AI ருத்ரதாண்டவம்: பெங்களூரில் 50% ஐடி ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம்! டிகே.சிவக்குமார் கொடுத்த ஷாக்!
பெங்களூரு இனி இந்தியாவின் தொழில்நுட்பத் தலைநகரம் மட்டுமல்ல, உலகம் முழுவதும் இந்தியாவின் எதிர்காலத்தை பார்க்கும் கண்ணாடியாகவும் மாறியுள்ளது என கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் பெங்களூரில் நடந்த முக்கிய மாநாட்டில் கூறினார்.
உலகத் தலைவர்கள் இப்போது டெல்லிக்கு செல்வதற்கு முன்பாக பெங்களூருக்கு வருவதை வழக்கமாக்கியுள்ளனர் என்றும் சுட்டிக்காட்டினார். இதேவேளையில் பெங்களூரில் 50 சதவீத வேலைவாய்ப்பு மாயமாக போகிறது என தெரிவித்து ஐடி ஊழியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

தற்போது பெங்களூரில் சுமார் 2.26 கோடிக்கும் அதிகமான ஐடி தொழில்நுட்ப வல்லுநர்கள் இருக்கின்றனர், இந்த பெரும் திறமை பலம் தான் இன்னோவேஷன், ஸ்டார்ட்-அப் மற்றும் டிஜிட்டல் சேவை துறை வளர்ச்சியில் பெங்களூர் முதன்மையான இடத்தில் இருக்க முக்கியமான காரணமாக உள்ளது.
ஆனால் இதேவேளையில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் பெங்களூரு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் 50 சதவீத வேலைகளை இழக்கச் செய்யும் அபாயம் உள்ளது என்று டி.கே. சிவக்குமார் தெரிவித்தார். இது பெங்களூரின் ஐடி துறைக்கும் அதன் வளர்ச்சிக்கும், மிகப்பெரிய சவாலாக மாறும் என்றும் வலியுறுத்தினார்.
தொழில்நுட்பத்தை வேகமாக ஏற்றுக்கொள்ளும் பெங்களூரு, அதன் விளைவுகளையும் முதன்மையாக சந்திக்கும் நிலையில் உள்ளது. இதேநேரத்தில் தான் பெங்களூரில் புது புது நிறுவனங்கள் முதலீடு செய்து பெரும் அலுவலகத்தையும், தொழிற்சாலைகளையும் அமைத்து வருதிறது என அமைச்சர் எம்.பி. பாட்டீல் தெரிவித்தார்.
கர்நாடக தொழில் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் இந்த உச்சி மாநாட்டில் பேசும்போது, பெங்களூரின் டெக் சூழல், ஏஐ தொழில்நுட்ப அச்சத்திலும் வளர்ந்துக்கொண்டு தான் இருக்கிறது என பேசினார்.
உலகின் மிகப்பெரிய சிப் டிசைன் நிறுவனமான என்விடியா நிறுவனம் பெங்களூரில் 76 லட்ச சதுர அடி பரப்பளவில் பிரம்மாண்ட அலுவலக இடத்தை குத்தகைக்கு எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார். ஏற்கனவே உலகின் மிகப் பெரிய பார்சூன் 500 நிறுவனங்களில் (Fortune 500) பெரும்பாலான நிறுவனங்கள் பெங்களூரில் இருப்பதாகவும், என்விடியா-வும் இப்பட்டியலில் சேர்ந்துள்ளது என்றும் பாட்டில் கூறினார். மேலும், அரசு ஒரு பெரிய செமிகண்டக்டர் திட்டத்துக்கு ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் அவர் வெளிப்படுத்தினார்.
பெங்களூரின் எதிர்காலம்
எம்.பி.பாட்டீலும், டி.கே.சிவக்குமார் இருவரும் AI தொடர்பான வேலைவாய்ப்பு இழப்பு தொடர்பான அச்சத்தை வெளிப்படையாக ஒப்புக்கொண்டார். ஆட்டோமேஷன் மற்றும் AI தொழில்நுட்பம் வேகமாக வளரும் நிலையில் வேலை இழப்புகள் தவிர்க்க முடியாதவை என்றும் தெரிவித்துள்ளனர்.
ஆனாலும் கர்நாடகாவின் வலிமை அதன் திறனில் உள்ளது என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். "நாங்கள் சேவைத் துறையில் நம்பர் ஒன். இப்போது AI-யை ஏற்றுக்கொள்ள வேண்டிய நேரம் இது. எங்களிடம் அதற்கான எகோசிஸ்டம் மற்றும் திறமை இருக்கிறது" என்று அமைச்சர்கள் தெரிவித்தனர்.
மும்பைக்கு மாறாக பெங்களூரு
டி.கே. சிவக்குமார் பெங்களூரின் மற்றொரு பெரும் பலத்தையும் சுட்டிக்காட்டினார். மும்பை போன்ற பெரிய நகரங்களுடன் ஒப்பிடும்போது பெங்களூரில் வாழ்க்கைச் செலவு மிகவும் குறைவு என்று அவர் கூறினார். குறிப்பாக ரியல் எஸ்டேட் விலை மலிவாக இருப்பது நிறுவனங்கள் மட்டுமல்ல, ஐடி துறை வல்லுநர்களுக்கும் விருப்பமான இடமாக உள்ளது. .
மேலும், பெங்களூரின் தெற்குப் பகுதியில் புதிய விமான நிலையம் கட்டப்பட உள்ளது என்றும் அவர் அறிவித்தார். இது நகரின் தொடர்ச்சியான விரிவாக்கத்துக்கு பெரும் உதவியாக இருக்கும் என கூறி பெங்களூரின் எதிர்காலத்தின் மீது தொடர்ந்து நம்பிக்கை உள்ளதாக உறுதிப்படுத்தினர்.
பெங்களூரு தற்போது ஒரு முக்கியமான திருப்புமுனையில் நிற்கிறது. ஒருபுறம் உலகின் மிகப் பெரிய டெக் நிறுவனங்களை ஈர்க்கும் இந்தியாவின் வலிமையான வளர்ச்சி இயந்திரமாகவும், மறுபுறம் AI போன்ற தொழில்நுட்பங்களால் ஏற்படும் 50 சதவீத வேலை இழப்பு உள்ளிட்ட சவால்களை சந்திக்கும் நகரமாகவும் அது உள்ளது.












Click it and Unblock the Notifications