பெங்களூர் சிஇஓ சுசனா சேத்.. 36 மணி நேரம் முன்பு என்ன செய்தார்? டாக்டர்கள் சொன்ன திடுக் தகவல்கள்
பெங்களூர்: பெங்களூர் நகரத்தைச் சேர்ந்த பெண் தொழில் அதிபரான சுசனா சேத், தனது 4 வயது மகனை எப்படி கொன்றார் என்பது குறித்தும், 36 மணி நேரத்திற்கு முன்பு நடந்த சம்பவங்கள் குறித்து பிரேத பரிசோதனை அறிகையில் தெரிய வந்துள்ளது.
மைண்ட் புல் கம்பெனி என்ற செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சுசனா சேத், பிரேத பரிசோதனைக்கு குறைந்தது 36 மணி நேரத்திற்கு முன்பு தனது நான்கு வயது மகனை கொன்றது தெரியவந்துள்ளது. சிறுவனின் உடலில் காயங்கள் அல்லது உயிருக்கு போராடும் போது, அவர் காயம் அடைந்ததற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என்றும், தலையணையால் அழுத்தி மூச்சை திணறடித்து அல்லது கயிற்றால் கழுத்தை நெரித்து குழந்தையை கொன்றிருக்கலாம் என்று பிரேத பரிசோதனை செய்த மருத்துவ அதிகாரி தெரிவித்தார்.

பிரேத பரிசோதனை செய்த கர்நாடக அரசு மருத்துவர் டாக்டர் குமார் நாயக் செய்தியாளர்களிடம் கூறும் போது, "சிறுவன் 36 மணி நேரத்திற்கு முன்பே கொல்லப்பட்டிருக்கிறார். அவர் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டிருக்கலாம் அல்லது மூச்சுத்திணறடித்து கொன்று இருக்கலாம். குழந்தையை கைகளால் கழுத்தை நெரித்தது போல் தெரியவில்லை. ஒரு தலையணை அல்லது கயிறு அல்லது வேறு ஏதேனும் பொருள் பயன்படுத்தப்பட்டது போல் தெரிகிறது. தசைகளில் ஏற்படும் மாற்றங்களால் குழந்தைகளின் கை கால்கள் விறைக்கவில்லை|" என்றார்.
பெண் தொழில் அதிபர் சுசான சேத் யார்?: கடந்த 2021ம் ஆண்டு சிறந்த 100 பெண் தொழில் அதிபர்கள் பட்டியலில் இடம் பிடித்த தொழில் அதிபரான சுசான சேத், தனது கணவரிடம் குழந்தையை காட்டக்கூடாது என்பதற்காக பெற்ற குழந்தை என்றும் பாராமல் கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளார்.
பெங்களூர் ரெசிடன்சி சாலை பகுதியில் வசித்து வந்தவர் 39 வயதாகும் சுசனா சேத் இவர் கம்ப்யூட்டர் என்ஜினியர் ஆவார். இவர் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்தவர் ஆவார். இவருடைய கணவர் பெயர் வெங்கடரமணா. இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். சுசனா சேத், இவர்கள் கடந்த 2010-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டிருக்கிறார். அமெரிக்காவில் பணியாற்றிய சுசனா சேத், திருமணத்திற்கு பிறகு பெங்களூருவில் கணவருடன் வசித்து வந்துள்ளார்.
கடந்த 2019-ம் ஆண்டு சுசான சேத்துக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. சின்மய் என்ற அந்த குழந்தைக்கு 4 வயது ஆகிறது. இந்த நிலையில் 2020-ம் ஆண்டு கணவன் - மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கிறது. கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்த வெங்கடரமணா பிலிப்பைன்சில் வேலை கிடைத்து அங்கு போய்விட்டார்.
