ருத்ராட்சம் போல் ஹிஜாப்பும் மத நம்பிக்கை! மாணவிகளின் வழக்கறிஞர் பளீர்.. விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு
பெங்களூர்: நான் என் பள்ளி நாட்களில் வகுப்பிற்கு ருத்ராட்சம் அணிந்து சென்றேன் அதை யாரும் தடுக்கவில்லை, நீதிபதிகள் கூட ருத்ராட்சம் அணிந்து வருகிறார்கள், அதேபோல் ஹிஜாப்பும் ஒரு மத நம்பிக்கை என்பதால் அதை அனுமதிக்க வேண்டும் என்று இஸ்லாமிய மாணவிகள் தரப்பு வழக்கறிஞர் தேவ்தத் காமத் இன்று கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வாதம் வைத்தார்.
கர்நாடகாவில் ஹிஜாப்பிற்கு எதிரான போராட்டங்கள் பல இடங்களில் நடந்து வருகிறது. அங்கு இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து பள்ளிகள் மற்றும் பியு கல்லூரிகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமிய மாணவிகள் பலர் இதற்கு எதிராக கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ரித்து ராஜ் அஸ்வதி, நீதிபதிகள் கிருஷ்ணா தீட்சித், ஜெஎம் காஸி ஆகியோர் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்து வருகிறது. இன்று இந்த வழக்கில் கர்நாடக குந்தபுரா இஸ்லாமிய மாணவிகள் சார்பாக மூத்த வழக்கறிஞர் தேவ்தத் காமத் ஆஜர் ஆனார்.

இன்று நடந்த விசாரணையில்
மாணவிகள் தரப்பு வழக்கறிஞர் தேவ்தத் காமத்: ஹிஜாப் அணிவதை தடை செய்ய பொது ஒழுங்கை அரசு காரணமாக குறிப்பிட்டுள்ளது. ஆனால் ஹிஜாப் காரணமாக யாருக்கும் தீங்கு நேரவில்லை. பொது ஒழுங்கிற்கு பாதிப்பு ஏற்படாத நிலையில் மக்களின் தனிப்பட்ட உரிமைகளில் அரசு தலையிட முடியாது. ஹிஜாப்பில் யாருடைய அமைதிக்கும் குந்தகம் ஏற்படவில்லை.
மாணவிகளின் மத உரிமைகளில் தலையிடுவது சமுதாயத்தில் தவறான உதாரணங்களை ஏற்படுத்த கூடும். சட்ட விதி 25ன் படி ஒருவர் தங்களின் மத உரிமைகளை, நம்பிக்கைகளை பின்பற்றுவதை தடுக்க முடியாது. ஆனால் வேண்டுமென்றே ஒருவர் தனது மதத்தை காரணம் இன்றி "show" சட்ட விதி 25 எந்த விதமான சுதந்திரமும் வழங்கவில்லை.

அடிப்படை உரிமை
உதாரணமாக நான் பள்ளிக்கு சென்ற போது ருத்ராட்சம் அணிந்து இருந்தேன். இதை யாரும் தடுக்கவில்லை. நான் என் மதத்தை show செய்ய இப்படி செல்லவில்லை. மாறாக ருத்ராட்சம் மீது எனக்கு நம்பிக்கை இருந்தது. பல நீதிபதிகள் இப்போதும் கூட ருத்ராட்சம் அணிகிறார்கள். அவர்கள் தங்கள் மதத்தை வெளியே காட்டிக்கொள்வதற்காக இப்படி அணியவில்லை. அது அவர்களின் நம்பிக்கை.
அப்படித்தான் ஹிஜாப் அணிவதும். அது அவர்களின் நம்பிக்கை. அதை சட்ட விதி 25 பாதுகாக்கிறது. ஆனால் அதற்கு போட்டியாக மதத்தை காட்ட வேண்டும் என்று மற்றவர்கள் ஷால் அணிவது தவறான முன் உதாரணம். அதில் மத நம்பிக்கை இல்லை. மாறாக மதத்தை காட்ட வேண்டும் என்ற ஒரே நோக்கம் மட்டுமே உள்ளது. இப்படி ஷால் அணிய வேண்டும் என்று ஏதாவது வேதத்தில், உபநிடதத்தில் இருந்தால் அதை அவர்கள் பின்பற்றுவதில் தவறு இல்லை. ஆனால் அப்படி விதி இருப்பதாக தெரியவில்லை என்று குறிப்பிட்டார்.

ருத்ராட்சம்
அதாவது ஹிஜாப் என்பது மத ரீதியான நம்பிக்கை, ஆனால் காவி ஷால் என்பது மத ரீதியாக இருக்கும் வழக்கமோ, நம்பிக்கையோ இல்லை.. அது ஹிஜாப்பிற்கான எதிர் வாதம் என்று காமத் வாதத்தில் குறிப்பிட்டார் .
மேலும் வாதத்தை தொடர்ந்த தேவ்தத் காமத் : ஒருவரின் மாட்ச் நம்பிக்கையை காரணம் காட்டி அவர்களின் கல்வியை மறுக்க முடியாது. அது தவறான முன்னுதாரணத்தை கொடுக்கும்.
நீதிபதிகள்: நேற்று இந்த வழக்கில் சர்வதேச நீதிமன்ற தீர்ப்புகளை உதாரணம் காட்டுவதாக சொன்னீர்களே?
மாணவிகள் தரப்பு வழக்கறிஞர் தேவ்தத் காமத்: தென்னாப்பிரிக்காவில் தென்னிந்திய இந்து பெண் ஒருவர் வகுப்பில் மூக்குத்தி அணிய தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக வழக்கு தொடுத்தார். அதில் நீதிபதிகள் மாணவிக்கு ஆதரவாக உத்தர விட்டனர். இதில் மாணவியை தடை செய்த பள்ளி நிர்வாகம், அந்த மாணவி மூக்குத்தி அணிந்தால் மற்றவர்களும் அதேபோல் உடலில் வளையங்கள் போட வாய்ப்பு உள்ளதாக வாதம் வைத்தது.

தென்னாபிரிக்க வழக்கு
ஆனால் நீதிபதிகள் அந்த வழக்கில், வேறு ஒருவர் இப்படி வளையம் போடுவார் என்பதற்காக இன்னொருவரின் மத நம்பிக்கையை நாம் தடுக்க முடியாது என்று உத்தரவிட்டனர். இந்த ஹிஜாப் வழக்கிலும் அதுதான் விஷயம். வேறு சிலர் ஷால் அணிந்து வருகிறார்கள் என்பதற்காக ஹிஜாப் அணியும் உரிமையை தடுக்க முடியாது.
அதேபோல் கனடா நீதிமன்றம் சீக்கியர் ஒருவர் வகுப்பில் டர்பன் அணிய அனுமதி அளித்தது தொடர்பான தீர்ப்பு பற்றியும் விவரித்தார்.

மத சார்பற்ற நாடு
இந்த நாடுகள் மத ரீதியான நாடுகள் அல்ல, மத சார்பாற்ற நாடுகள். இந்தியாவிலும் மத ரீதியான உரிமைகளை, பிறர் வன்முறையில் ஈடுபடுவார்கள் என்று கூறி தடுக்க முடியாது.
நான் ரோட்டில் நடப்பதை சிலர் எதிர்க்கலாம். அதற்காக நான் சாலையில் நடக்க கூடாது. அது பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் என்று அரசு தடுக்க முடியாது. அப்படித்தான் ஹிஜாப்பும் என்று மாணவிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தேவ்தத் காமத் வாதம் வைத்தார்.
Recommended Video

நீக்க வேண்டும்
இதனால் கர்நாடக உயர் நீதிமன்றம் போட்ட இடைக்கால உத்தரவை நீக்க வேண்டும். மத அடையாளத்தோடு செல்ல கூடாது என்ற உத்தரவு அடிப்படை உரிமைக்கு எதிரானது என்று மாணவிகள் தரப்பு வழக்கறிஞர் காமத் குறிப்பிட்டார். இதையடுத்து இன்னொரு மாணவி தொடுத்த மனுவில் வேறு ஒரு வழக்கறிஞர் வாதம் செய்தார். ஆனால் அவர்கள் முறையாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்யாததால் விசாரணை நாளை நடக்கும் என்று கூறி வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications