"புல் புல்" பறவை மீது சாவர்க்கர்.. "டீச்சர், சிறகில் மனிதர் உட்கார முடியுமா".. திணறி விழிக்கும் பாஜக?
புல்புல் பறவை மீது சாவர்க்கர் பறந்து வந்த செய்தியால் கமெண்ட்கள் பரவி வருகின்றன
பெங்களூரு: அந்தமான் செல்லுலார் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த சாவர்க்கர், அங்கிருந்து புல் புல் பறவை மீது ஏறி சொந்த ஊருக்கு சென்று மீண்டும் யாருக்கும் தெரியாமல் சிறைக்கு சென்றுவிடுவார் என்று கர்நாடக மாநில 8ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள தகவலால் சர்ச்சைகள் ஓயாமல் உள்ளது.
பாஜகவினரால் 'வீர சாவர்க்கர்' என்று அழைக்கப்படும் சாவர்க்கர் குறித்த பேச்சு எழும்போதெல்லாம், சர்ச்சைகளும் சேர்ந்து எழும்.
இந்தியா சுதந்திரம் அடைந்ததில் இருந்தே, சாவர்க்கர் குறித்த சர்ச்சைகள் ஓயாமல் உள்ளது... சுதந்திர போராட்டத்தின்போது ஆங்கிலேய அரசை எதிர்க்காமல் மன்னிப்புக்கடிதம் எழுதிக் கொண்டிருந்தார் சாவர்க்கர் என்ற குற்றச்சாட்டு மட்டுமே அவர்மீது பிரதானமாக வைக்கப்பட்டு வருகிறது..

வீர சாவர்க்கர்
மன்னிப்பு கடிதம் எழுதி, மன்னிப்பு கோரியவரை, எப்படி "வீர சாவர்க்கர்" என்று பெருமையாக சொல்கிறீர்கள் என்று நெட்டிசன்கள் பல காலமாகவே கேட்டு கொண்டிருக்கிறார்கள்.. ஆனால், இதற்கு இதுவரை எந்த விளக்கமும் தரப்படவில்லை.. அதேபோல, வீர சாவர்க்கர் என்று அழைப்பதும் நிறுத்தப்படவில்லை.. அதுமட்டுமல்ல, நாடாளுமன்றத்தில் சாவர்க்கர் போட்டோவை வைத்து ஒவ்வொரு வருடமும், பாஜக தலைவர்கள் அந்த படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

சர்ச்சைகள் - இருட்டடிப்பு
கடந்த 75-வது சுதந்திர தினவிழாவிற்கு கர்நாடகா அரசால் வெளியிடப்பட்ட விளம்பரங்களில் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான நேரு படத்தை இருட்டடிப்பு செய்துவிட்டு, சாவர்க்கர் படம் இடம்பெற செய்தது, மறுபடியும் சர்ச்சையை கிளப்பிவிட்டது.. அதிலும் காங்கிரஸ் எக்கச்சக்கமாக கொந்தளித்து கேள்விகேட்டது.. இந்த பரபரப்பே இன்னும் அடங்காத நிலையில், மற்றொரு சாவர்க்கர் சர்ச்சை இதே கர்நாடகத்தில் வெடித்துள்ளது..

புல் புல் பறவை
அம்மாநிலத்தில் 8-ம் வகுப்பு கன்னட மொழிப் பாடத்தில், சாவர்க்கர் சிறையில் இருந்தபோது புல் புல் பறவை மீது அமர்ந்து தாய்மண்ணுக்கு வந்து சென்றார் என இடம் பெற்றுள்ளது கல்வியாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.. குறிப்பாக,"அந்தமான் சிறையில் சாவர்க்கர் இருந்தபோது, ஜெயில் அறையில் சிறிய துளை கூட கிடையாது.. ஆனால் அவரது அறைக்கு எப்படியோ ஒரு புல் புல் பறவை வந்து விடும். அந்த பறவையின் சிறகின் மீது அமர்ந்து தினமும் தாய் மண்ணிற்கு சாவர்க்கர் வந்து செல்வார்" என்று அந்த பாடபுத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

அறிவாற்றல்
இது அதிர்ச்சியையும், பரபரப்பையும் கிளப்பிய நிலையில், அந்த பாடப்பகுதியை நீக்க வேண்டும் என்று கல்வியாளர்கள் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்... இதனிடையே, இந்த சர்ச்சைக்கு புத்தக வடிவமைப்பு குழுவின் தலைவர் ரோஹித் சக்ரதீர்த்தா ஒரு விளக்கம் தந்துள்ளார்.. அவர் சொல்லும்போது, "இந்த பத்தியில் உள்ள வரிகள் அழகிய புலமை நயமிக்கவை ஆகும்... ஆனால் இந்த புலமை நயத்தை சிலரால் புரிந்து கொண்டு ரசிக்க தகுந்த அளவில் அறிவாற்றல் இல்லையே என்பது அதிசயமாக உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

5 அறிவு + 6 அறிவு
ஏற்கெனவே சர்ச்சையாக உள்ள பாடத்திட்டத்தை நீக்க வேண்டும் என்று இந்தியா முழுவதும் உள்ள கல்வியாளர்கள் கோரிக்கை எழுப்பியுள்ள நிலையில், விளக்கம் என்ற பெயரில் இவர் சொல்லி உள்ள காரணம் அதற்கு மேல் சர்ச்சையை கிளப்பிவிட்டுள்ளது.. நேற்றில் இருந்து, இது தொடர்பான மீம்ஸ்களும் கமெண்ட்களும் இணையங்களில் வைரலாகி வருகின்றன.. ஆறறிவு மனிதனை, 5 அறிவு பறவை உட்கார வைத்து அழைத்து சென்றதா? காற்றுகூட புகாத அறைக்குள், பறவை மட்டும் எப்படி நுழைந்தது? அதிலும் தினம் தினம் வந்து செல்வதற்கான வழி எங்கே இருந்தது? சிறை நிர்வாகத்தில் கோளாறா? சிறை பாதுகாப்பில் கோளாறா? என்ற கேள்விகள் எழுகின்றன.

திப்பு சுல்தான்
சாவர்க்கர் மீதான பக்தியின் உச்சக்கட்ட கட்டுக்கதை இது.. பறவையின் சிறகில் ஏறி எப்படி பறக்க முடியும் என்று குழந்தைகள் கேட்டால் என்ன பதில் சொல்ல முடியும்? என்று ஆசிரியர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.. இப்படித்தான் ஏற்கனவே, 10-ம் வகுப்பு கன்னட பாடப்புத்தகத்தில் பகத்சிங் குறித்த பாடம் தவிர்க்கப்பட்டு, ஆர்எஸ்எஸ் நிறுவனர் ஹெட்கேவார் கட்டுரை இடம்பெற்றிருந்தது... அதுவு இதே கர்நாடக மாநிலத்தில்தான் நடந்தது.. அதேபோல 10-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் ஸ்ரீநாராயணகுரு, பெரியார், திப்பு சுல்தான் பற்றிய பாடங்களும் விடுபட்டுள்ளன. இதுகுறித்த கேள்விகளை எதிர்க்கட்சிகள் கேட்டும், இந்த பிரச்சனைகள் எதுவும் தீர்க்கப்படவில்லை.. ஆனால், அடுத்தடுத்த சர்ச்சைகள் மட்டும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications