கள்ளக்காதல் அட்டகாசம்.. சொல்ல சொல்ல அடங்காத மனைவி.. கணவன் போட்ட புது ஸ்கெட்ச்.. அதிர்ந்த பெங்களூர்
பெங்களூரில் கணவரை பிரிந்து காதலனுடன் வாழ்ந்து வந்த மனைவியை கொன்ற கணவர் கைது
பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூரில் திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்த மனைவியை கணவன் கொடூரமான முறையில் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்தவர் சேக் சுகைல். இவர் பிழைப்புத்தேடி மேற்கு வங்கத்திலிருந்து பெங்களூரு வந்திருக்கிறார். பெங்களூரில் வாடகை வீடு எடுத்து தங்கி வந்துள்ளார். வேலை செட்டான நிலையில் அவரது மனைவி தாப்சின் பாபியனையும் பெங்களூருக்கே அழைத்து வந்திருக்கிறார். பெங்களூரில் எல்லாம் ஓரளவு செட்டாகியுள்ளது. எந்த பிரச்னையும் இன்றி வேலையும் நடந்து வந்திருக்கிறது. இப்படி இருக்கும்போதுதான் தாப்சினுக்கும் அதே ஏரியாவை சேர்ந்த நதீம் என்பவருக்கும் நட்பு ஏற்பட்டிருக்கிறது.
இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறவே இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேச தொடங்கியுள்ளனர். கணவர் சேக் சுகைலின் நடவடிக்கையில் நாட்டமில்லாத தாப்சினுக்கு நதீம் பெரும் ஆறுதலாக இருந்திருக்கிறார். இது இவர்கள் இருவருக்கும் இடையேயான காதலை ஆழமானதாக மாற்றியிருக்கிறது. இப்படியே போய்க்கொண்டிருந்த காதல் விவகாரம் ஒரு கட்டத்தில் சேக் சுகைலுக்கு தெரிய வரவே மனைவியை அழைத்து கண்டித்திருக்கிறார். ஆனால் மனைவியோ இதிலிருந்து பின்வாங்கப்போவதில்லை என்று கூறியுள்ளார்.

ரகசிய தகவல்
இதுதான் இவர்கள் இருவருக்கும் இடையில் சண்டை ஏற்பட மிக முக்கிய காரணமாக இருந்துள்ளது. இதனையடுத்து மனைவியை அழைத்துக்கொண்டு சேக் மீண்டும் கொல்கத்தாவுக்கே சென்றுவிட்டார். கணவனுடன் இருக்கவும் முடியாமல், தன்னுடைய காதலை மறக்கவும் முடியாமல் தாப்சின் உச்சக்கட்ட வேதனை அனுபவித்துள்ளார். இதனையடுத்து கணவருக்கு தெரியாமல் அங்கிருந்து தப்பி சென்றிருக்கிறார். இந்த சம்பவம் நடந்து சுமார் 6 ஆண்டுகள் ஆகியுள்ளன. இதன் பின்னர் ஒரு சில நாட்களுக்கு முன்னர் சேக் சுகைலுக்கு ஒரு தகவல் கிடைத்திருக்கிறது. அதாவது அவரது மனைவி தாப்சின் பெங்களூரில் அவரது காதலர் நதீமுடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறார் என்பதுதான் அந்த தகவல்.

கொலை
இதையடுத்து கொல்கத்தாவிலிருந்து புறப்பட்ட சேக் சுகைல் தனது மனைவியை பெங்களூரில் தேடி வந்திருக்கிறார். இந்த தேடுதலில் தனது மனைவி ஹென்னுரில் அவரது காதலனுடன் வாழந்து வந்ததை கண்டுபிடித்துள்ளார். இவர்களுக்கு 2.5 வயதில் ஒரு குழந்தையும் இருந்திருக்கிறது. இதையெல்லாம் பார்த்து டென்ஷன் ஆன சுகைல் மனைவியை தன்னுடன் அழைத்திருக்கிறார். இந்த அழைப்பை மனைவி தாப்சின் தொடர்ந்து நிராகரித்துள்ளார். பின்னர் இருவருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்திருக்கிறது. இந்த வாக்குவதம் ஒரு கட்டத்தில் மோதலாக வெடிக்கையில், சுகைல் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தாப்சின் கழுத்தை அறுத்திருக்கிறார்.

குழந்தை
இதில் தாப்சின் சம்பவ இடத்திலேயே சரிந்து விழ ரத்த வெள்ளத்தில் துடிதுடித்துள்ளார். அவர் துடித்து இறந்ததை பொறுமையாக பார்த்து உறுதி செய்த சுகையில், தாப்சின்-நதீமுக்கு பிறந்த குழந்தையையும் சரமாரியாக தாக்கியிருக்கிறார். குழந்தையின் அழுகுரல் கேட்டு அக்கம் பக்கத்தினர் அந்த இடத்திற்கு வந்துள்ளனர். இதனை பார்த்த சுகையில் அங்கிருந்து தப்பி சென்றிருக்கிறார். சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் தாப்சினின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதேபோல குழந்தையையும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

கைது
சம்பவம் குறித்து காவல்துறையினர் கூறுகையில், "முன் விரோதம் காரணமாக சுகைல் 6 ஆண்டுகளுக்கு பின்னர் பழிவாங்கியுள்ளார். இதில் தாப்சின் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். குழந்தை தற்போது சிகிச்சையில் இருக்கிறது. இதற்கு காரணமான நபரான சுகைலை பிடிக்க நாங்கள் தனிப்படையை அமைத்தோம். அவர்கள் சில மணி நேரத்திலேயே சுகைலை கைது செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் வேறு யாராவது தொடர்பில் இருக்கிறார்களா? என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகிறோம்" என கூறியுள்ளனர். இந்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications