அமைச்சர் பதவி வேண்டாம்! பாஜக தலையீடு கூடாது என்பதால் விஜய்க்கு ஆதரவு!-கம்யூனிஸ்ட் கட்சிகள் விளக்கம்
சென்னை: திமுக கூட்டணியில் இருந்தும் ஏன் விஜய்க்கு ஆதரவளித்தோம் என்பது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் விளக்கமளித்துள்ளனர்.
சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சிபிஎம் மாநில செயலாளர் பெ. சண்முகம் கூறியதாவது, "விஜய் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் மாநில குழுவில் நாங்கள் ஆலோசித்தோம். 10ம் தேதிக்குள் பெரும்பான்மை இல்லையெனில், ஆளுநர் ஆட்சி அமலாக்கப்படும். பெரிய கட்சி என்பதன் அடிப்படையில் ஆளுநர் விஜய்யை ஆளுநர் அழைத்திருக்க வேண்டும். ஆனால், அழைக்கவில்லை.

தமிழ்நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை அமைக்கவிடாமல் பாஜக முயற்சித்து வருகிறது. இதை தடுக்க, கொல்லைப்புறம் வழியாக பாஜக நுழைவதை தடுக்க தவெக ஆட்சி அமைக்க சிபிஐ, சிபிஎம் ஆதரவளிப்பது என தீர்மானித்துள்ளோம். இன்னொரு தேர்தலை தவிர்க்கவும், ஆளுநர் ஆட்சியை தடுக்கவும் இந்த முடிவை நாங்கள் எடுத்திருக்கிறோம்.
நாங்கள் அமைச்சரவையில் பங்கேற்க மாட்டோம். அதே நேரம் வெளியிலிருந்து நிபந்தனையற்ற ஆதரவை கொடுப்போம். திமுக கூட்டணியுடன் மதச்சார்பற்ற கொள்கை செயல்பாடுகள் தொடரும்" என்று கூறியிருந்தார்.
தொடர்ந்து பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் கூறுகையில், "மக்களின் அதிகாரத்திற்கு மதிப்பளித்து நாங்கள் விஜய்க்கு ஆதரவு தெரிவித்திருக்கிறோம். ஆதரவு மட்டுமே. கூட்டணி கிடையாது" என்று கூறியுள்ளார்.
அறிக்கை வெளியிட்ட சிபிஎம்
இது குறித்து விடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பில், "தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் எந்தகட்சிக்கும் பெரும்பான்மை இடங்கள் கிடைக்காத நிலையில், தமிழக வெற்றி கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இப்பின்னணியில் ஜோசப் விஜய் அவர்கள் ஆட்சி அமைப்பதற்கான உரிமை கோரி உள்ள நிலையில், அவரை ஆட்சி அமைக்குமாறும், சட்டமன்ற அவையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறும் முடிவெடுக்க வேண்டிய ஆளுநர், ஜோசப் விஜய்யை அழைக்க மறுத்து இருப்பது ஜனநாயக விரோத நடவடிக்கை ஆகும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு சுட்டிக்காட்டுகிறது.
ஆளுநர், அரசியல் பாரபட்சத்தோடு செயல்பட்டு வருவதும், ஏற்கனவே உள்ள மரபுகள், நீதிமன்ற தீர்ப்புகள், அரசியல் சாசன கோட்பாடுகளை மீறி இருப்பதும் முற்றிலும் ஏற்க இயலாத நடவடிக்கை ஆகும்.
தமிழக வெற்றிக் கழகம், ஆளுநரின் இத்தகைய நடவடிக்கையை வெளிப்படையாக கண்டிப்பதே மாநில உரிமைகள், கூட்டாட்சி கோட்பாடு ஆகியவற்றில் அக்கட்சி கொண்டுள்ள உறுதிப்பாட்டை வெளிப்படுத்துவதாக இருக்கும் என்பது ஜனநாயக எண்ணம் கொண்டோரின் அழுத்தமான கருத்தும், எதிர்பார்ப்பும் ஆகும் என சிபிஐ(எம்) மாநிலக்குழு சுட்டிக் காட்டுகிறது.
-இதற்கிடையில் திமுக - அஇஅதிமுக இடையில் பேச்சுவார்த்தை நடப்பதாகவும், எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆட்சி அமைக்க முயற்சிகள் நடப்பதாகவும் வரும் செய்திகள் மக்களின் தீர்ப்பிற்கு முற்றிலும் எதிரானதாகும். இதை ஏற்க இயலாது.
ஆளுநரின் நடவடிக்கை தமிழ்நாட்டில் சட்டமன்றத்தை முடக்கி குடியரசுத் தலைவர் ஆட்சியை புகுத்துவதற்கும், மக்களின் தீர்ப்புக்கு மாறாக குதிரை பேரம் நடந்தேறுவதற்கும், அரசியல் சந்தர்ப்பவாதத்திற்கும் வழிவகுத்து விடக் கூடாது.
இது குறித்து விவாதித்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு, தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி திணிக்கப்படுவதையும், கொல்லைப் புற வழியாக பாஜக அதிகாரத்தை கைப்பற்ற முயற்சிப்பதையும் அனுமதிக்கக் கூடாது என்று முடிவு செய்தது. இத்தகைய பின்புலத்தில் திரு ஜோசப் விஜய் அவர்கள் கடிதம் மூலம் கேட்டுக்கொண்ட அடிப்படையில் அரசு அமைக்க ஆதரவை வழங்குவது என்றும், அதன் மூலம் ஆளுநரின் ஜனநாயக விரோத நடவடிக்கையை முறியடித்து மக்கள் தீர்ப்பிற்கான மரியாதையை உறுதி செய்வது என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தீர்மானித்துள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் இருவரும் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் போது விஜய் அரசுக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள். அதேநேரத்தில் அமைச்சரவையில் பங்கேற்காமல் வெளியிலிருந்து ஆதரவு அளிப்பது என்றும் மாநிலக்குழு முடிவு செய்துள்ளது.
புதிய அரசாங்கம் மதச்சார்பின்மை, எளிய மக்களை உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சி, கூட்டாட்சி, சமூகநீதி கோட்பாடுகளை உயர்த்திப் பிடித்து மக்களின் விருப்பத்தை நிறைவேற்றுகிற வகையில் செயல்பட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக் குழு வலியுறுத்துகிறது" என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications