ஹிஜாப் தடை மாணவிகளுக்கு மன அழுத்தத்தை தருகிறது.. வழக்கறிஞர் வாதம்.. விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு!
பெங்களூர்: ஹிஜாப் வழக்கு முடியும் வரை இஸ்லாமிய மாணவிகளை வெள்ளிக்கிழமை மட்டுமாவது ஹிஜாப் அணிந்து வகுப்பிற்கு வர அனுமதிக்க வேண்டும் என்று இஸ்லாமிய மாணவிகளுக்கு ஆதரவாக தாக்கல் செய்யப்பட்ட போது நல மனுவில் கோரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த வழக்கில் நாளை அரசு தரப்பு வாதம் வைக்க உள்ளது.
கர்நாடகாவில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து பள்ளிகள் மற்றும் பியு கல்லூரிகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய மாணவிகள் பலர் இதற்கு எதிராக கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர்.
இதுநாள் வரை இந்த வழக்கில் மாணவிகள் சார்பாக நான்கு வெவ்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு வாதம் வைக்கப்பட்டது. மூத்த வழக்கறிஞர் தேவ்தத் காமத் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் மாணவிகள் சார்பாக வாதம் வைத்தனர். ஹிஜாப் அணிவது மத வழக்கங்களின், நம்பிக்கைகளில் ஒன்று. மத நம்பிக்கையை பின்பற்று முழு சுதந்திரம் கொடுத்து ஒரு நிர்வாகத்தின், நாட்டின் கடமை என்று வாதம் வைக்கப்பட்டது.

4 மனுக்கள்
இந்த நிலையில் இன்று மேலும் 4 மனுக்கள் மீது வாதம் நடந்த அவை கூடியது. இஸ்லாமிய மாணவிகள் பலர் இதற்கு எதிராக கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ரித்து ராஜ் அஸ்வதி, நீதிபதிகள் கிருஷ்ணா தீட்சித், ஜெஎம் காஸி ஆகியோர் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்து வருகிறது. இன்று பொது நல மனு சார்பாக வழக்கறிஞர் ரஹமத்துல்லா கோத்வால் வாதம் செய்தார்.

பொது நல வழக்கு
ஆனால் இதில் பொது நல வழக்கு முறையாக பதிவு செய்யப்படவில்லை என்று மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து வினோத் குல்கர்னி என்ற வழக்கறிஞர் இஸ்லாமிய மாணவிகளுக்கு ஆதரவாக பொது மனு நல தாக்கல் செய்து இருந்தார். அவர் இன்று தனது வாதத்தில், ஹிஜாப் தடை காரணமாக இஸ்லாமிய மாணவிகள் இடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. இது இஸ்லாமிய மாணவியர் இடையே ஒரு விதமான பயத்தை, மன ரீதியான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

மன பாதிப்பு
ஒருவரின் மன ரீதியான ஆரோக்கியத்தை காப்பது என்பது அரசின், நிர்வாகத்தின் கடமை. எனவே ஹிஜாபை அனுமதிக்க வேண்டும். குறைந்தது வழக்கு முடியும் வரை வெள்ளிக்கிழமைகளில் மட்டுமாவது ஹிஜாப் அணிய அனுமதிக்க வேண்டும். குரானில் ஹிஜாப் அணிய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதை இந்த நீதிமன்றம் மதிக்க வேண்டும் என்று வாதம் வைத்தார். இதையடுத்து வேறு சில மனுக்கள் மீது வாதம் செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டன.

நாளை ஒத்தி வாய்ப்பு
ஆனால் அரசு தரப்பு வழக்கறிஞரை வாதம் செய்யும்படி நீதிபதிகள் குறிப்பிட்டனர். இதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர் பிரபுலிங் நவாடாகி, 4 மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் பேசி உள்ளனர். எல்லோருக்கும் பதில் அளிக்க வேண்டும். அதனால் நாளை வரை நேரம் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் நாளை அரசு தரப்பு வாதம் செய்ய வேண்டும் என்று கூறி விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தனர்.












Click it and Unblock the Notifications