எடியூரப்பா பயணித்த ஹெலிகாப்டர்.. தரையிறங்கும் போது வந்த சிக்கல்.. அந்த நொடி..பரபரத்த பாஜகவினர்
பெங்களூர்: கர்நாடகாவில் பாஜக மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான எடியூரப்பா சென்ற ஹெலிகாப்டர் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. ஹெலிபேடை சுற்றி கிடந்த பிளாஸ்டிக் சீட்கள் மற்றும் குப்பைகள் காற்றில் பறந்ததால் கடைசி நேரத்தில் அவர் பயணித்த ஹெலிகாப்டர் தரையிறங்காமல் சென்றது. பின்னர் தரைப் பகுதி சுத்தம் செய்த பிறகு ஹெலிகாப்டர் மீண்டும் தரையிறங்கியது.
கர்நாடகாவில் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக பசவராஜ் பொம்மை உள்ளார்.
கர்நாடக சட்டமன்றத்தின் பதவிக்காலம் வரும் மே 24ம் தேதியோடு முடிவடைகிறது. எனவே அங்கு வரும் ஏப்ரல், மே மாதங்களுக்குள் சட்டமன்ற தேர்தல் நடத்தப்படும் எனத்தெரிகிறது.

கர்நாடக தேர்தல் களம்
ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் பாஜக அங்கு தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளது. பிரதமர் மோடி, அமித்ஷா, ஜேபி நட்டா என பாஜகவின் உயர் மட்ட தலைவர்களும் அடிக்கடி கர்நாடக மாநிலத்திற்கு வருகை தந்து வருகின்றனர். மறுபக்கம் காங்கிரஸ் கட்சியும் இழந்த ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்று முனைப்பு காட்டி வருகிறது. தேர்தல் வாக்குறுதிகளாக பல்வேறு கவர்ச்சிகர அறிவிப்புகளையும் காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.

பாஜகவின் யாத்திரைகள்
அதேபோல், ஜனதாதளம்(எஸ்) , அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி கட்சியும் தற்போதே வியூகம் வகுத்துள்ளன. கர்நாடகாவுக்கு இன்னும் தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையில் கட்சியினர் தேர்தல் பணியை தொடங்கி உள்ளனர். இதனால் அங்கு தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. இதற்கிடையே, தேர்தலை கருத்தில் கொண்டு கர்நாடகாவில் பாஜக மாநிலம் முழுவதும் யாத்திரைகளை நடத்தி வருகிறது. பாஜகவின் மூத்த தலைவர்கள் இந்த யாத்திரையில் பங்கேற்று வருகின்றனர்.

ஹெலிகாப்டரில் சென்ற எடியூரப்பா
ஜனசங்கல்ப யாத்திரை என்ற பெயரில் பாஜகவின் மூத்த தலைவர்கள் பல்வேறு இடங்களில் கட்சி தொண்டர்களையும் மக்களையும் சந்தித்து வருகின்றனர். இந்த யாத்திரையில் கலந்து கொள்வதற்காக கர்நாடக பாஜகவின் மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான எடியூரப்பா கல்புர்க்கி மாவட்டத்திற்கு சென்றார். எடியூரப்பா வந்த ஹெலிகாப்டர் கல்புர்க்கியில் உள்ள ஜெவார்கி பகுதியில் உள்ள ஒரு மைதானத்தில் தரையிறங்குவதாக இருந்தது.

தரையிறங்கும் போது பலத்த காற்று
அதன்படி, தரையிறங்கும் போது ஹெலிகாப்டரால் பலத்த காற்று ஏற்பட்டு தரையில் கிடந்த பிளாஸ்டிக் பொருட்கள் பறந்தன. சினிமா பைட் சீன்களில் பறப்பது போல அங்கு கிடந்த பாலிதீன் பைகள் பறந்தன. இதனால் ஹெலிகாப்டர் தரையிறங்குவது ரத்து செய்யப்பட்டது மீண்டும் மேலே சென்றது. உடனடியாக இது குறித்த தகவலும் தெரிவிக்கப்பட்டது. அங்கிருந்த பாதுகாப்பு ஊழியர்கள் தரையில் கிடந்த பிளாஸ்டிக் பொருட்களையும் குப்பைகளையும் அகற்ற ஏற்பாடு செய்தனர். அதன்பிறகு ஹெலிகாப்டர் மீண்டும் அதே மைதானத்தில் பத்திரமாக தரையிறங்கியது.

துரிதமாக செயல்பட்ட விமானி
இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. தரையில் கிடந்த குப்பைகளால் ஹெலிகாப்டர் தரையிறங்க முடியாத ஏற்பட்ட நிலை குறித்து அப்பகுதியில் மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசிக்கொண்டனர். விமானி உரிய நேரத்தில் ஹெலிகாப்டர் தரையிறங்குவதை ரத்து செய்து விட்டதாகவும், இல்லாவிடில் ஏதேனும் அசம்பாவிதம் கூட ஏற்பட்டு இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் பேசுவதை காண முடிந்தது.












Click it and Unblock the Notifications