வாக்கு திருட்டு.. புகார் கொடுத்த டி.கே.சிவகுமார்! ஆதாரம் எங்கே? கேட்கும் தேர்தல் ஆணையம்!
பெங்களூர்: போலி வாக்காளர்கள் குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் கடும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில், கர்நாடகாவில் மகாதேவபுரா சட்டமன்ற தொகுதியில் போலி வாக்காளர்கள் அதிகம் இருப்பதாகவும், அங்கு வாக்காளர் திருட்டு நடந்திருப்பதாகவும் அம்மாநில துணை முதல்வர் டி.கே.சிவகுமார் புகார் அளித்திருந்தார். தற்போது இந்த புகாருக்கு தேர்தல் ஆணையம் ஆதாரம் கேட்கிறது.
பெங்களூருவின் சுதந்திரப் பூங்காவில், "நமது வாக்கு, நமது உரிமை, நமது போராட்டம்" என்ற பெயரில் இன்று காங்கிரஸ் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் அக்கட்சியின் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி கலந்து கொண்டார். இதனையடுத்து கர்நாடக பிரதேச காங்கிரஸ் கமிட்டி சார்பில், மகேதேவபுரா தொகுதியில் வாக்காளர் மோசடி நடந்ததாகக் கூறி தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாருக்குதான் தற்போது ஆணையம் ஆதாரம் கேட்டிருக்கிறது.

மகேதேவபுரா தொகுதியில் மொத்தம் 6.5 லட்சம் வாக்காளர்கள் இருக்கிறார்கள். ஆனால், இதில் சுமார் 1 லட்சம் வாக்காளர்கள் திருடப்பட்ட வாக்காளர்களாக இருக்கிறார்கள் என ராகுல் காந்தி விமர்சித்திருந்தார். குறிப்பாக ஒரே வீட்டில் சுமார் 80 வாக்காளர்கள் வரை இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது. இப்படியானவர்கள் மூலம் 2024 தேர்தலில் மோசடி நடந்திருப்பதாகவும் ராகுல் காந்தி விமர்சித்திருந்தார்.
இந்நிலையில், தேர்தல் ஆணைய அதிகரிகளிடம் அளிக்கப்பட்ட புகார் மனுவில், வேணுகோபால், ரண்தீப் சுர்ஜேவாலா, டி.கே. சிவகுமார் மற்றும் சித்தராமையா ஆகியோர் கையெழுத்திட்டிருந்தனர். இருப்பினும், இந்த குற்றச்சாட்டை முதலில் முன்வைத்த ராகுல் காந்தியும், மல்லிகார்ஜுன கார்கேயும் புகாரில் கையெழுத்திடவில்லை.
புகாரைப் பெற்ற தேர்தல் ஆணையம், புகார் தொடர்பான ஆவணங்களையும், பிரமாணப் பத்திரத்தில் கையெழுத்து போடுமாறும் டி.கே. சிவக்குமாருக்கு கடிதம் அனுப்பியுள்ளது. ஒருவேளை புகார் தவறு என நிரூபணமாகும்பட்சத்தில் சிவகுமார் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications