ஆரம்பிச்சிட்டாரு தேவகவுடா! எத்தனை வருஷம் வாழ்வேன்னு தெரியல, பேரனை ஜெயிக்க வைங்க! கண்ணீருடன் பிரசாரம்
பெங்களூர்: தாம் இன்னும் எத்தனை ஆண்டுகள் வாழ்வேன் என தெரியவில்லை; என்னுடைய பேரன் பிரஜ்வல் ரேவண்ணாவை தேர்தலில் ஜெயிக்க வைக்க வேண்டும் என முன்னாள் பிரதமரும் மதச் சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் நிறுவனருமான தேவகவுடா கண்ணீர் மல்க பிரசாரம் செய்தார்.
கர்நாடகாவில் நாளை மறுநாள் முதல் கட்ட லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. கர்நாடகாவில் 14 தொகுதிகளில் முதல் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகன் குமாரசாமி மண்டியா தொகுதியிலும் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா ஹாசன் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

ஹாசன் தொகுதியில் பேரன் பிரஜ்வல் ரேவண்ணாவுக்காக தாத்தா தேவகவுடா 91 வயதிலும் தீவிர பிரசாரம் செய்து வருகிறார். ஹாசன் மாவட்டம் சத்திகரஹள்ளியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் தேவ கவுடா பேசியதாவது: காவிரி நதிநீர் பிரச்சனையில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அநீதி இழைக்கிறார். கர்நாடகாவின் 28 தொகுதிகளிலும் பாஜகவை வெல்ல வைப்போம். அப்போதுதான் காவிரி பிரச்சனைக்கு பிரதமர் மோடியால் தீர்வு காண முடியும்.
91 வயதாகும் நான் இன்னும் எத்தனை ஆண்டுகள் வாழ்வேன் என தெரியாது. என் உயிர் உள்ளவரை கர்நாடகா விவசாயிகளுக்காகவே பாடுபடுவேன் என்றார். அப்போது கண்ணீர் விட்டார் தேவகவுடா. உடனே கூட்டத்தினரும் நிர்வாகிகளும் தண்ணீரை குடித்துவிட்டு பேசுங்க என்றனர். கண்ணீரை துடைத்துக் கொண்டபடியே பேசிய பேரன் பிரஜ்வல் ரேவண்ணாவை வெற்றி பெற வைக்க வேண்டும் என வாக்கு சேகரித்தார்.
யார் இந்த பிரஜ்வல் ரேவண்ணா?: நாட்டின் இளம் எம்பிக்களில் ஒருவர். 2019-ல் ஹாசன் லோக்சபா தொகுதியில் இருந்து எம்பியாக வென்றவர். ஆனால் 2019 தேர்தலின் போது தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் தவறான சொத்து விவரங்களை தெரிவித்தார் என்ற வழக்கில் அவரை எம்பி பதவியில் இருந்து நீக்கி கர்நாடகா உயர்நீதிமன்றம் 2023-ல் தீர்ப்பளித்திருந்தது. இவரது தந்தை ரேவண்ணா, கர்நாடகா அமைச்சராகப் பணியாற்றியவர். தேவகவுடாவின் மூத்த மகன் தான் ரேவண்ணா. முன்னாள் முதல்வர் குமாரசாமியின் அண்ணன் மகன் பிரஜ்வால். குமாரசாமி மகன் நிகில் குமாரசாமியும் ஏற்கனவே அரசியலில் இருக்கிறார். 2019 லோக்சபா தேர்தலில் நிகில் குமாரசாமி தோற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
