சுங்கச்சாவடிகளில் புதிய மாற்றம்.. 20 கி.மீ சுற்றளவில் உள்ளூர்வாசிகளுக்கு டிஜிட்டல் பாஸ் அறிமுகம்
சென்னை: தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும் உள்ளூர் லோக்கல் பயணிகளுக்கு என்று சில விதிமுறைகளை தேசிய நெடுஞ்சாலை இயக்குனரகம் வெளியிட்டு உள்ளது. உள்ளூர்வாசிகளுக்கு டிஜிட்டல் பாஸ் அறிமுகம் செய்யும் வகையில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் எங்கும் நிற்காமல் தடையின்றி பயணிக்கும் வகையில் 'மல்டி-லேன் ஃப்ரீ-ஃப்ளோ' (MLFF) எனப்படும் அதிநவீன சுங்கச்சாவடி முறையை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. இந்த புதிய முறையில், சுங்கச்சாவடிகளில் வாகனங்களை நிறுத்த வேண்டிய அவசியமிருக்காது.

இந்நிலையில், சுங்கச்சாவடிகளை ஒட்டியுள்ள பகுதிகளில் வசிக்கும் உள்ளூர் மக்களின் வசதிக்காக, அடுத்த மாதத்திற்குள் புதிய டிஜிட்டல் மாதாந்திர மற்றும் வருடாந்திர பாஸ்கள் (Passes) அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். சுங்கச்சாவடியில் இருந்து 20 கிலோமீட்டர் சுற்றளவில் வசிக்கும் குடியிருப்பாளர்களுக்கு இந்த வசதி பொருந்தும்.
ஆதார் மூலம் முகவரி சரிபார்ப்பு
தற்போது நடைமுறையில் உள்ள விதிகளின்படி, சுங்கச்சாவடியை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் உள்ளூர் மக்களுக்கு (வணிக ரீதியற்ற வாகனங்களுக்கு) ஒரு மாதத்திற்கு வரம்பற்ற முறையில் பயணிக்க ரூ.350 கட்டணத்தில் மாதாந்திர பாஸ் வழங்கப்படுகிறது. ஆனால், இந்த பாஸைப் பெற மக்கள் நேரடியாக சுங்கச்சாவடிக்குச் சென்று தங்களின் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், சுங்கச்சாவடியைக் கடக்கும்போது ஊழியர்களிடம் அந்த பாஸைக் காண்பிக்க வேண்டியுள்ளது.
புதிய MLFF முறையில் மனிதர்களின் தலையீடு மிகவும் குறைவாக இருக்கும். இதனால், ஊழியர்களுக்குத் தெரிந்தவர்கள் அல்லது உள்ளூர்வாசிகள் என்று கூறிக்கொண்டு பாஸ் இல்லாமல் சுங்கச்சாவடிகளைக் கடக்க முடியாது. அவ்வாறு கடக்க முயன்றால், தானியங்கி கேமராக்கள் மூலம் வாகன எண் கண்டறியப்பட்டு, உடனடியாக 'இ-நோட்டீஸ்' (e-notice) மற்றும் அபராதம் விதிக்கப்படும்.
இந்த சிக்கலைத் தவிர்க்கவே புதிய டிஜிட்டல் பாஸ் முறை கொண்டுவரப்படுகிறது. இதன்படி, விண்ணப்பதாரர்கள் 20 கி.மீ சுற்றளவுக்குள் தான் வசிக்கிறார்களா என்பது அவர்களின் ஆதார் எண் (Aadhaar Number) மற்றும் முகவரி மூலம் டிஜிட்டல் முறையில் சரிபார்க்கப்படும். இந்த புதிய பாஸ்கள் மத்திய அரசின் 'ராஜ்மார்க்' (Rajmarg) இணையதளத்தில் கிடைக்கும். இதன் மூலம் உள்ளூர் மக்கள் சம்பந்தப்பட்ட சுங்கச்சாவடியை எத்தனை முறை வேண்டுமானாலும் கட்டணமின்றி அல்லது குறைந்த கட்டணத்தில் கடக்க முடியும். புதிய டிஜிட்டல் பாஸிற்கான கட்டண விவரங்கள் தற்போது ஆலோசிக்கப்பட்டு வருகின்றன. இது தற்போதைய கட்டணமான ரூ.350-ஐ விடக் குறைவாக இருக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
தமிழ்நாட்டின் 3 சுங்கச்சாவடிகளில் புதிய தொழில்நுட்பம்
இந்த புதிய MLFF முறையில், அதிநவீன ரேடியோ அலைவரிசை அடையாள (RFID) வாசகர்கள் மற்றும் தானியங்கி எண்களைப் படிக்கும் (ANPR) கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கும். இவை வாகனத்தில் உள்ள ஃபாஸ்டேக் (FASTag) மற்றும் வாகனப் பதிவு எண்களைக் கண்டறிந்து கட்டணத்தைக் கழித்துக் கொள்ளும்.
தற்போது குஜராத்தின் சோரியாசி மற்றும் புதுடெல்லியின் முண்டகா-பக்கர்வாலா ஆகிய இரண்டு சுங்கச்சாவடிகளில் மட்டுமே இந்த முறை சோதனைக் கட்டத்தில் உள்ளது. தற்போது இந்த திட்டத்தை மேலும் பல சுங்கச்சாவடிகளுக்கு விரிவாக்கம் செய்ய இந்திய நெடுஞ்சாலைகள் மேலாண்மை நிறுவனம் (IHMCL) ஒப்பந்தங்களை வழங்கியுள்ளது.
இதில் தமிழ்நாட்டின் மிக முக்கியமான 3 சுங்கச்சாவடிகள் சேர்க்கப்பட்டுள்ளன:
சென்னை - பெங்களூரு நெடுஞ்சாலையில் உள்ள நெமிலி சுங்கச்சாவடி
சென்னை - பெங்களூரு நெடுஞ்சாலையில் உள்ள சென்னசமுத்திரம் சுங்கச்சாவடி
சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள பரனூர் சுங்கச்சாவடி
இது தவிர ஹரியானா, குஜராத், ராஜஸ்தான், ஆந்திரப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள முக்கிய சுங்கச்சாவடிகளும் இதில் அடங்கும். மேலும் 108 சுங்கச்சாவடிகளுக்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது.
ராணுவ வாகனங்களுக்கு விலக்கு மற்றும் அபராத விதிகள்
இந்த புதிய டிஜிட்டல் முறையில் ராணுவ வாகனங்களின் இயக்கம் குறித்து பாதுகாப்பு அமைச்சகத்துடன் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. ராணுவ வீரர்களின் வாகனங்களுக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்ட ஃபாஸ்டேக் (FASTag) வழங்குவது குறித்து ஆலோசனைகள் நடந்து வருகின்றன.
புதிய சுங்கச்சாவடி முறையில், பாஸ் இல்லாமலோ அல்லது ஃபாஸ்டேக்கில் போதிய பணம் இல்லாமலோ சுங்கச்சாவடியைக் கடந்தால், சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளருக்கு உடனடியாக இ-நோட்டீஸ் அனுப்பப்படும். அவ்வாறு விதிமீறலில் ஈடுபடுபவர்கள் வழக்கமான சுங்கக் கட்டணத்தைப் போல இரு மடங்கு அபராதமாகச் செலுத்த வேண்டும். எனினும், இ-நோட்டீஸ் வந்த 72 மணி நேரத்திற்குள் கட்டணத்தைச் செலுத்தினால், அசல் கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதுமானது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications