன்யா ராவ் வழக்கு தொடர்பாக ராமச்சந்திரராவின் பொறுப்பு பறிக்கப்பட்டு அவர் விடுப்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை கர்நாடகா அரசு இன்று பிறப்பித்துள்ளது.
இந்த உத்தரவின் பின்னணியில் முக்கிய விஷயம் ஒன்று உள்ளது. அதாவது ரன்யா ராவை விமான நிலையத்தில் இருந்து பாதுகாப்பாக அழைத்து வர சென்ற பெங்களூர் விமான நிலைய போலீஸ் நிலையத்தின் போலீஸ்காரர் பசவராஜ் அளித்த தகவல் தான் ராமசந்திரராவை கட்டாய விடுப்பில் அனுப்பி வைக்க முக்கிய காரணமாக உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது ரன்யா ராவ் கைதை தொடர்ந்து வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் அவரை பாதுகாப்பாக அழைத்து சென்ற போலீஸ்காரர் பசவராஜுக்கு சம்மன் அனுப்பி விசாரணைக்கு அழைத்தனர்.
போலீஸ்காரர் பசவராஜ் விசாரணைக்கு ஆஜரானார். அப்போது அவர், ‛‛சம்பவத்தன்று ரன்யா ராவ் எனக்கு போன் செய்தார். அன்று மாலை 6.20 மணிக்கு ரன்யா ராவ் என்னிடம் பேசினார். துபாயில் இருந்து பெங்களூர் விமான நிலையத்துக்கு வருவதாக கூறினார். அதோடு பாதுகாப்பு வேண்டும் என்றும் கூறினார். எனக்கும், இந்த தங்கம் கடத்தலுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. நான் எனது பணியை மட்டும் தான் செய்தேன். ரன்யா ராவுக்கு பாதுகாப்பு வழங்க உயரதிகாரிகள் கூறியிருந்தனர். அதனால் தான் அவரை பாதுகாப்பாக அழைத்து வர சென்றேன். இதற்கு முன்பும் சிலமுறை அவரை பெங்களூர் விமான நிலையத்தில் இருந்து அழைத்து சென்றுள்ளேன்'' என்று கூறினார்.
இதையடுத்து பசவராஜை வருவாய் புலனாய்வு அதிகாரிகள் விட்டுவிட்டனர். மேலும் சம்பவம் தொடர்பாக ரன்யா ராவ் சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார். அவருக்கு ஜாமீன் வழங்க வருவாய் புலனாய்வு அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த சமயத்தில் அதிகாரிகள் முக்கிய விபரங்களை அறிக்கையாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அதில், ‛‛மாநில போலீசாரின் பாதுகாப்புடன் தங்கம் கடத்தல் நடந்துள்ளது. ஹவாலா முறையில் இந்தியாவில் இருந்து பணப்பரிமாற்றம் செய்யப்பட்டு துபாயில் இருந்து தங்கம் கடத்தி வரப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் சிண்டிகேட் அமைத்து செயல்பட்டுள்ளனர்'' என்று கூறப்பட்டு இருந்தது. இதன்மூலம் டிஜிபி ராமச்சந்திரராவுக்கும், இந்த விவகாரத்துக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகம் வலுத்துள்ளது. இப்படியான சூழலில் தான் டிஜிபி ராமச்சந்திரராவை கர்நாடகா அரசு கட்டாய விடுப்பில் அனுப்பி வைத்துள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications