பெண் சிஇஓ அறையில் காலி இருமல் சிரப் பாட்டில்கள்.. பிரேத பரிசோதனையில் பகீர்.. குழம்பும் போலீஸ்
பெங்களூர்: ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான சுசனா சேத் தனது 4 வயது மகனை கொல்ல முன்கூட்டியே திட்டமிட்டிருந்ததற்கு ஆதாரம் இருப்பதாக கோவா போலீஸார் தெரிவித்திருந்தனர்.
ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக இருப்பவர் சுசனா சேத். இவர் Mindful AI lab என்ற ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் சிஇஓ ஆக பணியாற்றி வருகிறார்.

2021 ஆம் ஆண்டு சிறந்த புத்திசாலித்தனமான பெண்களில் ஒருவர் என்ற விருதும் பெற்றவர். இந்த நிலையில் கடந்த வாரம் கோவா கடற்கரை பகுதியில் அமைந்துள்ள இருக்கும் சர்வீஸ் அபார்ட்மென்ட் ஒன்றில் சுசனா சேத் தனது 4 வயது மகனுடன் வாடகைக்கு அறை எடுத்து தங்கியுள்ளார்.
இந்த நிலையில் இரு நாட்கள் கழித்து வேலை நிமித்தமாக தான் பெங்களூர் செல்ல வேண்டும். அதற்காக ஒரு வாடகைக்கு கார் ஏற்பாடு செய்து தரும்படி அபார்ட்மென்ட் ஊழியர்களிடம் சுசனா சேத் கேட்டுள்ளார். சர்வீஸ் அபார்ட்மென்ட் ஊழியர்கள், கால் டாக்ஸியை விட விமானத்தில் சென்றால் வசதியாக இருக்குமே என ஊழியர்கள் கேட்டுள்ளனர்.
அதற்கு சுசனா சேத் இல்லை தனக்கு கார்தான் வேண்டும் என அடம்பிடித்துள்ளார். இதையடுத்து ஊழியர்களுக்கு அவருக்கு வாடகை காரை ஏற்பாடு செய்து கொடுத்தனர். இந்த காரில் சுசனா சேத் பெங்களூர் புறப்பட்டு சென்றார். இதனிடையே கோவாவில் அவர் தங்கியிருந்த அறையை ஊழியர்கள் சுத்தம் செய்தனர்.
அப்போது அங்கு ஒரு டவல் முழுவதும் ரத்த கறை இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்களுக்கு அப்போதுதான் நினைவுக்கு வந்தது. இங்கிருந்து பெங்களூர் சென்ற சுசனா சேத் தன்னுடன் 4 வயது குழந்தையை அழைத்து வந்தாரே. ஆனால் போகும் போது குழந்தை இல்லாமல் அவர் மட்டும் சென்றாரே என யோசிக்க தொடங்கியுள்ளனர்.
இதையடுத்து ரத்தக் கறையை பார்த்ததும் ஏதோ அசம்பாவிதம் நடந்துள்ளதை அறிந்து சுதாரித்துக் கொண்ட ஊழியர்கள் உடனடியாக போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் அடிப்படையில் சுசனா சேத்திடம் கோவா போலீஸார் விசாரணை நடத்தினர். அதற்கு அவரோ அந்த டவலில் இருந்த ரத்த கறை எனது மாதவிடாய் ரத்தக் கறை என பொய் சொல்லியுள்ளார்.
மேலும் சரி உங்களுடன் வந்த 4 வயது மகன் எங்கே என கேட்ட போது தனது நண்பர் வீட்டில் இருப்பதாக கூறி ஒரு முகவரியை கொடுத்துள்ளார். அந்த முகவரிக்கு போய் போலீஸார் விசாரித்த போது அவர் சொன்னது போல் அங்கு யாரும் இல்லை என்றும் அவர் போலியான முகவரியை கொடுத்து போலீஸாருக்கு போக்கு காட்டியதும் தெரியவந்தது.
இதையடுத்து சுசனா சேத் மீது போலீஸாருக்கு சந்தேகம் வலுத்தது. இதையடுத்து அவரை நேரில் அழைத்து விசாரித்த போது அவரது பைகளை சோதனை செய்தனர். அதில் ஒரு சூட்கேஸில் குழந்தையின் உடல் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து சுசனா சேத்தை போலீஸார் கைது செய்தனர்.
இந்த நிலையில் குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. அதன் அறிக்கையில் குழந்தை தலையணையிலோ அல்லது ஒரு துணியிலோ அழுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. ஆனால் கழுத்தை நெரித்ததற்கான காயங்களோ அதற்கு அந்த குழந்தை போராடியதற்கான அடையாளங்கோ இல்லை என்றும் மருத்துவ அறிக்கை கூறுகிறது.
குழந்தை கொல்லப்பட்டு 36 மணி நேரத்திற்கு மேல் ஆகியிருக்கக் கூடும். குழந்தை கைகளால் கழுத்தை நெரித்து கொன்றது போல் தெரியவில்லை, தலையணையிலோ அல்லது வயரிலோ அல்லது வேறு ஏதாவது ஒரு பொருளிலோ நெரித்தது போல் இருந்தது. இந்த நிலையில் போலீஸார், சுசனா சேத் தங்கியிருந்த அறையை சோதனையிட்ட போது அங்கு காலியான 2 இருமல் பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. இதனால் குழந்தைக்கு இருமல் மருந்தை கொடுத்து அது மயங்கியதும் கழுத்தை நெரித்து கொன்றது தெரியவந்தது. இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆனால் ஹெவி டோஸ் இருமல் மருந்தை கொடுத்ததால் குழந்தை உயிரிழந்திருக்கலாம் என கூறுகிறார்கள். இதுகுறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications