தமிழகம் + கர்நாடகாவின் உயிர்நாடி.. வரலாற்றில் முதல் முறையாக நடந்த காவிரி ஆரத்தி! களைகட்டிய பெங்களூர்
பெங்களூர்: தமிழகம் மற்றும் கர்நாடகாவின் உயிர் நாடியாக உள்ள காவிரி ஆற்றை வணங்கும் வகையில் வரலாற்றில் முதல் முறையாக இன்று பெங்களூர் சாங்கி டேங்க் ஏரியில் இன்று மாலை ‛காவிரி ஆரத்தி' நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது. தமிழக ஐஏஎஸ் அதிகாரி ராம்பிரசாத் மனோகர் ‛காவிரி ஆரத்தி' வெற்றிகரமாக நிறைவு பெற்றது. இதில் ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.
தமிழகம் மற்றும் கர்நாடகாவின் உயிர் நாடியாக காவிரி ஆறு உள்ளது. கர்நாடகாவில் குடகு மலையில் பிறக்கும் காவிரி கர்நாடகா மற்றும் தமிழகத்தின் விவசாய செழிப்புக்கும், குடிநீருக்கும் பெரும் ஆதாரமாக உள்ளது. கர்நாடகாவை எடுத்து கொண்டால் குடகு, மண்டியா, மைசூர், சாம்ராஜ்நகர், கோலார், பெங்களூர், பெங்களூர் புறநகர், ராமநகர், சிக்பள்ளாப்பூர் உள்பட பல மாவட்டங்கள் காவிரி ஆற்றால் பயனடைந்து வருகின்றன.

அதேபோல் தமிழகத்தை எடுத்து கொண்டால் தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மற்றும் அதனை சுற்றிய மாவட்டங்கள் காவிரி ஆற்றின் மூலம் பயன்பெற்று வருகிறது. இப்படியாக இருமாநிலங்களுக்கும் முக்கியமான ஆறாக காவிரி இருந்து வருகிறது. அவ்வப்போது இருமாநிலங்கள் இடையே காவிரி நீர் பங்கீட்டு கொள்வதிலும் பிரச்சனை உள்ளது. தற்போது கர்நாடகா சார்பில் மேகதாதுவில் காவிரிக்கு குறுக்கே புதிதாக அணை கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதற்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இப்படியான சூழலில் தான் வரலாற்றில் முதல் முறையாக பெங்களூரில் இன்று இரவு 7 மணிக்கு ‛காவிரி ஆரத்தி' நிகழ்ச்சி நடைபெற்றது. . பெங்களூர் சாங்கி டாங்கி ஏரியில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. . உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் ‛கங்கை ஆரத்தி' போல் அர்ச்சகர்கள் பூஜை மற்றும் ஆரத்தி மேற்கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பெங்களூர் குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்தின் தலைவர் ராம் பிரசாத் மனோகர் மேற்கொண்டு இருந்தார். ஐஏஎஸ் அதிகாரியான இவர் தமிழகத்தை சேர்ந்தவர்.

பெங்களூருக்கு காவிரி ஆறு தான் நீராதாரமாக உள்ளது. இதனால் காவிரிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், தலக்காவிரியில் இன்று உள்ளூர் எம்எல்ஏக்களால் பூஜை நடத்தப்பட்டது. அதன்பின், இங்கு மாலை 5:00 மணிக்கு நிகழ்ச்சிகள் துவங்கி பெங்களூரில் காவிரி ஆரத்தி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமானவர்கள் பங்கேற்றனர். துணை முதல்வர் டிகே சிவக்குமார், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பங்கேற்றனர். இந்த விழாவின் ஒருபகுதியாக லைட்டிங் டிஸ்பிளே, லேசர் ேஷா, இசை நிகழ்ச்சி உள்ளிட்டவையும் நடைபெற்றது.
அதோடு பெங்களூரை எடுத்து கொண்டால் அங்கு வசிக்கும் மக்களில் 70 சதவீதம் பேர் காவிரி ஆற்று தண்ணீரை தான் பயன்படுத்தி வருகின்றனர். பாகமண்டலாவில் இருந்து நேரடியாக பெங்களூருவுக்கு காவிரி தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. தினமும் பெங்களூர் நகருக்கு காவிரி ஆற்றில் இருந்து 2,225 மில்லியன் (ஒரு மில்லியன் என்பது 10 லட்சம்) லிட்டர் தண்ணீர் வருகிறது. இப்படி பெங்களூர் மக்களின் வாழ்வாதாரத்துக்கு முக்கிய பங்காற்றும் காவிரியை வணங்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

மேலும் காவிரியின் துணை நதியான விருஷபாவாதி என்பது சாங்கி டேங்க் பகுதியில் தான் பிறந்ததாக நம்பப்படுகிறது.அதவது சாங்கி டாங்க் ஏரியின் அருகே ஸ்ரீஜல கங்கம்மா தாய் கோவில் உள்ளது. விருஷபாவதி நதியின் பிறப்பிடத்தை அறிய இந்த கோவில் முன்னோர்களால் உருவாக்கப்ட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் தான் சாங்கி டாங்க் ஏரி இந்த நிகழ்ச்சிக்கு தேர்வு செய்யப்பட்டது. . அதோடு நாளை மார்ச் 22ம் தேதி என்பது சர்வதேச தண்ணீர் தினம். இதனால் நீர்நிலைகளை பாதுகாப்பது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னதாக காவிரி ஆரத்திக்கு எதிராக, சுற்றுச்சூழல் ஆர்வலர் கீதா மிஸ்ரா, நேற்று முன்தினம் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், ‛‛காவிரி ஆரத்தி நடத்துவதை வரவேற்கிறோம். ஆனால், பாதுகாக்கப்பட்ட சாங்கே ஏரியில் வர்த்தகம் அல்லது கேளிக்கை நடவடிக்கைகள், தற்காலிக மேடைகள் அமைப்பது, ஏரியில் உள்ள பல்லுயிர்களுக்கு தொந்தரவை ஏற்படுத்தும்.மீன் செத்து மிதந்ததற்கு கழிவுநீர் கலப்பால் உருவான நீலபச்சை பாசிதான் காரணம் . இதனால் அனுமதி அளித்தால், வணிக நோக்கங்களுக்காக மதம், கலாசார நிகழ்வுகளை தவறாக பயன்படுத்தும் வாய்ப்பு உள்ளது. இந்த ஏரி, புலம்பெயர்ந்த பறவைகள், நீர்வாழ் உயிரினங்களின் தாயகமாக உள்ளன. அவைகளுக்கு ஏற்படும் இடையூறை ஏற்றுக் கொள்ள முடியாது. எங்கள் போராட்டம் பக்திக்கு எதிரானது அல்ல. கொண்டாட்டம் என்ற பெயரில் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்க கூடாது. எனவே, தடை விதிக்க வேண்டும்'' என்று கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த கர்நாடகா உயர்நீதிமன்றம் தடை விதிக்க மறுத்தது. இதையடுத்து தான் இன்று சாங்கி டாங்கியில் கோலாகலமாக காவிரி ஆரத்தி நிகழ்ச்சி நடைபெற்று முடிவடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications