பெங்களூரில் குடிநீரை பயன்படுத்த கட்டுப்பாடு.. மீறினால் ரூ.5,000 அபராதம்.. மக்களே கவனம்
பெங்களூர்: கோடைகாலம் நெருங்கி வரும் சூழலில் பெங்களூர் மக்களுக்கு பெங்களூர் குடிநீர் வினியோகம் மற்றும் வடிகால் வாரியம் முக்கிய அறிவுரைகளை வழங்கி உள்ளது. இதனை மீறும் பட்சத்தில் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று வார்னிங்கும் கொடுத்துள்ளது.
பெங்களூர் நகரில் நாள்தோறும் மக்கள்தொகை என்பது அதிகரித்து வருகிறது. பல்வேறு முன்னணி நிறுவனங்கள் பெங்களூரில் உள்ளன. இதனால் கர்நாடகாவின் பிற மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் மட்டுமின்றி தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உள்பட பிற மாநிலங்களில் இருந்து பெங்களூருக்கு வேலை நிமித்தமாக செல்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

தற்போதைய சூழலில் பெங்களூர் நகரின் மக்கள்தொகை என்பது ஒரு கோடியை தாண்டிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் பெங்களூரில் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் பலரும் பெங்களூர் புறநகர் பகுதியில் வீடு எடுத்து தங்கி வருகின்றனர். இப்படி ஆண்டுதோறும் அதிகரிக்கும் மக்கள்தொகையால் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதனால் காவிரி ஆற்றில் இருந்து பெங்களூருக்கு குடிநீர் வழங்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது கோடை காலம் நெருங்கி வருகிறது. இதனால் நகரின் குடிநீர் தேவை என்பது அதிகரிக்கும். இப்படியான சூழலில் தான் பொதுமக்கள் குடிநீரை பயன்படுத்துவது தொடர்பாக பெங்களூர் குடிநீர் வினியோகம் மற்றும் வடிகால் வாரியம் (BWSSB or Bengaluru Water Supply and Seweage Board) முக்கிய வார்னிங்குடன் கூடிய முக்கிய அறிவுரையை வழங்கி உள்ளது.
அதன்படி பெங்களூர் நகரில் குடிநீரை பிற பயன்பாட்டுக்கு மக்கள் பயன்படுத்த கூடாது. குடிநீரை குடிக்க மட்டுமே பயன்படுத்த வேண்டும். குடிநீரை வாகனம் கழுவவும், தோட்டம் மற்றும் கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்த கூடாது. மீறி பயன்படுத்தினால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என்று பெங்களூர் குடிநீர் வினியோகம் மற்றும் வடிகால் வாரியம் எச்சரித்துள்ளது.
இதற்கான உத்தரவை பெங்களூர் குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்தின் தலைவர் ராம் பிரசாத் மனோகர் பிறப்பித்துள்ளார். அதில் குடிநீரை வாகனம் கழுவ, தோட்டத்தில் செடி - மரம் வளர்க்க, கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறினால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். அதன்பிறகு மீண்டும் மீண்டும் இந்த தவறை செய்வோருக்கு கூடுதல் அபராதம் விதிக்கப்படும். கூடுதல் அபராதமாக தினமும் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டுப்பாடுகளை யாரும் மீறும் பட்சத்தில் அதுபற்றிய தகவலை பொதுமக்களே பெங்களூர் குடிநீர் வினியோகம் மற்றும் வடிகால் வாரியத்துக்கு தெரியப்படுத்தலாம். இதற்கு பொதுமக்கள் 1916 என்ற ‛டோல் ப்ரீ' எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். பெங்களூரில் நகரில் இப்படியான கட்டுப்பாடு விதிக்கப்படுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் இப்படியான கட்டுப்பாடு என்பது விதிக்கப்பட்டது.
உதாரணமாக கடந்த ஆண்டு பெங்களூரில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. போதிய அளவு மழை பெய்யாததால் போர்வெல்களில் தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டது. அப்போதும் மேற்கூறிய கட்டுப்பாடுகளை பெங்களூர் குடிநீர் வினியோகம் மற்றும் வடிகால் வாரியம் விதித்து இருந்தது. இப்போது மீண்டும் கோடைக்காலம் வருவதால் இந்த உத்தரவு என்பது பிறப்பிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications