என்னை கேள்வி கேட்க நீ யார்? நான் பெங்களூரில் பிறந்து வளர்ந்தவள்.. கொந்தளித்த பயோகான் நிறுவனர் கிரண் மசூம்தார்!
பெங்களூர்: பெங்களூரில் செயல்பட்டு வரும் பயோகான் மருந்து நிறுவனத்தின் நிறுவனர் கிரண் மசூம்தார் ஷா, பெங்களூரில் பிறந்து வளர்ந்தவர். சாலை பள்ளங்கள், போக்குவரத்து நெரிசல் குறித்து அரசை அவ்வப்போது விமர்சனம் செய்து வருகிறார். இந்நிலையில் கிரண் மசூம்தார் கர்நாடகாவை சேர்ந்தவரா? என்பது போல்கேள்வி எழுப்பிய நபருக்கு அவருக்கு சுடச்சுட பதிலடி கொடுத்தது அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது.
பெங்களூரில் பயோகான் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. மாத்திரை, மருந்துகளை தயாரிக்கும் இந்த நிறுவனத்தின் நிறுவனராக இருப்பவர் கிரண் மசூம்தார் ஷா. இவர் தான் இந்த நிறுவனத்தை 1978 ம் ஆண்டில் தொடங்கினார்.

இந்த நிறுவனம் தற்போது அமெரிக்கா, ஐரோப்பியா உள்பட 120 நாடுகளுக்கு மாத்திரை, மருந்துகளை ஏற்றுமதி செய்து வருகிறது. நம் நாட்டில் உள்ள முன்னணி மருந்து நிறுவனங்களில் பயோகானும் ஒன்றாகும்.
இந்நிலையில் தான் பெங்களூரில் நிலவும் போக்குவரத்து நெரிசல் மற்றும் குண்டும், குழியுமான சாலை உள்ளிட்டவற்றை சுட்டிக்காட்டி அடிக்கடி கிரண் மசூம்தார் ஷா, அரசை விமர்சனம் செய்து வருகிறார். நகரின் உள்கட்டமைப்பு வசதிகளை சரிசெய்வதில் அரசு அலட்சியம் காட்டுவதை அடிக்கடி அவர் சுட்டிக்காட்டி வருகிறார். தற்போது கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக சித்தராமையா, துணை முதல்வராக டிகே சிவக்குமார் உள்ளார். பெங்களூர் நகர வளர்ச்சி துறையின் அமைச்சராக டிகே சிவக்குமார் தான் உள்ளார்.
இந்நிலையில் தான் கிரண் மசூம்தார் ஷா உள்பட பிற நிறுவனங்களின் தலைமை பொறுப்புகளில் இருப்பவர்கள் குறைகளை சுட்டிக்காட்டும்போது காங்கிரஸ் கட்சியனரால் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்படுவது உண்டு. பாஜக ஆட்சியில் கருத்து தெரிவிக்காமல் காங்கிரஸ் ஆட்சியில் இப்படி கருத்து சொல்கின்றனர் என்று விமர்சித்து வருகின்றனர். அந்த வகையில் தான் ஒருவர் எக்ஸ் பக்கத்தில் கிரண் மசூம்தார் ஷா-வை கடுமையாக விமர்சனம் செய்தார்.
இதற்கு கிரண் மசூம்தார் உரிய முறையில் பதிலடி கொடுத்துள்ளார். அந்த பதிவில், ‛‛"நான் இந்த நகரத்தில் (பெங்களூர்) பிறந்தேன். கடந்த 70 ஆண்டுகளாக என்னுடைய கன்னட கலாசாரத்தை பின்பற்றி இந்த நகரை நேசித்து வருகிறேன். கன்னடம் எனும் அற்புதமான மொழியில் எழுதவும் , படிக்கவும் தெரியும். கர்நாடகா மீதான எனது விசுவாசத்தை கேள்வி கேட்கும் எவருக்கும் நான் பதிலளிக்க வேண்டியது இல்லை. என்றுமே நான் ஒரு பெருமைமிக்க கன்னடிகா" என்று கூறியுள்ளார்.
I was born in this city and have spent seven decades of loving my city, my Kannada culture and can read write n speak this wonderful language. I don’t think I am answerable to anyone who questions my loyalty to Karnataka. I am a proud Kannadiga. https://t.co/qan79ioepZ
— Kiran Mazumdar-Shaw (@kiranshaw) October 22, 2025
அதாவது கிரண் மசூம்தார் ஷா கர்நாடகா அரசை விமர்சித்து வரும் நிலையில் அவரை பற்றியும், கர்நாடகா மற்றும் பெங்களூரின் சிறப்பை அவர் குறைப்பதாக ஒருவர் பதிவிட்டு இருந்தார். மேலும் அவர் கர்நாடகாவை சேர்ந்தவர் இல்லை என்றும் கூறியிருந்தார். அதற்கு தான் கிரண் மசூம்தார் ஷா இந்த பதிலடியை கொடுத்தார். இந்த பதிலடியை தொடர்ந்து அந்த பதிவை டெலிட் செய்துவிட்டு அந்த நபர் சென்றார். இந்த பதிவு தற்போது அதிக கவனம் பெற்றுள்ளது.
முன்னதாக கிரண் மசூம்தார் ஷா முதலமைச்சர் சித்தராமையா, துணை முதல்வர் டிகே சிவக்குமார் உள்ளிட்டோரை சந்தித்து பேசினார். அவர்களுக்கு தீபாவளி வாழ்த்து கூறிய கிரண் மசூம்தார் தனது குடும்பத்தில் நடக்கும் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்கும்படி அழைப்பிதழ் வழங்கினார். இந்த சமயத்தில் டிகே சிவக்குமார் - கிரண் மசூம்தார் ஆகியோர் பெங்களூர் வளர்ச்சி, உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவது பற்றி விவதித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications