சலான் இருக்கா கவனம்.. இளைஞரை தூக்கிய பெங்களூர் போலீஸ்! பாவம் இனி அவரால் பைக்கில் கை வைக்கவே முடியாது
பெங்களூர்: கர்நாடக தலைநகர் பெங்களூரில் மொத்தம் 99 சலான்களுக்கு அபராதம் செலுத்தாமல் நிலுவையில் வைத்திருந்த பைக் உரிமையாளரைப் பெங்களூர் போலீசார் தட்டி தூக்கியுள்ளனர்.
இந்தியாவிலேயே மிக மோசமான டிராபிக் நெரிசலைக் கொண்ட நகரங்களில் ஒன்றாகப் பெங்களூர் இருக்கிறது. இதற்கு மோசமான பொது போக்குவரத்தும், அதிகப்படியான வாகனங்கள் சாலைகளில் இருப்பதுமே முக்கிய காரணமாகும்,

போக்குவரத்து நெரிசலைச் சரி செய்யப் பெங்களூர் போலீசார் பல்வேறு நடவடிக்கையை எடுத்து வருகின்றனர். மறுபுறம் போக்குவரத்து விதிமீறல்களை மீறுவதைச் சிலர் வாடிக்கையாகவே வைத்துள்ளனர். விதிகளை மீறுவது அவர்கள் உயிருக்கு மட்டும் ஆபத்து இல்லை. எதிரே வருவோருக்கும் ஆபத்தையே விளைவிக்கும்.
பெங்களூர் போலீசார்: இதனால் போக்குவரத்து விதிமீறல்களை போலீசார் கவனமாகக் கண்காணித்து, விதிகளை மீறுவோருக்கு அபராதங்களை விதித்து வருகின்றனர். இதற்கிடையே மொத்தம் 99 சலான்களை நிலுவையில் வைத்திருந்த டூவீலரை பெங்களூர் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், அந்த பைக் வாகன உரிமையாளரையும் கைது செய்தனர். அவர் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்த போலீசார், அவரது ஓட்டுநர் உரிமத்தையும் ரத்து செய்தனர்.
இது குறித்து பெங்களூர் போக்குவரத்து டிசிபி தனது எக்ஸ் பக்கத்தில், "99 போக்குவரத்து விதிமீறல்களுடன் ₹56000 அபராத தொகையை நிலுவையில் வைத்திருந்த டூவீலர் வாகனம் ஜப்தி செய்யப்பட்டுள்ளது. மேலும் டூ வீலர் உரிமையாளர் மீது மைக்கோ லேஅவுட் டிராஃபிக் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்" என்று பதிவிட்டுள்ளார். பெங்களூர் டிராபிக் போலீசாரின் இந்த நடவடிக்கையைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.
டிரைவிங் லைசென்ஸ் ரத்து: அதன்படி கர்நாடகாவின் கூடுதல் காவல்துறை இயக்குநர் ஜெனரல் அலோக் குமாரும் போலீசார் நடவடிக்கையைப் பாராட்டியுள்ளார். எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு, வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அலோக் குமார், இந்த நபரின் டிரைவிங் லைசென்ஸும் ரத்து செய்யப்படுவதாகத் தெரிவித்தார்.மேலும், யாரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை என்றும் தவறு செய்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.
பெங்களூரில் இதுபோல சலான்களுக்கு அபராதம் செலுத்தாமல் இருக்கும் நபர்களைப் பிடிக்கும் நடவடிக்கைகளையும் போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதம், இதேபோல அபராதத்தைச் செலுத்தாமல் இருந்த மற்றொரு நபரைப் பெங்களூரு போலீசார் பிடித்தனர். அவர் மொத்தம் 46 விதிமீறல்களுக்கான அபராதத் தொகையைச் செலுத்தாமல் இருந்தார். அந்த இடத்திலேயே அவரிடம் இருந்து போலீசார் அபராத தொகையை வசூல் செய்தனர். அவரிடம் இருந்து ரூ. 13,850 அபராதமாக வசூலிக்கப்பட்டது.
கர்நாடகாவில் தான் அதிகம்: கடந்த ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 9 வரை கர்நாடகாவில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகபட்ச அபராத தொகைகள் வசூலிக்கப்பட்டன. ஒட்டுமொத்தமாக நாட்டில் வழங்கப்படும் சலான்களில் 50 சதவீத சலான்கள் கர்நாடகாவில் இருந்து தரப்படுவது குறிப்பிடத்தக்கது.
பெங்களூரில் போக்குவரத்து விதிமீறலைக் கண்டறிந்து சலான்களை வழங்கச் சலான்களை வழங்க ITMS என்ற அமைப்பை போலீசார் அறிமுகப்படுத்தினர். இந்த ஏஐ கருவி அதிவேகமாகச் செல்வது சிக்னலை மதிக்காமல் செல்வது, ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவது, வாகனம் ஓட்டும்போது மொபைல் போன்களைப் பயன்படுத்துதல் போன்ற விதிமீறல்களைக் கண்டறிந்து அபராதம் விதிக்கும். இதன் பின்னர் போக்குவரத்து விதிமீறல் குறையும் என போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications