சாவர்க்கருக்கு சிலை அமைக்க அனுமதி கொடுங்க.. நகராட்சி நிர்வாகத்துக்கு பாஜக தலைவர் கோரிக்கை- பரபரப்பு!
பெங்களூர் : கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள பிரம்மகிரி சர்க்கிளில் சாவர்க்கருக்கு சிலை வைக்க நகராட்சி நிர்வாகத்திடம் பாஜக தலைவர் அனுமதி கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Recommended Video
கர்நாடகா மாநிலத்தில் சாவர்க்கர், திப்பு சுல்தான் உருவப்படங்களை வைப்பது தொடர்பாக இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில், இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டார்.
முன்னதாக, சுதந்திர தினத்தன்று கர்நாடகா அரசு சார்பில் பத்திரிகைகளுக்கு அளிக்கப்பட்ட விளம்பரங்களில் மகாத்மா காந்தி, படேல், அம்பேத்கர், பகத் சிங் உள்ளிட்டோரின் படங்களுடன் சாவர்க்கரின் படமும் இடம்பெற்றிருந்தது. ஆனால், ஜவஹர்லால் நேருவின் படம் இடம்பெறவில்லை.
பிரிட்டாஷாருக்கு மன்னிப்புக் கடிதங்கள் எழுதிய சாவர்க்கரின் படத்தை வெளியிட்டு, நேருவின் படத்தை எப்படி புறக்கணிக்கலாம் என காங்கிரஸ் தலைவர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர்.
சாவர்க்கர் போஸ்டர் சர்ச்சை... இளைஞரை கத்தியால் குத்திய 4 பேர்.. சுட்டு பிடித்த கர்நாடக போலீஸ்

கர்நாடகாவில் மோதல்
பாஜக தொடர்ந்து சாவர்க்கரை சுதந்திரப் போராட்ட வீரராக முன்னிலைப்படுத்தி வருகிறது என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து எழுந்து வருகிறது. இந்த நிலையில், கர்நாடகா மாநிலம், ஷிவமோகாவில் உள்ள பள்ளிவாசலை ஒட்டிய மால் ஒன்றில், சாவர்க்கர் புகைப்படத்துடன் ஒரு பேனரை வைத்திருந்தனர். அதற்கு ஒருசில இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து, திப்பு சுல்தான் புகைப்படத்தை வைக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் இரு தரப்புக்கும் மத்தியில் மோதல் வெடித்தது.

கத்திக்குத்து
இந்த வன்முறையை போலீசார் தடியடி நடத்திக் கலைத்தனர். அதைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் உள்ள காந்தி பஜார் அருகில் ராஜஸ்தானைச் சேர்ந்த பிரேம் சிங் என்ற இளைஞர் கத்தியால் குத்தப்பட்டார். இதனால், கர்நாடக மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அசம்பாவித சம்பவங்களை தவிர்ப்பதற்காக மங்களூர், ஷிவமோகா ஆகிய இடங்களில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

சிலை அமைக்க கோரிக்கை
இந்தப் பரபரப்பான சூழலில், சாவர்க்கருக்கு சிலை நிறுவ நகராட்சி நிர்வாகத்திடம் பாஜக தலைவர் அனுமதி கேட்டு கடிதம் எழுதியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவின் ஓ.பி.சி மோர்ச்சாவின் தேசிய பொதுச் செயலாளராக இருப்பவர் யஷ்பால் சுவர்ணா. இவர் உடுப்பியில் உள்ள பிரம்மகிரி வட்டத்தில் விநாயக் தாமோதர் சாவர்க்கருக்கு சிலை அமைக்க அனுமதி கேட்டு நகராட்சி நிர்வாகத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். சாவர்க்கருக்கு சிலை அமைக்க பா.ஜ.க தலைவர் அனுமதி கோரியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அனுமதி கோரி கடிதம்
பாஜகவின் ஓபிசி மோர்ச்சாவின் தேசிய பொதுச் செயலாளர் யஷ்பால் சுவர்ணா தனது கடிதத்தில், நாட்டில் உள்ள அனைத்து தேசபக்தர்களின் சார்பாக இந்த சிலையை நிறுவ முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். இந்தியா 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வேளையில், ஆங்கிலேய ஆட்சியை புரட்சிகர போராட்டத்தின் மூலம் முறியடித்த சாவர்க்கரை கௌரவிப்பதற்கு இதுவே சரியான தருணம் என்றும், சிலையை நிறுவ அனுமதி வழங்குமாறும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.