ஜெயநகர், இந்திரா நகர்.. ஐடி புரட்சியால் உருமாறிய பெங்களூர் முகம்!
பெங்களூர்: பெங்களூர் இந்திரா நகரம் இன்று ஐடி ஊழியர்கள் பொழுதுபோக்கும் நம்பர் 1 இடமாக மாறியிருக்கிறது. பப்கள், உணவகங்கள், மெட்ரோ ரயில்கள் மற்றும் வணிக நிறுவனங்களால் சூழ்ந்த இந்த பகுதி, 62 வயதான ஜெயலட்சுமி என்பவருக்கு 50 வருடங்களாக அறியப்பட்ட பகுதி. நம்ம கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் நீண்ட காலமாக இருப்பதும் இதே பகுதிதான். தமிழர்கள் கணிசமாக வாழும் அல்சூர், விவேக் நகர் போன்ற இடங்களுக்கு பக்கத்து ஏரியா. பெங்களூரின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது.
1977-ல் அல்சூரில் இருந்து இந்திரா நகரம் 12வது மெயினுக்கு குடிபெயர்ந்தாராம் ஜெயலட்சுமி. இந்த பகுதியில் அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் அப்போது வீடு இருந்ததாம். "அப்போது இந்திரா நகர் என்பது கிராமத்துக்கு சமமான சூழல். நாங்கள் இரவு 6 மணிக்குப் பிறகு வீட்டிற்கு வரவே பயந்தோம்," என்கிறார் ஜெயலட்சுமி.

1980களில் இந்திரா நகரில், கிராஸ் வீதிகள் உருவாக்கப்பட்டதுடன், விவசாய நிலங்கள் வீட்டடி நிலங்களாக மாற்றப்பட்டன. அதன்பின், 2000களில் ஐடி தொழில் வளர்ந்து, இந்திரா நகரத்தின் தன்மையும் வேறு மாதிரி மாறிவிட்டதாம்.
வர்த்தக மயமாக்கலின் தாக்கம்
இந்திரா நகரம் போன்ற பகுதிகளில் தனியார் வீடுகள் உயர்மாடிக் கட்டிடங்களாக மாற்றப்பட்டதால், போக்குவரத்து நெரிசல், கழிவு நீர் அகற்றம் போன்ற பல சிக்கல்கள் அதிகரித்துள்ளன. "நாங்கள் குடியிருப்பு பகுதியாக கருதி நிலம் வாங்கி வீடு கட்டிய, 12வது மெயின் சாலை, இப்போது, முழுக்க வர்த்தக நிறுவனங்களால் சூழப்பட்டு விட்டது. முந்தைய அமைதியான சூழல் இப்போது பெருமளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது," என்கிறார் ஜெயலட்சுமி. இந்திரா நகரம் மட்டுமல்ல, ஜெயநகர், ஜேபி நகர் போன்று பெங்களூரில் ஒரு காலத்தில் அமைதியின் சொர்க்கமாக இருந்த பகுதிகள் இப்போது வர்த்தக மையங்களாக மாறியுள்ளன.

"இந்த மாற்றம் நிலத்தின் மதிப்பை 50% முதல் 70% வரை உயர்த்தியுள்ளது. ஆனால், ரொம்ப காலமாக குடியிருக்கும் நாங்கள், போக்குவரத்து நெரிசல் மற்றும் ஒலி மாசு போன்ற சவால்களை சந்திக்கின்றோம்," என்கிறார் கான்கார்ட் நிறுவனத்தின் இயக்குநர் அனில். "குடியிருப்பு பகுதிகள் வணிக பகுதிகளாக மாறுவதால், அந்த ஏரியாவின் பழமை, அழகு மாறுகிறது. பாரம்பரியம் குலைந்து போகிறது. சீரிய திட்டமிடலே இதற்குத் தீர்வு," என்கிறார் நகர்ப்பு திட்டமிடல் நிபுணரான மாத்யூ இதிகுல்லா.
ஒரு காலத்தில் ஜெயநகரில் நடந்துபோகும்போது வெயிலே விழாது. அத்தனை மரங்கள் இருந்தபகுதி. 1980களில் செல்வந்தர்கள் எப்படி வீடு கட்டுவார்களோ அப்படி நிறைய வீடுகளை வரிசையாக பார்க்க முடியும். ஆங்காங்கு காபி மணம் வீசியபடியே இருக்கும். ஆனால் ஐடி துறை வளர்ச்சிக்கு பிறகு, ஆங்காங்கு புதிய கடைகள் முளைத்தன. மரங்கள் வெட்டப்பட்டு சாலை பெரிதாக்கப்பட்டது, மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டது. பழைய அழகு இப்போது அங்கு குறைந்துதான் போயுள்ளது. நிம்மதியாக இருக்கலாம் என ஜெயநகர் போன்ற பழமையான பகுதியில் வீடு வாங்கியவர்கள் இப்போது கடைகளின் பெருக்கத்தால் வண்டிகளை பார்க்கிங் செய்யவே இடமின்றி அங்குமிங்கும் சுற்றுகிறார்கள். எங்கே தள்ளிவிட்டுவிட்டு வீட்டுக்கு நடந்து செல்கிறார்கள்.
இன்னமும் கொஞ்சம் பழமையான அழகை பராமரிக்கும் பகுதிகள் என்றால், பசவனகுடி, மல்லேஸ்வரம் பகுதிகளைச் சொல்லலாம். ஆனால் அங்கும் படிப்படியாக மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் மால்களின் புண்ணியத்தால், புது புது கட்டிடங்கள் முளைத்து அதன் முகத்தை மாற்றித்தான் வருகின்றன. இது பெங்களூரின் பாரம்பரிய பகுதிகளுக்கு மட்டுமல்ல, சென்னைக்கும், ஏன் கோவைக்கும் கூட பொருந்தக்கூடியதுதானே. ஐரோப்பிய நாடுகளைப்போல நமது பாரம்பரியத்தை தக்க வைத்துக்கொண்டே வளர வேண்டுமா, அல்லது பாரம்பரிய பகுதிகளையும் வளர்ச்சிக்காக மாற்றம் செய்ய வேண்டுமா.. உங்கள் கருத்து என்ன மக்களே?












Click it and Unblock the Notifications