பெங்களூரில் குவிந்த 10,000 பேர்.. லேசர் ஷோவில் ஜொலித்த ‛காவிரி ஆரத்தி’.. மக்களை கவர்ந்த பிரமாண்டம்
பெங்களூர்: வரலாற்றில் முதல் முறையாக நேற்று பெங்களூர் சாங்கி டாங்க் ஏரியில் ‛காவிரி ஆரத்தி' நிகழ்ச்சி நடந்தது. இதனை துணை முதல்வர் டிகே சிவக்குமார் தொடங்கி வைத்தார். லேசர் ஷோ, இசை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக நடந்த காவிரி ஆரத்தி நிகழ்ச்சியில் சுமார் 10 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் குவிந்தனர்.

உலக தண்ணீர் தினம் இன்று கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி தண்ணீர் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், பெங்களூரின் குடிநீர் ஆதாரமாக உள்ள காவிரி ஆற்றை போற்றும் வகையிலும் நேற்று பெங்களூரில் முதல் முறையாக ‛காவிரி ஆரத்தி' நிகழ்ச்சி நடந்தது.

பெங்களூர் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் வாரியம், சிறிய நீர்ப்பாசன துறை இணைந்து, பெங்களூரு மல்லேஸ்வரத்தில் உள்ள சாங்கி டாங்க் ஏரியில் இந்த விழா நடத்தியது. விழாவுக்கான ஏற்பாடுகளை பெங்களூர் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் வாரியத்தின் தலைவரான தமிழகத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி ராம்பிரசாத் மனோகர் செய்திருந்தார். இவர் விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தை சேர்ந்தவர்.

இதையடுத்து பெங்களூரில் இன்று இரவு 7 மணிக்கு ‛காவிரி ஆரத்தி' நிகழ்ச்சி நடைபெற்றது. துணை முதல்வர் டிகே சிவக்குமார் தொடங்கி வைத்தார். காவிரி பிறப்பிடமான குடகு மாவட்டம் தலக்காவிரிக்கு, துணை முதல்வர் சிவகுமார், பெங்களூரு குடிநீர் வடிகால் வாரிய தலைவர் ராம்பிரசாத் மனோகர், உள்ளூர் மக்கள் பிரதிநிதிகள் இணைந்து, காவிரி தாய்க்கு சிறப்பு பூஜை செய்தனர். அங்கிருந்து கொண்டு வந்த புனித நீர், சாங்கி டாங்க் ஏரியில் ஊற்றி வழிபாடு நடத்தப்பட்டது. அதன்பிறகு தான் பெங்களூர் சாங்கி டாங்க் ஏரியில் ‛காவிரி ஆரத்தி' மேற்கொள்ளப்பட்டது.

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் ‛கங்கை ஆரத்தி' போல் அர்ச்சகர்கள் பூஜை மற்றும் ஆரத்தி மேற்கொண்டனர். உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியை சேர்ந்த 60 பேர் கொண்ட குழு, கோவை ஈஷாவை சேர்ந்த 40 பேர் கொண்ட குழுவ, காவிரி ஆரத்தி நிகழ்ச்சியை நடத்தினர். பெங்களூரை சேர்ந்த 9 புரோகிதர்கள் கொண்ட குழு, வேத கோஷங்களை உச்சரித்தனர். மல்லேஸ்வரம் கங்கம்மா தேவி உற்சவ மூர்த்தி ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு ஏரியின் நடுவில் மிதக்கும் மேடையில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது.

இந்த விழாவில் போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்கரெட்டி, சுகாதார துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ், நகர அபிவிருத்தி துறை பைரதி சுரேஷ் உள்பட பலர் பங்கேற்றனர். மொத்தம் 10 ஆயிரத்துக்கும் அதிகமானவர் கலந்து கொண்டனர். விழாவுக்கு வந்தவர்களை பெங்களூர் குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்தின் தலைவர் ராம் பிரசாத் மனோகர் வரவேற்றார். விழாவில் 'அனைவரும் தண்ணீரை பாதுகாப்போம்' என்ற விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது. இந்த விழாவை ஆன்லைனில் பல லட்சம் பேர் பார்த்தனர்.

இந்த விழாவில் டிகே சிவக்குமார் பேசும்போது, ‛‛கங்கா ஆரத்தி போன்று, முதல் முறையாக, பெங்களூரில் காவிரி ஆரத்தி நிகழ்ச்சி நடத்தப்படுவது பெருமைக்குரிய விஷயம். உலக வரலாற்றில் முதல் முறையாக, தண்ணீர் பாதுகாப்புக்காக ஆயிரக்கணக்கானோர் ஒரே முறை விழிப்புணர்வு உறுதி மொழி எடுத்து கொள்வது சிறப்பு. வரும் தசரா விழாவின் போது, கே.ஆர்.எஸ்., அணையிலும் முதல் முறையாக காவிரி ஆரத்தி நிகழ்ச்சி நடத்தப்படும். இதற்காக, ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராம்பிரசாத் மனோகர் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. அனைவரும் தண்ணீரை பாதுகாப்போம். தண்ணீர் பஞ்சத்தை தவிர்ப்போம்'' என்றார்.

இந்த விழாவால் சாங்கி டாங்க் ஏரி மின்னொளியில் ஜொலித்தது. ஏரியை சுற்றிய வேலி மற்றும் மரங்கள், மின் விளக்குகளால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. லேசர் ஷோ நடத்தப்பட்டது. அது பார்வையாளர்களை கவரும் வகையில் இருந்தது. இசை நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு தலக்காவிரியில் இருந்து கொண்டு வந்திருந்த காவிரி புனித தீர்த்தம், நந்தினி இனிப்பு வழங்கப்பட்டன. நிகழ்ச்சியை 25,000க்கும் அதிகமானோர் நேரிலும்; ஆயிரக்கணக்கானோர் இணையதளத்திலும் நேரலையில் பார்வையிட்டனர். பெங்களூரில் முதல் முறையாக நடந்த இந்த காவிரி ஆரத்தி நிகழ்ச்சி மக்களை வெகுவாக கவர்ந்தது.













Click it and Unblock the Notifications