தண்ணீர் தட்டுப்பாடு.. தவிக்கும் பெங்களூர் மக்கள்.. கார்கள் வைத்து இருப்பவர்களுக்கு புது சிக்கல்!
பெங்களூர்: கர்நாடக மாநிலம் பெங்களூரில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதன் காரணமாக அரசு பல்வேறு சிக்கன நடைமுறைகளை அமல்படுத்தி வருகிறது. அந்த வகையில் குடிநீரை கட்டுமான பணிகள், தோட்ட பராமரிப்பு போன்ற பணிகளுக்கு பயன்படுத்தினால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என கர்நாடக குடிநீர் வடிகால் வாரியம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் ஐடி தலைநகரமாக திகழும் பெங்களூரில் கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை சரிவர பெய்யவில்லை. இதன் காரணமாக பெங்களூர் நகரத்தில் தற்போது கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. பெங்களூர் நகரில் உள்ள 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆழ்குழாய் கிணறுகள் நீரின்றி வறண்டு காணப்படுகின்றன. இதனால், ஆழ்குழாய்களை பயன்படுத்தி தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து வந்தவர்கள் தற்போது டேங்கர் லாரிகளை எதிர்பார்த்து உள்ளனர்.

பெங்களூர் புறநகரில்தான் தண்ணீர் தட்டுப்பாடு மிக மோசமாக உள்ளது. மகாதேவபுரா, பொம்மனஹள்ளி, பெங்களூர் தெற்கு, ராஜராஜேஸ்வரிநகர், யஷ்வந்தபுரா உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு அதிகமாக உள்ளது. இதனால் காலிக்குடங்களுடன் டேங்கர் லாரிகளை எதிர்பார்த்து நிற்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
தண்ணீர் கட்டணம் உயர்வு: வாடகை வீடுகளில் வசிப்பவர்களோ.... வீடுகளை காலி செய்துவிட்டு சொந்த ஊருக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். குடிநீர் தட்டுப்பாடு காரணமாக தனியார் பள்ளிகள், பயிற்சி மையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக நகரின் நகரின் பல சாலைகளில் தண்ணீர் டேங்கர் வாகனங்கள் அதிகளவில் தென்படுகின்றன.
வழக்கமான நாட்களில் தண்ணீர் டேங்கர் கட்டணம் ரூ.700 முதல் ரூ.800 வரை வசூலிக்கப்படுகிறது. தற்போது தண்ணீர் தேவை அதிகரித்துள்ளதால், கட்டணம் ரூ.1,500 முதல் ரூ.1,800 வரை அதிகரித்துள்ளதாக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் கூறினார். மேலும் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், டேங்கர் மூலம் தண்ணீர் வினியோகிக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
தண்ணீருக்கு மட்டும் 9 ஆயிரம்: அதன்படி சில பகுதிகளில் டேங்கர் மூலம் மாநகராட்சி சார்பில் தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது. அடுக்குமாடி குடியிருப்புகளிலும் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறதாம். தண்ணீருக்கு மட்டும் மாதம் கிட்டத்தட்ட 9 ஆயிரம் செலவாகிறது என அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ஒருவர் வேதனையுடன் தெரிவித்தார். கேஆர்எஸ். அணை நீர் தான் பெங்களூருவுக்கு கொண்டு வரப்பட்டு வினியோகம் செய்யப்படுகிறது என்றும் ஆனால் கோடை காரணமாக அணையில் நீர் இருப்பு குறைந்துவிட்டது.
5 ஆயிரம் அபராதம்: அதனால் இந்த தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது சென்று அதிகாரிகள் கூறினார். இதன் காரணமாக தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த கர்நாட்க அரசு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இதற்கிடையே குடிநீரை தோட்ட பராமரிப்புக்கோ, கட்டுமான பணிகளுக்கோ பயன்படுத்தக்கூடாது என்று கர்நாடக குடிநீர் வடிகால் வாரியம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
இது தொடர்பாக கர்நாடக குடிநீர் வடிகால் வாரியம் கூறியிருப்பதாவது:- "குடிநீரை வைத்து கார்களை கழுவவோ.. கட்டுமான பணிகளை மெற்கொள்ளவோ கூடாது. குடிநீரை தோட்ட பராமரிப்புக்கோ பயன்படுத்தக் கூடாது. மீறி பயன்படுத்தினால் ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications