"வெஸ்ட்டன் ஸ்டைலில்" பண்றேன் வா.. ஆசையோடு போன காதலனை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய காதலி.. ஷாக்
பெங்களூர்: பெங்களூரில் 'வெஸ்டர்ன் ஸ்டைலில்' காதலை 'ப்ரோபோஸ்' பண்றேன் என்று கூறி காதலனை வீட்டுக்கு அழைத்து சென்று கை, கால்களை கட்டிப்போட்டு கண்களை துணியால் கட்டி பெண் ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொன்ற சம்பவம் அனைவரையும் நடுங்க வைத்துள்ளது. இந்த சம்பவம் குறித்த திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
பெங்களூர் அஞ்சனா நகரில் உள்ள கத்தே கான் பகுதியில் வசித்து வருபர் பிரேமா. இவருக்கு வயது 27. இவர் தனது தாய் மற்றும் சகோதரருடன் வசித்து வருகிறார். பெங்களூர் ராஜாஜி நகரில் உள்ள பாஷியம் சர்க்கிளில் உள்ள Vi ஸ்டோரில் பணியாற்றி வருகிறார். இங்கு கிரண் என்பவரும் வேலை செய்து வருகிறார். கிரணுக்கும் 27 வயது தான்.

பிரேமா - கிரண் ஆகியோர் ஒரே அலுவலகத்தில் பணியாற்றுவதால் இவர்களுக்குள் நட்பு ஏற்பட்டது. இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் ஒருவரையொருவர் காதலிக்க தொடங்கினர்.
பிரேமாவை தவிர்த்த கிரண்
இந்நிலையில் தான் சமீபத்தில் பிரேமாவிடம், கிரண் சரியாக பேசவில்லை என்று கூறப்படுகிறது. இதுபற்றி பிரேமா கேட்டதற்கும் கிரண் சரியாக பதில் சொல்லவில்லை. அதோடு, தொடர்ந்து பிரேமாவிடம் சரிவர பேசாமல் அவ்வப்போது மட்டும் பேசி வந்துள்ளார். இது பிரேமாவிற்கு பிடிக்கவில்லை. அவர் மனவருத்தம் அடைந்தார்.
வீட்டுக்கு அழைத்து சென்ற பிரேமா
இதற்கிடையே தான் வேலை நிமித்தமாக பிரேமா பெங்களூர் புறநகர் மாவட்டம் நெலமங்களாவிற்கு சென்றார். அங்கு பணி முடித்த பிரேமாவை அழைக்க கிரண் சென்றார். இருவரும் அங்கிருந்து பெங்களூர் வந்தனர். அப்போது கிரணை தனது வீட்டுக்கு வரும்படி பிரேமா அழைத்துள்ளார். வீட்டில் யாரும் இல்லை. தனியாக தான் இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
வெஸ்ட்டர்ன் ஸ்டைலில் காதல்
இதையடுத்து கிரண், பிரேமாவின் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு இருவரும் பேசி கொண்டிருந்தனர். இந்த சமயத்தில் பிரேமா, கிரணிடம், '' நான் வெஸ்ட்டர்ன் ஸ்டைலில்' காதலை சொல்ல விரும்புகிறேன் என்று கூறியுள்ளார். அதற்கு கிரண் ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து பிரேமா அவரது கை, கால்களை கயிற்றால் கட்டி உள்ளார். அதோடு கண்களையும் துணியால் கட்டினார்.
தீவைத்து எரித்து கொலை
இது கிரணுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. கண்களை ஏன் கட்டுகிறாய்? என்று பிரேமாவிடம், கிரண் கேட்டுள்ளார். அதற்கு பிரேமா, உனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு என்று கூறியுள்ளார். இதனால் கிரணும் தனது கண்ணை துணியால் கட்ட அனுமதித்துள்ளார்.
அதன்பிறகு பிரேமா வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து கிரண் மீது ஊற்றி தீவைத்து எரித்துள்ளார். கை, கால், கண்கள் கட்டப்பட்டு இருந்ததால் அவரால் எங்கேயும் நகர முடியவில்லை. இறுதியில் தீயில் கருகி கிரண் பலியாகி உள்ளார். இந்த சம்பவத்தை பிரேமா தனது செல்போனில் வீடியோவாக எடுத்து வைத்துள்ளார்.
காதலி பிரேமா கைது
இதுபற்றி அறிந்த அக்கம்பக்கத்தினர் பேடரஹள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் விரைந்து சென்று பிரேமாவை கைது செய்தனர். விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பிரேமாவை காதலிப்பதாக கூறிவிட்டு அதன்பிறகு கிரண் தவிர்த்து வந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடங்காமல் பிரேமா, கிரணை ஏமாற்றி தீவைத்து எரித்து கொன்று இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications