இலவச மின்சாரம் இல்லையா? ஜீரோ பில்லுக்கு பதிலாக வந்த ரசீது! பெங்களூரில் பெரிய குழப்பம்! என்னாச்சு
பெங்களூரு: பெங்களூரில் ஜூலை 1ஆம் தேதி முதல் 200 யூனிட் மின்சாரம் இலவசம் என்று அறிவிக்கப்பட்ட பிறகும், ஜூலை 15ம் தேதி வரையிலான பயன்பாட்டிற்குக் கட்டணம் வசூலிக்கப்பட்ட சம்பவம் இணையத்தில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
கர்நாடகாவில் இந்தாண்டு நடந்த சட்டசபைத் தேர்தலைக் காங்கிரஸ் கட்சி 5 முக்கிய வாக்குறுதிகளை முன்வைத்து எதிர்கொண்டது. அதில் முக்கியமானது மாநிலத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்பதாகும்.
இந்தத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. சித்தராமையா முதல்வராகவும் டிகே சிவக்குமார் துணை முதல்வராகவும் பதவியேற்றனர். சொன்னபடியே இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இலவச மின்சாரம்: குறிப்பாக அனைத்து வீடுகளுக்கும் முதல் 200 யூனிட் மின்சாரம் இலவசம் என்ற வாக்குறுதிக்கு அங்கே மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. இது அங்குள்ள ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்குப் பெரியளவில் உதவும் எனச் சொல்லப்பட்டது. இந்த க்ருஹ ஜோதி திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
நகர்ப்புறம், கிராமப்புறம் என எங்கு இருந்தாலும் முதல் 200 யூனிட் மின்சாரம் இலவசமாகும். இதற்கிடையே இந்தத் திட்டம் தான் இப்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது. அதாவது இந்தத் திட்டம் கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. அதன்படி ஜூலை மாதத்தில் முதல் 200 யூனிட் வரையிலான மின்சாரத்திற்கு அனைவருக்கும் ஜீரோ என்றே பில் வர வேண்டும். ஆனால், அதற்கு மாறாக ஜூலை மாதத்தில் 15ஆம் தேதி வரை அனைத்து வீடுகளுக்கும் பெங்களூரு மின்சார விநியோக நிறுவனம் (பெஸ்காம்) பில் போட்டுள்ளது சர்ச்சையாகியுள்ளது.
என்ன நடந்தது: அம்மாநில மின்சார துறை அமைச்சர் கேஜே ஜார்ஜ் கூட பெங்களூரு மின்சார விநியோக நிறுவனத்தின் இந்த நடவடிக்கைக்கு அதிருப்தி தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கையை ஏற்றுக் கொள்ளவே முடியாது எனத் தெரிவித்த அவர், இது குறித்து உயர் அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டுள்ளார். மேலும், ஜூலை மாதத்திற்கு எந்த நுகர்வோருக்கும் முதல் 200 யூனிட்டிற்கு பில் போடக் கூடாது என்றும் அதற்கு ஜீரோ பில் மட்டும் வழங்குமாறும் அறிவுறுத்தியுள்ளார்.
இருப்பினும், வழக்கமான பில்லிங் முறை என்பது ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 15ஆம் தேதி வரை இருப்பதாலேயே நுகர்வோருக்குப் பில்லை போட்டதாக பெஸ்காம் தெரிவித்துள்ளது. மூத்த அதிகாரிகள் சிலர் கூறுகையில், "எப்போதும் 15 டூ 15 என்ற முறையிலேயே பில் கணக்கிடுவோம். இதனால் தான் இப்படி நடந்துவிட்டது. அடுத்த மாதம் முதல் முறையாக 200 யூனிட் கீழ் பயன்படுத்துவோருக்கு ஜீரோ பில் வழங்கப்படும்" என்றார்.

அமைச்சர் டென்ஷன்: இருப்பினும், ஜூலை மாதத்திற்கான பில் வழங்கப்பட்டது தவறானது என்று அம்மாநில மின்சார துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், "மக்களிடம் நாங்கள் ஒன்றை வாக்குறுதியாக அளித்திருந்தோம். அதில் இருந்து எங்களால் பின்வாங்க முடியாது. எனவே, ஜூலை 1ஆம் தேதிக்கு முன்பு வரை இருக்கும் பயன்பாட்டிற்கு மட்டும் பில் போட வேண்டும் ஜூலை 1 முதல் இலவச மின்சாரம் தான். என்ன காரணம் சொன்னாலும் ஜூலை 15 வரையிலான காலகட்டத்திற்கு பில் போடக் கூடாது" என்றார்.
மேலும், பில்லிங் சைக்கிளை 15 டூ 15 என்பதற்குப் பதிலாக ஒவ்வொரு மாதமும் தொடக்கத்தில் பயன்பாட்டைக் கணக்கிடும் வகையில் பில்லிங் சைக்கிளையும் மாற்ற அமைச்சர் உத்தரவிட்டதாகத் தெரிகிறது. ஜூலை 1 முதல் மின்சாரம் இலவசம் எனக் கர்நாடக அரசு அறிவித்திருந்த நிலையில், ஜூலை 15 வரையிலான பயன்பாட்டைக் கணக்கிட்ட பெஸ்காம் நடவடிக்கையால் அங்கே பெரும் குழப்பம் ஏற்பட்டது. பலரும் இணையத்தில் தங்கள் அதிருப்தியைப் பதிவிட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications