நடத்தையில் சந்தேகம்.. காதல் மனைவியை பழிவாங்க வாயில் எதை ஊற்றி இருக்காரு பாருங்க.. கொடூர கணவன் கைது
பெங்களூர்: நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கொலை செய்ய காதல் கணவர் செய்த சம்பவம் கர்நாடகாவை அதிர வைத்துள்ளது. தற்போது கணவரை போலீசார் கைது செய்துள்ள நிலையில் அவரது மனைவிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பெங்களூர் புறநகர் மாவட்டம் நெலமங்களா அருகே உள்ள ஹாரோகியாத்தனஹள்ளி கிராமத்தில் வசித்து வருபவர் சித்தலிங்க சுவாமி (வயது 38). இவர் தச்சு தொழிலாளி. இவரது மனைவி பெயர் மஞ்சுளா. இவருக்கு 35 வயது ஆகிறது.

இவர்கள் 2 பேரும் ராய்ச்சூரை சேர்ந்தவர்கள். காதலித்து திருமணம் செய்த பிறகு அவர்கள் ஹாரோகியாத்தனஹள்ளியில் வந்து வசித்து வருகின்றனர். இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை.
இந்நிலையில் தான் சித்தலிங்க சுவாமி, மஞ்சுளாவை கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். வீட்டில் படுத்து தூங்கிய மஞ்சுளாவின் வாயை திறந்து மரப்பலகைகளை ஒன்றாக இணைக்க பயன்படுத்தும் பசையை ஊற்றி உள்ளார். ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த மஞ்சுளா எழும்பவில்லை. சத்தம் எதுவும் போடவில்லை. இதனால் அங்கேயே இருந்த சித்தலிங்க சுவாமி தனது மனைவி இறந்து விட்டதாக நினைத்தார்.
இதையடுத்து அவர் மாதநாயக்கனஹள்ளி போலீஸ் நிலையத்துக்கு சென்று சரணடைந்தார். ‛‛நடத்தையில் சந்தேகப்பட்டு எனது மனைவியை கொன்று விட்டேன். எனது மனைவி தூங்கியபோது மரப்பலகையை ஒட்ட பயன்படுத்தும் பசையை வாயில் ஊற்றி கொலை செய்துவிட்டேன். இப்போது மூச்சுத்திணறி இறந்துவிட்டார்'' என்று கூறியுள்ளார். இதை கேட்டு ஷாக் ஆன போலீசார் உடனடியாக ஆம்புலன்சுடன் அவரை அழைத்து கொண்டு வீட்டுக்கு சென்றனர்.
போலீசார் சென்று பார்த்தபோது மஞ்சுளா சாகவில்லை. அவர் மயங்கிய நிலையில் தான் இருந்தார். உடனடியாக போலீசார் மஞ்சுளாவை மீட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மஞ்சுளாவுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். அவரது வாயில் இருந்த பசையை முற்றிலுமாக டாக்டர்கள் அகற்றினர். இதுபற்றி மஞ்சுளா சார்பில் போலீசில் புகார் செய்யப்பட்டது. அந்த புகாரை தொடர்ந்து போலீசார் சித்தலிங்க சுவாமி மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
கைதான சித்தலிங்க சுவாமியிடம் விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அந்த விசாரணையில் திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: சித்தலிங்க சுவாமி - மஞ்சுளா காதல் திருமணம் செய்தனர். குழந்தை இல்லை. சமீபகாலமாக சித்தலிங்க சுவாமிக்கு, தனது காதல் மனைவி மஞ்சுளாவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. இந்த சண்டையின் காரணமாக மனைவி மஞ்சுளாவை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அவர் தூங்கும்போது மூச்சை நிறுத்தி கொலை செய்ய முடிவு செய்தார். ஆனால் அந்த முயற்சி கைகூடவில்லை.
இதனால் மரப்பலகைகளை ஒன்றாக இணைக்கும் பசையை எடுத்து மனைவியின் வாயில் ஊற்றியுள்ளார். இதில் மனைவி மயங்கினார். அதிர்ஷ்டவசமாக நாங்கள் ஆம்புலன்சுடன் சென்றோம். ஆம்புலன்ஸில் சூடுநீரை அவருக்கு கொடுத்து வாயில் இருந்த பசையின் வீரியத்தை இழக்க வைத்தோம். இல்லாவிட்டால் மஞ்சுளாவுக்கு வாய் பேச முடியாத நிலை ஏற்பட்டு இருக்கும். இந்த வழக்கில் சித்தலிங்க சுவாமியை கைது செய்துள்ளோம். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது'' என்றனர்.












Click it and Unblock the Notifications