முஸ்லிம்களின் வாக்குரிமையை பறிக்க வேண்டும்.. கர்நாடகா ஒக்கலிகா ஜாதி மடாதிபதி பேச்சால் கடும் சர்ச்சை!
பெங்களூர்: இந்தியாவில் முஸ்லிம்களின் வாக்குரிமையை பறிக்க வேண்டும் என்று கர்நாடகாவை சேர்ந்த ஒக்கலிகா கவுடா ஜாதி மடாதிபதி சந்திரசேகரநாத் சுவாமி பேசியிருப்பது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. வக்ஃப் வாரிய சொத்து விவகாரத்தில் விவசாயிகளுக்கு கர்நாடகா காங்கிரஸ் அரசு நோட்டீஸ் அனுப்பியதைக் கண்டித்து பெங்களூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சந்திரசேகரநாத் சுவாமி இந்தக் கருத்தை தெரிவித்திருந்தார்.
கர்நாடகா மாநிலத்தின் விஜயாப்புரா, யாதகிரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் கர்நாடகா மாநில காங்கிரஸ் அரசு நோட்டீஸ் அனுப்பியது. அதில் உங்களிடம் உள்ள நிலம் வக்ஃப் வாரியத்துக்கு சொந்தமானது; இந்த நிலத்தை உடனே காலி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இது கர்நாடகா விவசாயிகளை பெரும் அதிர்ச்சியடைய வைத்தது. விவசாயிகளுக்கு ஆதரவாக பாஜக போராட்டத்தில் களமிறங்கியது.

கர்நாடகா மாநில காங்கிரஸ் அரசைக் கண்டித்து பெங்களூரு சுதந்திர பூங்காவில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒக்கலிகா கவுடா ஜாதி மடாதிபதி சந்திரசேகரநாத் சுவாமி பேசுகையில், விவசாயிகளின் நிலத்தை வக்ஃபு வாரியத்துக்கு சொந்தமானது என அரசு கூறுவது அரசியல்தான். வாக்குகளைப் பெறுவதற்காகவே இப்படி அரசியல்வாதிகள் அரசியல் செய்கின்றனர். நமது நாட்டுக்கு நல்ல பெயர் வரவேண்டும் என நினைத்தால் முதலில் முஸ்லிம்களின் வாக்குரிமையை பறித்துவிட வேண்டும். வக்ஃபு வாரியம் என்ற ஒன்றையே ரத்து செய்தாக வேண்டும். அப்போதுதான் இந்த நாட்டு மக்களுக்கு நிம்மதியே கிடைக்கும் என்றார்.
ஒக்கலிகா கவுடா ஜாதி மடாதிபதி சந்திரசேகரநாத் சுவாமியின் இந்த சர்ச்சைப் பேச்சுக்கு முஸ்லிம் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.












Click it and Unblock the Notifications