அண்ணாமலையின் அரசியல் பாதையே சரி.. பாஜக இல்லாமல் அதிமுக செயல்பட முடியாது.. சிடி ரவி பேட்டி!
பெங்களூரு: தமிழ்நாட்டில் பாஜக ஆதரவு இல்லாமல் அதிமுகவால் செயல்பட முடியாது என்று தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி ரவி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை சரியான பாதையில் தான் அரசியல் செய்து வருவதாக கூறிய அவர், தமிழ்நாட்டில் அண்ணாமலை செய்யும் அரசியலே சரியானது என்று தெரிவித்தார்.
கடந்த சில வாரங்களாக பாஜக - அதிமுக கூட்டணி இடையில் சலசலப்பு ஏற்பட்டது. தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுக உடன் கூட்டணி வைத்தால் தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று கூறியிருந்தார்.
அதுமட்டுமல்லாமல் இந்த விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, அமைப்பு பொதுச்செயலாளர் பிஎல் சந்தோஷ் ஆகியோரையும் சந்தித்தார்.

அண்ணாமலை கருத்து
இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, அதிமுக - பாஜக கூட்டணியில் குழப்பம் இல்லை. கூட்டணி தொடர்பான முடிவை மத்திய குழுவே முடிவு செய்யும் என்று கூறினார். ஆனால் தமிழ்நாட்டில் பாஜக வளர நினைப்பதாக கூறியிருந்தார். இதனால் நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் போது பாஜக கூட்டணி உறுதி செய்யப்படும் என்று பார்க்கப்படுகிறது.

சரியான பாதையில் அண்ணாமலை
இந்த நிலையில் அண்ணாமலையின் கருத்துக்கு தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி ரவி ஆதரவு தெரிவித்துள்ளார். கர்நாடகாவின் சிக்கமகளூருவில் செய்தியாளர்களை சந்தித்து சிடி ரவி கூறுகையில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை சரியான பாதையில் தான் அரசியல் செய்து வருகிறார். தமிழ்நாட்டில் அவர் செய்யும் அரசியல் சரியானது தான்.

பாஜக ஆதரவு தேவை
அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் ராஜினாமா செய்வேன் என்று கூறுவது பாஜகவிற்கு வலு சேர்ப்பதாக அமைந்துள்ளது. அண்ணாமலையின் அரசியல் நேர்த்தியாக உள்ளது. அண்ணாமலை இதுபோன்ற கருத்துக்களை கூறினால் மட்டுமே அதிமுகவினர் பாஜகவுடன் கூட்டணி வைக்க முன் வருவார்கள். ஏனென்றால் அதிமுகவால் பாஜகவின் ஆதரவு இல்லாமல் செயல்பட முடியாது. தமிழ்நாட்டில் பாஜக 1990ஆம் ஆண்டை போல் வலுவாக உள்ளது என்று தெரிவித்தார்.

கர்நாடகா தேர்தல்
தொடர்ந்து கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் பற்றிய கேள்விக்கு, கர்நாடகாவில் மீண்டும் பாஜக ஆட்சி தான் வரும். திப்பு சுல்தான் பற்றி பேசுபவர்கள் இந்துக்கள் என்று கூறி கொள்ள தகுதி இல்லாதவர்கள். இந்துத்துவாவை பற்றி பேசும் அவர்கள், திப்பு சுல்தானுக்கும் கொடி பிடிக்கிறார்கள். இது அரசியல் ஆதாயத்திற்காக செய்யும் செயல் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications