“எந்த ரீல்ஸ் மூலம் தவெக வென்றதோ அதன் மூலமே நாமும் வெற்றி பெறுவோம்”.. அதிமுகவினருக்கு எடப்பாடி ஆர்டர்
சென்னை: "எதன் மூலம் தவெக வென்றதோ, அதையே பயன்படுத்தி நாமும் வெல்வோம். இன்ஸ்டா ரீல்ஸ் மூலம் அரசின் தவறுகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்" என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். வாக்குப்பதிவுக்கு முந்தைய கடைசி 3 நாட்களில்தான் வெற்றியை பறிகொடுத்து விட்டோம் என அவர் பேசியுள்ளார்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் முடிவுகள் அதிமுகவுக்கு பலத்த அடியை கொடுத்துள்ளது. தேர்தலில் 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று, அதிமுக மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டது. இதில் 25 அதிமுக எம்.எல்.ஏக்கள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக திரண்டு, தமிழக வெற்றி கழக அரசுக்கு ஆதரவாக நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் வாக்களித்தனர்.

தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியை பிடிக்க முடியாத காரணத்தால் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது கட்சிக்குள்ளேயே கடுமையான அதிருப்திகள் எழுந்துள்ளது. இதன் காரணமாக அதிமுகவில் இருந்து விலகி பலரும் ஆளும்கட்சியான தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து வருகின்றனர்.
இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனையில் இறங்கியுள்ளார். தேர்தல் தோல்வி தொடர்பாகக மாவட்ட வரியாக இந்த ஆலோசனை நடக்கவுள்ளது. முதற்கட்டமாக அதிமுக தலைமை அலுவலத்தில் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது எடப்பாடி பழனிசாமி பேசுகையில், "அதிமுக கட்சியை வலுப்படுத்த ஆரோக்கியமான நடவடிக்கைகள் எடுக்கப்படும். கட்சி நிர்வாகிகள் ஆலோசனைகளை கேட்டு கட்சி தலைமை செயல்படும். வரும் நாட்களில் படிப்படியாக மற்ற மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்படும். அவர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் அளிக்க கட்சி தலைமை உறுதிபூண்டுள்ளது.
தற்போது அதிமுகவில் உள்ள நிர்வாகிகள் யாரும் மனம் தளர வேண்டாம், அதிமுகவுக்கு தேர்தல் தோல்வி என்பது புதிது அல்ல. தோல்வி வந்தபோதெல்லாம் பல்வேறு எதிர்ப்புகளை கட்சி சந்தித்து, அதில் வெற்றி பெற்றுள்ளது. அதுபோல, தற்போதுள்ள பிரச்சனைகளும் சரிசெய்யப்பட்டு, அதிமுக கட்சி மீண்டும் பலமான கட்சியாக, தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கும் சக்தியாக மாறும். அதற்கு அனைவரும் இணைந்து ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும்.
சமூக வலைதளங்களை சரியாக கையாளாததே நமது தோல்விக்கு காரணம். சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவுக்கு கடைசி 3 நாட்களில் தான் நாம் வெற்றியை இழந்துள்ளோம். எதன் மூலம் தவெக வென்றதோ அதன் மூலமே நாமும் வெல்ல வேண்டும். சமூக வலைதள செயல்பாடுகளை அதிகரிக்க வேண்டும். இன்ஸ்டா ரீல்ஸ் மூலம் அரசின் தவறுகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். தவெகவின் வெற்றி நிலையானது அல்ல. அடுத்து எப்போது தேர்தல் வந்தாலும் நாம்தான் வெற்றி பெறுவோம். தவெக நமக்கு எதிரி அல்ல திமுகதான் நமக்கு உண்மையான எதிரி." எனப் பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications