தேஜஸ்வியால் குளறுபடி.. ரூல்சை மாற்றிய பெங்களூர் மாநகராட்சி, பெட் ஒதுக்கீடு தாமதம்! நோயாளிகள் தவிப்பு
பெங்களூர்: பெங்களூரின் கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் படுக்கை ஒதுக்கீடு செய்யும் விவகாரத்தில் பாஜக எம்பி, தேஜஸ்வி சூர்யா தலையிட்ட பிறகு நிலைமை இன்னும் மோசமாக உள்ளது.
மருத்துவமனையில் வேலை பார்க்கும் நர்சுகளுக்கு கூட அந்த மருத்துவமனை நிர்வாகங்கள் அவசரத்துக்கு படுக்கை ஒதுக்க முடியாத நிலைமைக்கு இந்த நகரம் சென்று விட்டது.
பெங்களூரில் கொரோனா நோயாளிகளுக்கு பெருநகர் பெங்களூர் மாநகராட்சி மூலமாக மருத்துவமனைகளின் படுக்கைகள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.

ஆனால், ஆக்சிஜன், வென்டிலேட்டர் உள்ளிட்ட வசதிகள் தேவைப்படும் நோயாளிகளுக்கு படுக்கையை ஒதுக்கீடு செய்யாமல் சாதாரண நோயாளிகள் பணம் கொடுத்தால் கூட அவற்றை ஒதுக்கீடு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
ஜெயநகர் பகுதியிலுள்ள பெங்களூரு தெற்கு மண்டலத்திற்கான வார் ரூம் அலுவலகம் சென்ற பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா மற்றும் சில பாஜக எம்எல்ஏக்கள் அங்கே பணியாற்றக்கூடிய 17 முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஊழியர்கள் பெயரை மட்டும் ஊடகத்துக்கு முன்பாக வாசித்துக் காட்டி, இவர்கள்தான் முறைகேட்டில் ஈடுபட்டார்கள் என்று குற்றம் சாட்டினார். ஆனால் போலீஸ் விசாரணையில் இந்த குற்றச்சாட்டு பொய்யானது என்பது உறுதி செய்யப்பட்டு குற்றம்சாட்டப்பட்டவர்கள் நிரபராதிகள் என்பது நிரூபணமானது.
இருப்பினும், தற்போது படுக்கை ஒதுக்கீடு செய்யும் விதிமுறைகளை மாற்றி அமைத்துள்ளது பெங்களூர் மாநகராட்சி. அதாவது, மருத்துவமனை நிர்வாகங்கள் ஒதுக்கக்கூடிய படுக்கை அளவுகள் வெகுவாக குறைந்து விட்டன. கால்சென்டர் மூலமாக, அதாவது மாநகராட்சி மூலமாக படுக்கை ஒதுக்கப்படும் நோயாளிகள் மட்டும்தான் படுக்கை வசதி பொறுக்க கூடிய சூழ்நிலை இருக்கிறது. மேலும் முறைகேடுகள் நடக்காமல் தருகிறேன் என்ற பெயரில், பல நடைமுறைகள் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாகவும் தாமதம் ஏற்படுகிறது.
படுக்கை புக் செய்ய, வார் ரூமில் வேலை பார்க்கும், ஒவ்வொரு ஊழியருக்கும், இப்போது, தனித்தனியாக பாஸ்வேர்டு கொடுக்கப்பட்டுள்ளது. அந்த லாகின் ஐடி மூலமாகத்தான், ஊழியர்கள் படுக்கையை புக் செய்ய முடியும். மேலும் புக் செய்த படுக்கைகளை, ஊழியர்கள் தாங்களாக ரிலீஸ் செய்ய முடியாது. இதன் காரணமாக, நோயாளிகளை மருத்துவமனைக்கு செல்லாவிட்டாலும், படுக்கையை இன்னொருவருக்கு ஒதுக்கீடு செய்வதில் காலதாமதம் ஏற்படுகிறது.
வார் ரூமில் பணியாற்றும் சுனில் குமார் என்பவர் இதுபற்றி கூறுகையில், வெளியிலிருந்து பார்ப்பதற்கு புதிய மாற்றங்கள் வந்துள்ளது நல்லது என்று சிலர் சொல்லக்கூடும். ஆனால் நடைமுறையில் அப்படி இல்லை. மாநகராட்சி அலுவலகம் மூலமாக படுக்கை புக் செய்யப்பட்ட பிறகு மருத்துவமனையில் உள்ள நிர்வாகம் அதற்கு அங்கீகாரம் அளிக்க வேண்டும்.
இப்படி எல்லாம் நடை முறைகள் வந்துள்ளதால் காலதாமதம் ஏற்படுகிறது. ஐசியு படுக்கை வசதி தேவைப்படும் அளவுக்கு மோசமாக உடல்நிலை கொண்ட நோயாளிகளுக்கு கூட படுக்கை ஒதுக்கீடு செய்வதில் 24 மணி நேரம் வரை தாமதம் ஏற்படுகிறது. இதன் காரணமாக நோயாளிகள் நிலைமை கவலைக்கிடமாக மாறி விடுகிறது என்று தெரிவித்தார்.
தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் லட்சுமணன் என்பவர் கூறுகையில், எங்களது தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலமாக மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு உதவி செய்வதற்காக தன்னார்வலர்கள் சென்றிருக்கிறார்கள். இப்போதெல்லாம் படுக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டதாக தகவல் வந்த பிறகும் சுமார் ஆறு மணி நேரம் முதல் 10 மணி நேரம் வரை அவர்களுக்கு அட்மிஷன் செய்வதற்கு நேரம் தாமதமாகிறது. அவசர காலத்தில் நோயாளிகள் நேரடியாக மருத்துவமனைக்கு சென்று அட்மிட் செய்து கொள்வது நல்ல நடைமுறையாக இருந்தது. ஆனால் மருத்துவமனைகள் படுக்கையை ஒதுக்கீடு செய்வதை குறைக்க வைத்துவிட்டு மாநகராட்சி மூலமாக பதிவு செய்யப்படுவதால் நோயாளிகள் சிகிச்சைக்கு சேர்ப்பதில் மிகவும் தாமதம் ஏற்படுகிறது என்று குற்றம் சாட்டுகிறார்.
கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க கூடிய ஒரு மிகப்பெரிய மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர் ஒருவர் இதுபற்றி கூறுகையில், நேரடியாக மருத்துவமனைக்கு வந்து சிகிச்சைக்கு சேர வேண்டும் என்று விரும்பினால் அவர்களிடமும் நிறைய விசாரணைகள் நடத்தப்படுகிறது. எமர்ஜென்சி நிலையில் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு முன்பெல்லாம் உடனடியாக சிகிச்சை வழங்க முடிந்தது, ஆனால், இப்போது அரசு அனுமதி கொடுத்தால்தான் படுக்கை ஒதுக்கீடு செய்ய முடிகிறது.
இதன் காரணமாக மூச்சுத் திணறல் உள்ளிட்ட பிரச்சினைகளோடு வரும் நோயாளிகளுக்கு கூட உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சையைத் தொடங்க முடியவில்லை. கொரோனா பாசிட்டிவ் என்று ரிப்போர்ட் இருந்தால்தான் மருத்துவமனைகளில் படுக்கை ஒதுக்கீடு செய்ய முடிகிறது. ஆனால் பரிசோதனை எடுத்து சில நாட்களுக்கு பிறகு தான் அந்த முடிவுகள் வெளியாகின்றன . சில நேரங்களில் முடிவுகள் தவறாக கூட காட்டுகின்றன. ஆனால் நோயாளிக்கு அனைத்து அறிகுறிகளும் இருந்தாலும், மூச்சு திணறல் இருந்தாலும் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்க முடியாத சூழ்நிலையில் சிக்கிக் கொண்டிருக்கிறோம். என்னுடன் வேலை பார்க்கும் நர்சுக்கு கூட படுக்கை ஒதுக்க முடியவில்லை. இவ்வாறு அந்த செவிலியர் கூறுகிறார்.












Click it and Unblock the Notifications