வேகமெடுத்த பெங்களூர் 2வது விமான நிலையம்.. களமிறங்கிய சிங்கப்பூர் நிறுவனம்.. ஜரூராக பணி
பெங்களூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் விமான நிலையம் அமைப்பதற்கு போட்டியாக கர்நாடகா அரசு பெங்களூரில் 2வது விமான நிலையம் அமைக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில் பெங்களூரில் 2வது விமான நிலையத்திற்கான சாத்தியக்கூறு ஆய்வை மேற்கொள்ள சிங்கப்பூரை அடிப்படையாக கொண்ட மெயின்ஹார்ட்-கேபிஎம்ஜி (Meinhardt-KPMG) நிறுவனத்தை ஒப்பந்தம் செய்துள்ளது.
கர்நாடகா- தமிழ்நாடு எல்லையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தொழில் நிறுவனங்கள் தொடர்ந்து முதலீடு செய்து வருகின்றன. இதனால் அங்கு புதிதாக விமான நிலையம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்து அதற்கான பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதன்மூலம் ஓசூர் வளர்ச்சி பெற வாய்ப்புள்ளது.

ஓசூரில் விமான நிலையம் அமைக்கப்படும் பட்சத்தில் அதன் அருகே உள்ள பெங்களூரில் முதலீடுகள் குறையலாம். அதேபோல் பெங்களூரில் நிலவும் போக்குவரத்து நெரிசல், இடநெருக்கடியால் பல நிறுவனங்கள் ஓசூருக்கு இடம்பெயர வாய்ப்புள்ளது. இது கர்நாடகாவுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இதனால் ஓசூர் விமான நிலையத்துக்கு போட்டியாக பெங்களூரில் 2வது விமான நிலையம் அமைக்க கர்நாடகா அரசும் திட்டமிட்டு வருகிறது.
3 இடங்கள் தேர்வு
பெங்களூரில் ஏற்கனவே கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் உள்ளது. தற்போது 2வது விமான நிலையம் அமைப்பதற்காக 3 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதன்படி கனகபுரா ரோட்டின் அருகே ககலிபுரா, ஹாரோஹள்ளி, நெமலங்களா - குனிகல் ரோட்டில் உள்ள சிக்கசோலூர் உள்ளிட்ட இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஒப்பந்தம்
இறுதி செய்யப்பட்ட 3 இடங்களில் விமான நிலையம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய சிங்கப்பூரை சேர்ந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கர்நாடகா தொழில் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் (KSIIDC) சார்பில் இந்த ஒப்பந்தம் மெயின்ஹார்ட்-கேபிஎம்ஜி நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதன் மொத்த மதிப்பு ரூ.4.96 கோடியாகும். 5 மாதங்களில் ஆய்வை முடித்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் தொழில்நுட்பம், நில அளவு, வானிலை நிலவரம், மின்சாரம், குடிநீர், கழிவுநீர் உள்பட பிற உள்கட்டமைப்பு வசதிகள் உள்பட பல்வேறு விஷயங்களை மனதில் வைத்து விமான நிலையம் அமைக்க சரியான இடத்தை பரிந்துரை செய்வார்கள்.
தொழில்துறை அமைச்சர் விளக்கம்
பெங்களூரில் 2வது விமான நிலையம் அமைக்க 3 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் கனகபுரா சாலையில் உள்ள பகுதிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இருப்பினும், விமான நிலையம் அமையப்போகும் இடம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்று கர்நாடகத் தொழில்துறை அமைச்சர் எம்பி பாட்டீல் தெரிவித்துள்ளார்.இதுபற்றி அவர் கூறுகையில், ''பெங்களூருவின் இரண்டாவது விமான நிலையத்திற்கான மிகச் சிறந்த இடத்தைக் கண்டறிய விரிவான திட்டமிடல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளது'' என்றார்.
டிகே சிவக்குமாரின் விருப்பம்
அதேவேளையில் கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவக்குமார், ''பெங்களூரின் தென்பகுதியில் 2 வது விமான நிலையம் வரும்'' என்று கூறியுள்ளார். அதன்படி பார்த்தால் பெங்களூரில் கனகபுரா ரோட்டின் அருகே உள்ள இடத்தில் விமான நிலையம் அமைக்க டிகே சிவக்குமார் விரும்புகிறார். ஏனென்றால் அது டிகே சிவக்குமாரின் சொந்த ஊராகும்.
இருப்பினும் இந்த விமான நிலையம் அமைப்பதில் அமைச்சர்கள் இடையே கருத்து வேறுபாடு உள்ளது. டிகே சிவக்குமார் கனகபுரா ரோட்டில் விமான நிலையம் அமைக்க விரும்புகிறார். அதேவேளையில் உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் துமகூரு ரோட்டில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என்று கூறுகிறார். பரமேஸ்வர் துமகூரு மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதால் அவர் தனது வசதியை பார்க்கிறார். இதற்கிடையே தான் தற்போது சாத்தியக்கூறு ஆய்வு தொடங்க உள்ளது.












Click it and Unblock the Notifications