பெங்களூரில் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்த பைக் டாக்ஸி.. உயர்நீதிமன்றத்தால் முடிவுக்கு வந்த 2 மாத தடை
பெங்களூர்: பெங்களூரில் ஆட்டோ டிரைவர்களிடம் கடும் எதிர்ப்பை சம்பாதித்த பைக் டாக்ஸி மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளது. பைக் டாக்ஸிற்கு தடை விதித்த அரசின் முடிவை எதிர்த்து பைக் டாக்ஸி நிறுவனங்கள் மேல்முறையீடு செய்த வழக்கில் வாய்மொழியாக நீதிபதிகள் சொன்ன வார்த்தையை தொடர்ந்து 2 மாத இடைவெளிக்கு பிறகு இன்று பெங்களூரில் பைக் டாக்ஸி மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
பெங்களூரில் ஐடி உள்பட பல்வேறு துறைகளில் முன்னணியில் உள்ள நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனால் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் பெங்களூரில் தங்கி பணியாற்றி வருகின்றனர்.

இவர்கள் அனைவரிடமும் பைக், கார் இருப்பது இல்லை. இதனால் அலுவலகங்களுக்கு ஆட்டோ, வாடகை கார், பஸ், மெட்ரோ ரயில்களில் பயணித்து வருகின்றனர். இதற்கிடையே தான் பைக் டாக்ஸி அறிமுகம் ஆனது.
இந்த பைக் டாக்ஸி பெங்களூர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. பெங்களூரில் பீக் ஹவர்ஸ்களில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் இருந்து வருகிறது. இதனால் ஆட்டோ, வாடகை கார், பஸ்களில் செல்லும்போது காலதாமதம் ஏற்பட்டது. பல இடங்களுக்கு மெட்ரோ ரயில் சேவைகளும் இல்லை. இதனால் பல ஊழியர்கள் பாதிப்பை எதிர்கொண்டனர். இப்படியானவர்களுக்கு வரப்பிரசாதமாக பைக் டாக்ஸி மாறியது.
பைக் டாக்ஸியில் பணியாளர்கள் செல்லும்போது போக்குவரத்து நெரிசலில் அதிக நேரம் காத்திருக்க வேண்டியது இல்லை. மெயின் ரோட்டை தவிர்த்து ஷார்ட் கட்டாக கூடபைக் டாக்ஸியில் பயணிக்க முடியும் என்பதால் இது வரவேற்பு பெற்றது. ஆனால் பைக் டாக்ஸியால் தங்களின் வருமானம் பாதிக்கப்படுவதாக ஆட்டோ டிரைவர்கள் கூறினர். மேலும் பைக் டாக்ஸி சேவையை நிறுத்த வேண்டும் என்று போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இதையடுத்து பெங்களூரில் நகரில் பைக் டாக்ஸி சேவைக்கு தடை விதிக்கப்பட்டது. இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஏப்ரல் 2 ஆம் தேதி உயர் நீதிமன்றத்தின் ஒற்றை நீதிபதி அமர்வு, பைக் டாக்ஸி இயக்குபவர்கள் ஜூன் 15 ஆம் தேதிக்குள் சேவையை நிறுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார். அதன்பிறகு ஜூன் 16 முதல் பைக் டாக்ஸி சேவை நிறுத்தப்பட்டது. மேலும் அரசு தடை விதித்தது தொடர்பான கொள்கை முடிவில் தலையிட விரும்பவில்லை என்று நீதிமன்றம் தெரிவித்தது.
இதனை எதிர்த்து கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு தொடரப்பட்டது. ஓலா, உபேர் மற்றும் ரேபிடா உள்ளிட்ட நிறுவனங்கள் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்து. இந்த வழக்கு கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் 2 நீதிபதிகள் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி விபு பக்ரு மற்றும் நீதிபதி சிஎம் ஜோஷி அமர்வில் விசாரிக்கப்பட்டது. அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் சசி கிரண் செட்டி ஆஜரானார்.
அப்போது அவர் ‛‛பைக் டாக்ஸி சட்டப்படி இயக்கலாம். ஆனால் அரசின் கொள்கை முடிவில் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. சட்டப்படி பைக் டாக்ஸி வணிகமாக இருந்தாலும் கூட அதற்கான விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் வேண்டும். இதனால் தான் பைக் டாக்ஸிற்கு தடை விதிக்கப்பட்டது'' என்று கூறினார். இருப்பினும் நடைமுறை சிக்கல்கள் குறித்த விவரங்களை அரசு தரப்பில் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்யவில்லை.
இதனால் வழக்கை செப்டம்பர் 22ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்ததோடு, பைக் டாக்ஸி ஓட்டுவோர் மீது கட்டாய மற்றும் முன்கூட்டிய நடவடிக்கை எடுக்ககூடாது. அரசின் கொள்கை முடிவை முழுவதுமாக தெரிவிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்தது. அதுமட்டுமின்றி திடீர் பைக் டாக்ஸி தடை என்பது அந்த நிறுவனங்கள் மற்றும் பணியாற்றுவோரின் வாழ்வாதாரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
இது பைக் டாக்ஸி நிறுவனங்களுக்கு பாசிட்டிவாக அமைந்துள்ளது. இந்நிலையில் தான் 2 மாதங்களுக்கு பிறகு இன்று மீண்டும் பெங்களூரில் பைக் டாக்ஸி நடைமுறைக்கு வந்துள்ளது. ஓலா, உபேர் உள்ளிட்ட நிறுவனங்கள் மீண்டும் பைக் டாக்ஸியை இயக்க தொடங்கி உள்ளன. இருப்பினும் செப்டம்பர் 22ம் தேதி இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. அப்போது தான் பைக் டாக்ஸி தடை முழுவதுமாக விலகுமா? இல்லையா? என்பது தெரியவரும்.












Click it and Unblock the Notifications