இதனால் சுசனா சேத் பெங்களூருவில் உள்ள வீட்டில் தனது மகனுடன் வசித்து வந்தார். இதற்கிடையே கடந்த 2020-ம் ஆண்டு பெங்களூரு குடும்பநல கோர்ட்டு சுசனா சேத்துக்கும், அவரது கணவர் வெங்கடரமணாவுக்கும் விவாகரத்து வழங்கி தீர்ப்பு வழங்கியது. அதேநேரம் வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று சிறுவன் சின்மய்யிடம் வெங்கடரமணா பேச நீதிமன்றம் அனுமதி அளித்து இருந்தது. அதன்பேரில் அவர் ஞாயிற்றுக்கிழமை அன்று தனது மகனுடன் செல்போன் வீடியோ அழைப்பில் பேசி வந்திருக்கிறார்.
சுசான சேத் பெங்களூரு ரெசிடன்சி சாலையில் 'மைண்ட் புல் கம்பெனி' என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை சுசனா சேத் ஆரம்பித்தார். அதன் சிஇஒவாகவும் சுசனா சேத் செயல்பட்டு வந்தார். பெரும் வசதி படைத்த செல்வந்தரான சுசனா சேத் அடிக்கடி வெளிநாடுகளுக்கும், வெளிமாநிலங்களுக்கும் சுற்றுலா சென்று வந்துள்ளார். கடந்த 6-ந் தேதி அன்று சுசனா சேத், தனது மகனுடன் கோவாவுக்கு போய் உள்ளார்.
சுசான சேத் வடக்கு கோவாவில் உள்ள பிரபல நட்சத்திர விடுதியில் தங்கி உள்ளார். அவர் அடிக்கடி அங்கு அறை எடுத்து தங்கும் பிரபலம் என்பதால், பணிபுரியும் ஊழியர்களுக்கும் சுசனா சேத்தை நன்றாக தெரியும். கடந்த 6-ந் தேதி அன்று மகனுடன் தனது அறையில் தங்கி இருந்த சுசனா சேத், 8-ந் தேதி அன்று அதிகாலையில் திடீரென ஓட்டல் ஊழியர்களை அழைத்து தான் அறையை காலி செய்வதாக கூறியுள்ளார். மேலும் பெங்களூருவுக்கு செல்ல ஒரு வாடகை காரை ஏற்படுத்தி தருமாறும் கேட்டிருக்கிறார்.
அப்போது அவர்கள் நீங்கள் இருக்கும் வசதிக்கு விமானத்திலேயே போகலாமே, நீங்கள் ஏன் காரில் போக வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள். பெங்களூருவுக்கு விமானத்தில் டிக்கெட் முன்பதிவு செய்து தருவதாக ஓட்டல்கள் ஊழியர்கள் கூறியிருக்கிறார்கள். ஆனால் அதற்கு சுசனா சேத் மறுத்துள்ளார்.
தனக்கு பெங்களூரு செல்ல வாடகை காரை உடனடியாக ஏற்படுத்தி தருமாறு சுசான சேத் கேட்டதன் பேரில், ஓட்டல் ஊழியர்களும் வாடகை காரை ஏற்படுத்தி தந்திருக்கிறார்கள். பின்னர் அவர் தனது அறையில் இருந்து வரும்போது ஒரு பெரிய 'சூட்கேஸ்' பெட்டியை கொண்டு வந்திருக்கிறார். அவருடன் அவரது மகன் இல்லை. இதுபற்றி ஓட்டல் ஊழியர்கள் கேட்டபோது தனது உறவினர் ஒருவருடன் அவன் சென்றுவிட்டதாக மழுப்பிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார். இதனிடையே சுசனா சேத் வாடகை காரில் ஏறி புறப்பட்டு சென்றதும், அவர் தங்கி இருந்த அறையை ஓட்டல் ஊழியர்கள் சுத்தம் செய்துள்ளார்கள். அப்போது அறையில் சில இடங்களில் ரத்தக்கறைகள் இருந்திருக்கிறது. மேலும் ரத்த வாடை அடித்திருக்கிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஓட்டல் ஊழியர்கள் உடனடியாக நிர்வாகத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் இதுபற்றி கோவா போலீசாரிடம் தெரிவித்தனர் அதையடுத்து சுசனா சேத் பயணித்த கார் டிரைவரின் தகவல்களை போலீசார் கைப்பற்றி அவரை ரகசியமாக போலீசார் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்கள். அதன்படி டிரைவர் சிறிதும் பதற்றம் இன்றி, போலீசாரின் அறிவுறுத்தலின்பேரில் சுசனா சேத்திடம் பேச்சு கொடுத்துள்ளார். பின்னர் ஓட்டல் ஊழியர்கள், வாடகை கார் டிரைவரின் செல்போனில் தொடர்பு கொண்டு சுசனா சேத்திடம் பேசி அவரது மகன் குறித்து கேட்டிருக்கிறார்கள்.
அப்போது அவர் தனது மகன் தன்னுடைய நண்பர் வீட்டில் தங்கி இருப்பதாக கூறியிருக்கிறார். மேலும் குழந்தை தங்கி இருக்கும் வீட்டு முகவரியையும சுசனா சேத் தெரிவித்தார். அதையடுத்து கோவா போலீசார் உடனடியாக அந்த முகவரிக்கு சென்று விசாரித்துள்ளார். அப்போது அது போலி முகவரி என்பது உறுதியானது. இதனால் போலீசாருக்கு சுசனா சேத் மீது சந்தேகம் அதிகரித்தது.
இதையடுத்து சுசனா சேத் பயணித்த கார் டிரைவரை ரகசியமாக அழைத்த போலீசார் உடனடியாக காரை அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு ஓட்டிச்செல்லுமாறு அறிவுறுத்தினார்கள். அதன் பேரில் கார் ஓட்டுநர் கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் இரியூர் அருகே ஐமங்களா போலீஸ் நிலையத்திற்கு ஓட்டிச்சென்றார். அதையடுத்து அவர் போலீசாரிடம் நடந்தவற்றை தெரிவித்தார். இதற்கிடையே ஐமங்களா போலீசாரை தொடர்பு கொண்டு கோவா போலீசாரும் பேசி இருந்தனர். அதன்பேரில் அந்த காரின் டிக்கியில் இருந்த சுசனா சேத்தின் சூட்கேசை கைப்பற்றி அதில் போலீசார் சோதனை செய்தார்கள்.
அப்போது சூட்கேஸ் பெட்டியில் சுசனா சேத்தின் மகனின் உடல் இருந்தது. அதைப்பார்த்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். சுசனா சேத்தின் மகனை கொடூரமாக தாக்கி கொலை செய்து உடலை சிறுவன் அணியும் துணிகளுடன் அமுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் தனது மகனை கழுத்தை நெரித்து கொடூரமாக தாக்கி கொலை செய்ததை சுசனா சேத் ஒப்புக்கொண்டிருக்கிறார். அதையடுத்தே போலீசார் சுசனா சேத்தை கைது செய்தனர்.
பின்னர் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சித்ரதுர்கா மாவ ட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளார்கள். பிரேத பரிசோதனை அறிக்கையில், சிறுவன் 36 மணி நேரத்திற்கு முன்பு கழுத்தை நெரித்து கொல்லப்பட்டது தெரியவந்துள்ளது. சிறுவனை கொன்ற சுசனா சேத்துக்கு கொங்கனி மொழி தெரியாது. இதனால் டிரைவரிடம் கோவா போலீசார் கொங்கனி பாஷையில் பேசி விஷயங்களை அறிந்து தொழில் அதிபர் சுசனா சேத்தை போலீசார் லாவமாகமாக மடக்கி கைது செய்துள்ளனர். வாடகை கார் ஓட்டுநரும் இதில் முக்கிய பங்கு வகித்துள்ளார் என போலீசார் தெரிவித்தனர்.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், தனது கணவர் வெங்கடரமணாவுடன், தன்னுடைய மகன் வீடியோ அழைப்பில் பேசுவது சுசனா சேத்துக்கு பிடிக்காததால் இப்படி மகனை கொன்றுவிட்டதாக தெரிவித்தார். இந்த கொலை சம்பவம் கோவாவில் நடந்தது என்பதால் கைதான சுசனா சேத்தை ஐமங்களா போலீசார், கோவா போலீசாரிடம் ஒப்படைத்தார்கள். சுசனா சேத்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், 6 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வாங்கி உள்ளார்கள்.












Click it and Unblock the Notifications