ஊரடங்கு தளர்வால் குவிந்த மக்கள்.. தமிழகத்திலிருந்தும் ரிட்டர்ன்.. பெங்களூரில் பெரும் டிராபிக் ஜாம்!
பெங்களூர்: ஊரடங்கு உத்தரவு தளர்வுகளால் பெங்களூர் நகரில் மீண்டும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது.
போக்குவரத்து நெரிசலுக்கு புகழ்பெற்ற நகரம் பெங்களூர். ஆனால், கொரோனா மோசமாக பரவியதால், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதையடுத்து, நகரம் வெறிச்சோடி கிடந்தது.
இருப்பினும் கொரோனா பரவல் குறையத் தொடங்கியதால் ஊரடங்கு தளர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

கடைகள் திறப்பு
காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை கடைகள் திறந்து வைக்க அனுமதி தரப்பட்டுள்ளது. பல்வேறு தொழில் நிறுவனங்களும் முழு அளவில் இயங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டிலிருந்து வருகை
இதையடுத்து வெளியூர்களுக்கும் வெளி மாநிலங்களுக்கும் சென்று இருந்த இங்கு பணியாற்றக்கூடிய தொழிலாளர்கள் மறுபடியும் பெங்களூர் நகருக்கு வந்துள்ளனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், கணிசமானோர் மீண்டும் பெங்களூருக்கு பணி நிமித்தமாகவும் தொழில் நிமித்தமாக திரும்பியுள்ளனர்.

டிராபிக் ஜாம்
இதையடுத்து மீண்டும் பெங்களூரு நகரின் பல பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு இருக்கிறது. வழக்கமாக எங்கெல்லாம் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்குமோ அதே போன்ற இடங்களில் மீண்டும் போக்குவரத்து நெரிசல் காணப்படுவதை ஏஎன்ஐ செய்தி நிறுவனம் புகைப்படமாக வெளியிட்டு இருக்கிறது.

முக்கிய சந்திப்புகள்
ஹெப்பால் பாலம், மேக்கரி சர்க்கிள், சில்க்போர்டு ஜங்ஷன் உள்ளிட்ட வழக்கமாக டிராபிக் நெரிசல் அதிகம் இருக்கும் பகுதிகளில் தற்போது மீண்டும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது.












Click it and Unblock the Notifications