இப்படி ஒரு நோயா?.. சிறுமியின் வயிற்றுக்குள் கிரிக்கெட் பந்து சைஸில் முடி.. பெங்களூரில் அதிர்ச்சி
பெங்களூர்: பெங்களூரில் சிறுமியின் வயிற்றுக்குள் இருந்த கிரிக்கெட் பந்து அளவிலான முடியை மருத்துவர்கள் பாதுகாப்பாக அகற்றி உள்ளனர். இந்நிலையில், சிறுமியின் வயிற்றுக்குள் அவ்வளவு முடி எப்படி போனது, என்ன பிரச்னை என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரைச் சேர்ந்த சிறுமிக்கு டிரைக்கோபேஜியா என்ற அரியவகை நோய் ஏற்பட்டுள்ளது. இதனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த சிறுமிக்கு அடிக்கடி வாந்தி, பசியின்மை போன்ற பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன. இதனால், சிறுமியின் பெற்றோர் ஏன் இதுபோன்று ஏற்படுகிறது என்று தெரியாமல் குழப்பமடைந்துள்ளனர். என்ன உணவு கொடுத்தாலும் சாப்பிடுவதில்லை, அப்படியே சாப்பிட்டாலும் வாந்தி என்று சிறுமி கடும் அவதிப்பட்டு வந்துள்ளார்.

சிறுமியின் பிரச்னையை சரிசெய்வதற்காக அவரது பெற்றோரும் குழந்தைகள் நல மருத்துவர்கள், பொது மருத்துவர்கள், காது, மூக்கு, தொண்டை நிபுணர்கள் என அனைத்து வகையான மருத்துவர்களிடமும் சென்று பார்த்துள்ளனர். ஆனால், எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை. ஒருகட்டத்தில் சிறுமிக்கு இரைப்பை அழற்சி என்பதை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.
பின்னர், அதற்கேற்ப மருத்துவர்கள் அளித்த மருந்துகளை சிறுமிக்கு பெற்றோர் கொடுக்கத் தொடங்கியுள்ளனர். அப்போதுதான், பெங்களூரில் உள்ள ஆஸ்டரின் குழந்தைகள் மற்றும் பெண்கள் மருத்துவமனையின் மருத்துவர்கள் சிறுமிக்கு டிரைகோபெசோர் இருப்பதைக் கண்டறிந்துள்ளனர். இதில், அவரது இரைப்பைக் குழாயில் முடிகள் குவிந்து கிடப்பது தெரியவந்துள்ளது. கிட்டத்தட்ட கிரிக்கெட் பந்து அளவிலான முடிகள் அவரது வயிற்றுக்குள் இருந்துள்ளன.
டிரைக்கோபெசோர் என்பது குழந்தைகளுக்கு அரிதாக ஏற்படக்கூடிய நோய். இது டிரைக்கோபேஜியாவுடன் தொடர்புடைய நோயாகும். அதாவது முடி உண்ணும் பழக்கமுடைய ஒரு உளவியல் கோளாறு என்று கூறப்படுகிறது. இந்நோய் பெரும்பாலும் இளம்பெண்களுக்கே ஏற்படும். சிறிய குழந்தைகளிடம் இந்நோய் ஏற்படுவது மிகவும் அரிது என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து, குழந்தைகள் அறுவை சிகிச்சை நிபுணர், மூத்த மருத்துவ ஆலோசகருமான மஞ்சிரி சோமசேகர் கூறுகையில், சிறுமியின் வயிற்றுக்குள் இருந்த முடி மிகப்பெரியதாகவும், ஒட்டும் தன்மையுடனும் இருந்தது. இதனால், என்டோஸ்கோப்பி செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. எனவே, லேபரோடமி என்று அழைக்கப்படும் வயிறுப் பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரம் இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இப்பிரச்னையை கண்டறியப்படாமல் விட்டிருந்தால் சிறுமி கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பார் என்றும், ஊட்டச்சத்து குறைபாடு, ரத்த சோகை, வயிற்றில் இருந்து ரத்தப்போக்கு உள்ளிட்டவை ஏற்பட்டிருக்கக் கூடும். அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவருக்கு சிறப்பு உணவுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. தொடர் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
பெங்களூரில் சிறுமியின் வயிற்றுக்குள் இருந்த கிரிக்கெட் பந்து அளவிலான முடியை மருத்துவர்கள் அகற்றியுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications