வன்முறையின்றி முடிந்தது பந்த்.. இயல்பு நிலையில் பெங்களூர்.. தமிழக பஸ்கள் இயங்கத் தொடங்கின
பெங்களூர்: காவிரி நீரை தமிழ்நாட்டுக்கு திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து கன்னட அமைப்புகள் இன்று காலை 9 மணிக்கு தொடங்கிய பெங்களூர் பந்த் போராட்டம் பல்வேறு பரபரப்புக்கு பிறகு மாலை 6 மணிக்கு முடிவுக்கு வந்து உள்ளது. இதையடுத்து ஒசூரில் நின்றிருந்த தமிழக பஸ்கள் பெங்களூர் நோக்கிய இயங்கத் தொடங்கின. வரும் வெள்ளிக்கிழமை கர்நாடக பந்த் இருப்பதால் அன்றைய தினம் பஸ்கள் இயங்குவது சந்தேகம் எனத் தெரிகிறது.
காவிரி மேலாண்மை ஆணைய பரிந்துரையை ஏற்று தமிழ்நாட்டிற்கு காவிரியில் 5,000 கன அடி நீர் திறக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. இதனை எதிர்த்து கர்நாடகா முழுவதும் கடந்த சில நாட்களாகவே போராட்டங்கள் வலுவடைந்து இருக்கின்றன. விவசாய சங்கங்கள், கன்னட அமைப்புகள் என பலர் இந்த போராட்டங்களை நடத்தி வருகின்றன.

இந்த நிலையில் இன்று பெங்களூர் நகரத்தில் பல்வேறு அமைப்புகள் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்தன. காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை நடத்தப்படும் இந்த பெங்களூர் பந்த் முழு அடைப்பு போராட்டத்திற்கு கரும்பு விவசாயிகள் சங்கம் தலைமை தாங்கியது. இந்த போராட்டத்துக்கு நூற்றுக்கும் மேற்பட்ட அமைப்புகள் ஆதரவளித்தன.
இந்த போராட்டத்துக்கு ஓலா, ஊபர் டாக்சி ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கமும் ஆதரவளிப்பதாக அறிவித்தது. குறிப்பாக பல்வேறு கன்னட அமைப்புகள், விவசாய சங்கங்கள், தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்தன. இன்று காலை 11 மணியளவில் டவுன் ஹால் பகுதியில் இருந்து மைசூர் பேங்க் வரை பேரணி நடைபெற்றது.
தலைநகர் பெங்களூரில் ஏராளமான தமிழர்கள் வசித்து வரும் நிலையில், அவர்களுக்கு இந்த போராட்டங்களால் அச்சுறுத்தலான நிலை இருந்தது. இந்த நிலையில் நாளை போராட்டம் காரணமாக தமிழ்நாட்டில் இருந்து செல்லும் லாரிகள் நாளை கர்நாடக எல்லையில் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதேபோல், தமிழ்நாடு நோக்கி கர்நாடகா வழியாக வட மாநிலங்களில் இருந்து வரும் லாரிகளும் நிறுத்தப்படும் என கர்நாடகா மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்தது.
இந்த போராட்டம் காரணமாக செல்லும் தமிழ்நாடு லாரிகள் கர்நாடக எல்லையிலேயே நிறுத்தப்பட்டன. அதேபோல் சென்னையில் இருந்து பெங்களூர் செல்லும் பேருந்துகளும் நேற்று இரவு 8 மணிக்கே கர்நாடக எல்லையில் நிறுத்தப்பட்டன. அதேபோல் தமிழ்நாட்டில் இருந்து கர்நாடகாவுக்கு செல்லும் பேருந்துகளும் பாதுகாப்பு கருதி நிறுத்தப்பட்டன. இன்று காலை போராட்டம் தொடங்குவதற்கு முன் ஆதரவை வாபஸ் பெற்ற வாட்டாள் நாகராஜ், 29 ஆம் தேதி நடக்கும் கர்நாடகா பந்துக்கு ஆதரவளித்தார். ஆனால், திடீரென பெங்களூரில் போராட்டத்தில் ஈடுபட்ட அவரை போலீசார் கைது செய்தனர்.
அதேபோல் நூற்றுக்கணக்கான கன்னட அமைப்பினரையும் போலீசார் கைது செய்தனர். இந்த போராட்டத்தின்போது கன்னட அமைப்பினர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவ படத்தை வைத்து இறுதிச் சடங்கு செய்வதைபோல் அவமதித்தனர். பெங்களூர் சுதந்திர பூங்காவில் அரை நிர்வாண போராட்டம் நடத்திய விவசாயிகள், கையில் மண்பாண்டம், குடங்கள் வைத்து முழக்கமிட்டனர்.
பெங்களூர் சுதந்திர பூங்காவில் போராட்டம் நடத்திய விவசாயி, தான் வைத்திருந்த துண்டை மரத்தில் கட்டி தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கன்னட அமைப்பினருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அய்யாக்கண்ணு தலைமையில் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு விவசாயிகள் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா உருவ படத்தை வைத்து இறுதிச் சடங்கு செய்தனர்.
இத்தனை பரபரப்புகளுக்கு பிறகு மாலை 6 மணியளவில் பெங்களூர் பந்த் முழு அடைப்பு போராட்டம் முடிவுக்கு வந்தது. இதன் காரணமாக பெங்களூரு எல்லையில் நிறுத்தப்பட்டு இருந்த தமிழ்நாடு லாரிகள், பேருந்துகள், நகருக்குள் நிறுத்தப்பட்ட ஓலா, ஊபர் டாக்சிகள், மூடப்பட்ட கடைகள் மீண்டும் இயங்க தொடங்கின.












Click it and Unblock the Notifications