அப்பா ஷாப்பிங் அழைத்து செல்லாத கோபமாம்.. தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட 5ம் வகுப்பு மாணவி
பெங்களூரு: பெற்றோர் தன்னை ஷாப்பிங் அழைத்து செல்லாததால் மனமுடைந்த 5-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெங்களூருவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒருகாலத்தில் மிகவும் அரிதாக காணப்பட்ட தற்கொலை சம்பவங்களை இப்போது அன்றாடம் கேள்விப்பட முடிகிறது. பைக் வாங்கித் தராததால் 10-ம் வகுப்பு மாணவன் தற்கொலை, ஆசிரியர் திட்டியதால் 8-ம் வகுப்பு மாணவி தற்கொலை போன்ற செய்திகள் தினசரி உலா வந்து கொண்டிருக்கின்றன. சாதாரண தோல்வியையும், ஏமாற்றத்தையும் கூட இன்றைய தலைமுறையினரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதையே இச்சம்பவங்கள் உணர்த்துகின்றன.

இந்நிலையில், பெங்களூருவில் இதுபோன்ற சம்பவம் தான் நடைபெற்றுள்ளது. பெங்களூருவின் சாம்ராஜ்நகர் காவல் எல்லைக்குட்பட்ட அனந்தபுரா பகுதியைச் சேர்ந்த கரண் - லலிதா தம்பதியருக்கு வைஷாலி (11) உட்பட மூன்று பெண் பிள்ளைகள் உள்ளனர். இவர்களில் வைஷாலி அங்குள்ள தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார். தான் கூலி வேலை செய்து வந்த போதிலும், மூன்று பிள்ளைகளையும் பெரிய தனியார் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்துள்ளார் கரண். அதுதவிர, அவர்களுக்கு தினமும் ட்யூசன், பள்ளிக்கு சென்று வர வேன் போன்ற வசதிகளையும் கரண் செய்திருக்கிறார்.
இதனிடையே, அடுத்த மாதம் அவர்களின் சொந்த ஊரில் கோயில் திருவிழா வருவதால் பிள்ளைகள் அனைவருக்கும் புத்தாடை வாங்கி தர அவர் முடிவு செய்தார். ஆனால் அந்த சமயத்தில் வைஷாலி மட்டும் வீட்டில் இருந்ததால் கடந்த ஞாயிற்றுக்கிழமை அவரை அழைத்துச் சென்று கரண் புது துணிகளை எடுத்துக் கொடுத்துள்ளார்.
அதன் பின்னர், அடுத்த நாளான திங்கள்கிழமை மற்ற இரண்டு பிள்ளைகளுக்கு புத்தாடை வாங்குவதற்காக கரணும், மனைவி லலிதாவும் புறப்படடுள்ளனர். ஆனால், தன்னையும் ஷாப்பிங் அழைத்து செல்ல வேண்டும் என்றும், புதிய துணி வாங்கிக் கொடுக்க வேண்டும் எனவும் வைஷாலி அடம்பிடித்துள்ளார். ஆனால், இதனை ஏற்காத பெற்றோர், வைஷாலியை ஷாப்பிங் அழைத்து செல்லவில்லை. பின்னர் ஷாப்பிங் முடித்துவிட்டு இரவு வந்து பார்க்கும் போது வைஷாலி வீட்டில் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். இதனை பார்த்த அவரது பெற்றோர் கதறி அழுதனர். இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் அங்கு வந்து வைஷாலி உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஷாப்பிங் அழைத்து செல்லாததால் 5-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டது பெங்களூருவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications