பெங்களூர் பெண் வக்கீல் ஜீவா எழுதிய கடிதத்தால் சிக்கல்.. சிஐடி டிஎஸ்பி கனகலட்சுமி அதிரடியாக கைது
பெங்களூர்: கடந்த பாஜக ஆட்சியில் போவி சமுதாய வாரியத்தில் ரூ.90 கோடி முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்தது.. இதில் தனியார் நிறுவனங்களுக்கு இந்த முறைகேடு பணம் சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. அதில் வழக்கறிஞர் ஜீவாவும் ஒருவர். பெண் வழக்கறிஞர் ஜீவா விசாரணைக்கு பின்னர் திடீரென எடுத்த முடிவு கர்நாடகாவையே அதிர வைத்தது. இதையடுத்து வழக்கை விசாரித்த சிஐடி பெண் டிஎஸ்பி கனகலட்சுமி அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடகாவில் தற்போது சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. கடந்த பாஜக ஆட்சியில் ஊழல் நடந்திருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி வருகிறது. குறிப்பாக கடந்த ஆட்சியில் போவி சமுதாய வாரியத்தில் ரூ.90 கோடி முறைகேடு நடந்திருப்பதாக புகார்கள் எழுந்தன. இதுகுறித்து விசாரிக்க கர்நாடக காங்கிரஸ் அரசு சி.ஐ.டி. போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்தது. அதன்பேரில் இந்த வழக்கை சி.ஐ.டி. டிஎஸ்பி கனகலட்சுமி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வந்தார்கள்.

இதில் 5 தனியார் நிறுவனங்களுக்கு இந்த முறைகேடு பணம் சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்யப்பட்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதில் பெங்களூர் பத்மநாபநகர் ராகவேந்திரா லே-அவுட்டை சேர்ந்த பெண் வக்கீலான 34 வயதாகும் ஜீவா என்பவரின் நிறுவனத்துக்கும் பணப்பரிமாற்றம் செய்யப்பட்டதாகவும், ஜீவாவின் வங்கி கணக்கில் ரூ.7.16 கோடி டெபாசிட் செய்யப்பட்டதாகவும் சொல்லப்பட்டது.
இதனால் இது தொடர்பாக பெங்களூர் வக்கீல் ஜீவாவை பிடித்து டிஎஸ்பி கனகலட்சுமி விசாரணை நடத்தினார். விசாரணை முடிந்து வீடு திரும்பிய வக்கீல் ஜீவா உயிரை மாய்த்துக் கொண்டார். கடந்த 2024-ம் ஆண்டு நவம்பர் மாதம் 22-ந்தேதி இந்த சம்பவம் நடந்திருந்தது. கடைசி நேரத்தில் 13 பக்க உருக்கமான கடிதம் எழுதி வைத்திருந்தார்.
அந்த கடிதத்தில் போவி வாரிய முறைகேடு தொடர்பாக என்னை விசாரிக்க அழைத்து டிஎஸ்பி கனகலட்சுமி அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டியிருந்தார். விசாரணை என்ற பெயரில் என் ஆடைகளை களைத்து துன்புறுத்தினார். இந்த வழக்கில் எனக்கு தொடர்பு இல்லாத நிலையில் என்னிடம் ரூ.25 லட்சம் லஞ்சம் கேட்டும் தொல்லையும் தந்தார். எனது சாவுக்கு டிஎஸ்பி கனகலட்சுமி தான் காரணம் என குறிப்பிட்டு இருந்தார். இந்த விவகாரம் காங்கிரஸ் அரசுக்கு பெரும் பிரச்சனையாக மாறியது.
இந்த சம்பவம் தொடர்பாக பனசங்கரி போலீசார் வழக்குப்பதிவு செய்தார்கள். மேலும் பெண் வக்கீல் ஜீவாவின் தற்கொலை சம்பவம் பற்றி விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு (எஸ்.ஐ.டி.) அமைத்து கர்நாடக அரசு உத்தரவு பிறப்பித்தது. அதன்படி சிறப்பு புலனாய்வு குழு போலீசார் வக்கீல் ஜீவா வழக்கில் சி.ஐ.டி. துணை போலீஸ் சூப்பிரண்டு கனகலட்சுமி தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்தும், அவர் வக்கீலை துன்புறுத்தியது தொடர்பான குற்றச்சாட்டு குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், வக்கீல் ஜீவா வழக்கில் தொடர்பு இருப்பதாக கருதிய சிறப்பு புலனாய்வு குழுவினர், சி.ஐ.டி. டிஎஸ்பி கனகலட்சுமியை நேற்று அதிரடியாக கைது செய்தனர். வக்கீல் ஜீவாவை அவமானப்படுத்தியும், மனதளவில் தொல்லை கொடுத்தும் உயிரை மாய்த்துக் கொள்ள தூண்டிய புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ஏற்கனவே 2 முறை விசாரணைக்கு ஆஜரான நிலையில் நேற்றும் விசாரணைக்கு ஆஜராக அவருக்கு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. அதன்படி விசாரணைக்கு ஆஜரான கனகலட்சுமி, சிறப்பு புலனாய்வு குழுவினர் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். அதன்பிறகு அவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)












Click it and Unblock the Notifications