பெங்களூரு பெருவெள்ளம்.. காங்கிரஸ் ஆட்சிதான் காரணம்.. அடித்து பேசும் முதல்வர் பசவராஜ் பொம்மை!
பெங்களூரு: பெங்களூருவில் ஏற்பட்டுள்ள பெருவெள்ள பாதிப்புகளுக்கு முந்தைய காங்கிரஸ் ஆட்சியே காரணம் என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை குற்றம்சாட்டியுள்ளார்.
பெங்களூருவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சர்ஜாப்புரா, மாரத்தஹள்ளி, மகாதேவபுரா, பொம்மனஹள்ளி, இந்திராநகர், எச்.ஏ.எல். உள்ளிட்ட பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. வீடுகளில் சிக்கியுள்ள குடியிருப்புவாசிகள் ரப்பர் படகுகள் மூலம் மீட்கப்பட்டு வருகிறார்கள். பெல்லந்தூர் ஏரியை சுற்றியுள்ள பகுதிகளும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுமட்டுமல்லாமல் பெங்களூரு புறநகர் சாலை வெள்ளத்தில் மூழ்கியது. இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் உண்டாகி அந்த சாலையில் அமைந்துள்ள ஐடி நிறுவனங்களுக்கு வரவேண்டிய ஊழியர்கள் பணிக்கு வர முடியாமல் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அதேபோல் பெங்களூருவின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் வெளியே செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். அதேபோல் வீட்டிற்கு வெளியே நிறுத்தப்பட்டு இருந்த கார்கள், இருசக்கர வாகனங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

முதல்வர் பசவராஜ் பொம்மை பேட்டி
இந்த நிலையில் பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்து முதல்வர் பசவராஜ் பொம்மை கூறுகையில், பெங்களூருவில் கடந்த 90 ஆண்டுகளாக இதுபோன்ற வரலாறு காணாத கனமழை பெய்யவில்லை. அனைத்து நீர்தேக்கங்களும் நிரம்பியுள்ளன. சில பகுதிகளில் நீர் நிலைகள் உடைந்து தண்ணீர் வெளியேறி வருகிறது. தொடர்ந்து மழையும் பெய்து வருவதால், பாதிக்கப்பட்ட பகுதிகளை மீட்டெடுப்பது சவாலாக இருக்கிறது.

முழு நகரமும் பாதிக்கப்படவில்லை
பெங்களூருவின் முழு நகரமும் வெள்ளத்தில் சிக்கியுள்ளது போன்று ஒரு தோற்றம் உருவாக்கப்படுகிறது. ஆனால் பிரச்னை சில பகுதிகளில் மட்டுமே உள்ளன. குறிப்பாக மகாதேவபுரா மண்டலம். அந்தப் பகுதியில் 69 நீர்தேக்கங்கள் இருப்பதுடன், கிட்டத்தட்ட அனைத்தும் நிரம்பி தண்ணீர் வழிகிறது. அதேபோல் அனைத்து ஐடி நிறுவனங்களும் தாழ்வான பகுதிகளில் உள்ளன. அதனால் பெரும் இழப்பும், பாதிப்பும் ஏற்பட்டுள்ளன. அரசு அதிகாரிகள், மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை குழுக்கள் 24 மணி நேரமும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன.

காங்கிரஸ் கட்சியே காரணம்
கர்நாடகாவில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் எந்த விதிமுறைகளையும் பின்பற்றாமல் ஏரி, குளங்கள், நீர் நிலைகளில் கட்டிடங்களை கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதனால் பெங்களூருவில் தற்போது ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புக்கு காங்கிரஸ் கட்சியே காரணம். நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் ஏரிகளை நிர்வகிக்கும் பணியை ஒரு சவாலாக ஏற்று மேற்கொண்டு வருகிறோம்.

விரைவில் இயல்பு நிலை
பெங்களூரு நகரில் கால்வாய்களை மேம்படுத்த ரூ.1,500 கோடி நிதியை ஒதுக்கியுள்ளோம். இரு நாட்களுக்கு முன் ரூ.300 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்றியுள்ளோம். தண்ணீரை வெளியேற்றவும், முழு வீச்சில் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பவும் இரண்டு நாட்கள் ஆகும். எனவே அடுத்த 2 முதல் 3 நாட்களுக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications