அன்று லாலிபாப் சாப்பிடும் லிட்டில் பாய்.. இன்று எங்க வீட்டு பையன்.. விஜய் ஜெயிச்சதும் டோனை மாற்றிய பிரேமலதா
சென்னை: "விஜய் எப்போதும் எங்க பக்கத்து வீட்டு பையன் தான்.. அவருக்கு மனப்பூர்வமாக வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன்" என்று பிரேமலதா விஜயகாந்த் தனது டோனை மாற்றி பேசியுள்ளார். தேர்தலுக்கு முன்பு பேசிய பிரேமலதா, "நீங்க லாலி பாப் சாப்பிடும் லிட்டில் பாய், சினிமாவில் ஹீரோவாக வந்து டயலாக் பேசுவது போல் அரசியலில் வெற்றி பெற முடியாது" என கடுமையாக விமர்சித்து இருந்தார்.
நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. திமுக கூட்டணி 73 இடங்களிலும், அதிமுக கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றது.

விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி
திமுக கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்தித்த தேமுதிக 10 தொகுதிகளில் போட்டியிட்டு விருத்தாசலம் தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. தொடர்ந்து வெற்றி சான்றிதழை வாங்கிய பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
விருத்தாசலம் தொகுதி மக்களுக்கு முதலில் என் பணிவான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வெற்றியை கேப்டன் விஜயகாந்த்துக்கும், விருதகிரீஸ்வரருக்கும், விருத்தாசலம் மக்களுக்கும் தெரிவித்துக்கொள்கிறேன். விருத்தாசலம் மக்களுக்கு என்னென்ன வாக்குறுதிகள் கொடுத்தேனோ அதை எல்லாம் அப்படியே நிறைவேற்றுவேன்.
அனைவருக்கும் நன்றி
புதிதாக வெற்றி பெற்ற கட்சிக்கு வாழ்த்துக்கள். எங்கள் வாழ்த்து எப்போதும் இருக்கும். மதசார்பற்ற கூட்டணிக்கும், திமுக தலைவர் ஸ்டாலினுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நாங்க ஆட்சியில் இருந்திருந்தால் சொன்னதைவிட அதிக வாக்குறுதிகளை நிறைவேற்றி இருப்பேன். எனினும் ஆட்சியில் இல்லாவிட்டாலும் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம்.
புதிதாக ஆட்சி அமைப்பவர்களுக்கு எனது முழுமையான வாழ்த்துக்கள். மதசார்பற்ற கூட்டணி சார்பில் தான் நான் இங்கு போட்டியிட்டு வெற்றி பெற்று இருக்கிறேன். இந்த வெற்றிக்கு பாடுபட்ட அனைவருக்கும் நன்றி. இந்த வெற்றியை மதசார்பற்ற கூட்டணிக்கும் அர்ப்பணிக்கிறேன்" என்றார்.
விஜய்க்கு ஆதரவு கொடுப்பீங்களா?
அப்போது செய்தியாளர்கள் தமிழகத்தில் விஜய் தனித்து 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளார். எனினும் ஆட்சி அமைக்க 10 பேர் ஆதரவு வேண்டும். இதனால் நீங்கள் ஆதரவு கொடுப்பீர்களா என கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த பிரேமலதா, "நாங்க வந்து மதசார்பற்ற கூட்டணி தான். இதில் உறுதியாக இருக்கிறோம். எனினும் விஜய் வந்து எப்போதும் எங்க வீட்டு பையன் தான்.
விஜய் ஒன்னும் எங்களுக்கு புதுசு இல்லை.. ஆரம்பத்தில் இருந்தே அவரை பார்த்து இருக்கிறோம். எங்க பக்கத்து வீட்டு பையன் தான்.. கேப்டனுடன் ரொம்ப அதிகம் இருந்திருக்கிறார். புதிதாக ஆட்சி அமைக்க இருப்பதனால் அவருக்கு மனப்பூர்வமாக வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன். நல்லபடியாக ஆட்சி செய்யட்டும். மக்களுக்கு நல்லது பண்ணட்டும்" என்று பேசினார்.
லாலி-பாப் சாப்பிடும் லிட்டில் பாய்
முன்னதாக தேர்தல் பிரசாரத்தின் போது தவெக தலைவர் விஜய்யை பிரேமலதா விஜயகாந்த் கடுமையாக விமர்சித்து பேசினார். பிரேமலதா பேசுகையில், "புதிதாக ஒரு தம்பி அரசியலுக்கு வந்திருக்கிறார். அரசியலில் நீங்கள் ஹீரோ இல்லை, இப்போதும் லாலி-பாப் சாப்பிடும் லிட்டில் பாய் தான். சினிமாவில் ஹீரோவாக வந்து டயலாக் பேசுவது போல் அரசியலில் வெற்றி பெற முடியாது.
அரசியல் களம் மிகவும் கடினமானது என்பதை அவர் உணர வேண்டும். எதிராளிகளை எப்போதும் குறைத்து மதிப்பிடாதீர்கள். முதலில் தேர்தல் களத்தில் நின்று உங்கள் வாக்கு வங்கியை நிரூபியுங்கள், அதன் பிறகு அரசியல் வசனங்களை பேசலாம்" என்று கடுமையாக விமர்சித்து இருந்தார் பிரேமலதா. தேர்தலில் விஜய் வெற்றி பெற்ற நிலையில் மேற்கண்டவாறு பிரேமலதா பேசியுள்ளார்.














Click it and Unblock the Notifications