"மொத்தம் 92 மீன்பிடி படகுகள்!" தொடரும் இலங்கை கடற்படை அத்துமீறல்.. மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம்
பெங்களூர்: தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதி உள்ளார்.
இந்தியப் பெருங்கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் அத்துமீறி கைது செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.
இதற்கிடையே சமீபத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 6 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

முதல்வர் கடிதம்
இந்நிலையில், இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதி உள்ளார். இது தொடர்பாகத் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கடந்த 20-7-2022 அன்று ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 6 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (25-7-2022) கடிதம் எழுதியுள்ளார்.

92 படகுகள்
தற்போது தமிழகத்தைச் சேர்ந்த 92 மீன்பிடிப் படகுகள் இலங்கை வசம் உள்ளதாகவும், அவற்றில் சில படகுகள் 2018ஆம் ஆண்டில் சிறைபிடிக்கப்பட்டதால், அவை முற்றிலும் சேதம் அடையக்கூடும் எனத் தெரிவித்துள்ள முதலமைச்சர், படகின் உரிமையாளர்கள் இலங்கை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி அவர்களது படகிற்கான உரிமையைக் கோர வேண்டுமென்ற நிபந்தனையின் பேரில், கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர் என்றும், தற்போது இலங்கையில் நிலவும் சூழ்நிலை காரணமாக அவர்களால் இலங்கை நீதிமன்றத்தில் ஆஜராக முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

நேரில் ஆஜராக விலக்கு
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும், மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க இந்திய அரசின் உயர்மட்ட அளவில் உறுதியான மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கையைக் கோருவதாகவும். இலங்கையில் தற்போது நிலவிவரும் அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு மீன்பிடிப் படகின் உரிமையாளர்கள், இலங்கை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தாம் வலியுறுத்துவதாகவும் முதலமைச்சர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நன்றி
மேலும் இக்கடிதத்தில், கடந்த சில மாதங்களில் கைது செய்யப்பட்ட 18 மீனவர்களைச் சொந்த நாட்டுக்கு அழைத்துவர உதவியதற்கு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சருக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்" என்று கூறப்பட்டு உள்ளது. இந்தியப் பகுதிக்குள் மீன்பிடிக்கும் மீனவர்கள் அத்துமீறி கைது செய்யப்படும் சம்பவங்கள் தொடரும் நிலையில், இதற்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மீனவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications