கர்நாடகா முதல்வராகும் மல்லிகார்ஜூன கார்கே? சித்தராமையா - டிகே சிவக்குமார் மோதலால் பெரிய ட்விஸ்ட்!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகாவில் முதல்வர் பதவியை தக்கவைக்க சித்தராமையாவும், முதல்வர் பதவியை எட்டிப்பிடிக்க துணை முதல்வர் டிகே சிவக்குமாரும் போராடி வருகின்றனர். இருவருக்கும் இடையே திரைமறைவில் அதிகார போட்டி நடந்து வரும் நிலையில் தான் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக இருக்கும் மல்லிகார்ஜூன கார்கே கர்நாடகா முதல்வராக பொறுப்பேற்க உள்ளாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

கர்நாடகாவில் கடந்த 2023ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. முதல்வர் பதவிக்கு மூத்த தலைவர் சித்தராமையா, கர்நாடகா காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் முதல்வர் பதவி சித்தராமையாவிற்கு வழங்கப்பட்டது.

if-mallikarjun-kharge-becomes-karnataka-cm-we-will-welcome-says-minister-parameshwara

டிகே சிவக்குமார் காங்கிரஸ் மாநில தலைவர் பதவியோடு, துணைமுதல்வராக பொறுப்பேற்றார். மேலும் இரண்டரை ஆண்டு ஆட்சிக்கு பிறகு டிகே சித்தராமையா தனது முதல்வர் பதவியை டிகே சிவக்குமாருக்கு விட்டு கொடுப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை.

டிகே சிவக்குமார் தரப்பு போர்க்கொடி

இந்த விஷயத்தில் கடந்த ஆண்டு இறுதியில் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில் மேலிடம் தலையிட்டு சமாதானம் செய்து வைத்தது. இப்போது சித்தராமையா 3 ஆண்டு ஆட்சியை முதல்வராக நிறைவு செய்ய உள்ளார். இந்நிலையில் தான் தற்போது மீண்டும் டிகே சிவக்குமார் தரப்பினர் அவரை முதல்வராக்க வேண்டும் என்று கூறிவருகின்றனர்.

அதோடு சமீபத்தில் டிகே சிவக்குமார் டெல்லி சென்று மேலிட தலைவர்களை சந்தித்து பேசினார். இதனால் டிகே சிவக்குமார் மீண்டும் முதல்வர் பதவி கோரி போர்க்கொடி உயர்த்துவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதேவேளையில் முதல்வர் பதவியை தக்க வைக்க சித்தராமையாவும் காய் நகர்த்தி வருகிறார்.

முதல்வராகும் மல்லிகார்ஜூன கார்கே?

இப்படியான சூழலில் தான் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக இருக்கும் மல்லிகார்ஜூன கார்கே கர்நாடகா முதல்வராகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் மல்லிகார்ஜூன கார்கே கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர். அதுமட்டுமின்றி அவர் நீண்டகாலமாக கர்நாடகா அரசியலில் அனுபவம் கொண்டவர். 9 முறை குர்மித்கல் என்ற சட்டசபை தொகுதியில் தொடர்ந்து போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பிறகு 2009ல் லோக்சபா தேர்தலில் கலபுரகி தொகுதியில் போட்டியிட்டு எம்பியானார். அதன்பிறகு 2014ல் வென்றவர் 2019ல் தோல்வியடைந்தார்.

மல்லிகார்ஜூன கார்கேவின் அரசியல் அனுபவத்தை வைத்து பார்த்தால் அவர் கர்நாடகா முதல்வராக இருந்து இருக்க வேண்டும். ஆனால் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. தலித் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதாக கூறப்படுவதும் உண்டு. இந்நிலையில் தான் தற்போது சித்தராமையா, டிகே சிவக்குமார் ஆகியோரின் அதிகார போட்டிக்கு நடுவே மல்லிகார்ஜூன கார்கே முதல்வரானால் அவரை ஆதரிக்க தயார் என்று கர்நாடகாவில் இருந்து குரல் எழும்பி உள்ளது.

உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் விருப்பம்

இதுதொடர்பாக கர்நாடகா உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் கூறியுள்ளதாவது: ''மல்லிகார்ஜுன கார்கே மாநிலத்தின் முதல்வரானால், நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியடைவோம். மிக அதிக அனுபவம் வாய்ந்த மூத்த அரசியல் தலைவர் கார்கே. அதனால், அவர் முதல்வரானால் நாங்கள் வரவேற்போம். இருப்பினும் ஊடகங்களில் வெளிவரும் முதல்வர் மாற்றம் குறித்த விவகாரம் குறித்து என்னிடம் குறிப்பிடத் தகுந்த தகவல்கள் எதுவும் இல்லை. எனவே, அது குறித்து நான் பேசுவது சரியாக இருக்காது.

கர்நாடகாவைச் சேர்ந்த கார்கே, காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவராக இருப்பது நமக்கு பெருமை. கார்கே மிகச்சிறந்த அரசியல் அனுபவம் கொண்டவர். அவருக்கு மாநில அரசியல் சூழல் முழுமையாக தெரியும். அவருக்கு யாரும் எதுவும் கற்றுத் தர வேண்டிய அவசியம் இல்லை. அதனால், அவர் முதல்வராக விரும்பினால் நாங்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்போம்'' என்றார்.

யார் இந்த பரமேஸ்வர்?

கர்நாடகாவில் முதல்வர் பதவியை தக்க வைக்க சித்தராமையாவும், முதல்வர் பதவியை எட்டிப்பிடிக்க டிகே சிவக்குமாரும் முயன்று வருகின்றனர். இதற்கிடையே கர்நாடகா உள்துறை அமைச்சராக இருக்கும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பரமேஸ்வர், கார்கே முதல்வராக வர வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார். இதன் பின்னணியில் முக்கிய விஷயம் உள்ளது. அதாவது பரமேஸ்வர் தலித் சமுதாயத்தை சேர்ந்தவர். இவுரும் கர்நாடகாவில் நீண்டகாலமாக காங்கிரஸ் தலைவராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

கர்நாடகாவில் முதல்வர் பதவியை தலித் தலைவருக்கு வழங்க வேண்டும் என்று பரமேஸ்வர் தொடர்ந்து கூறி வருகிறார். மேலும் கடந்த 2023ம் ஆண்டில் பரமேஸ்வரும் முதல்வர் பதவியை பெற காய் நகர்த்தினார். கார்கேவின் தீவிர ஆதரவாளர் என்பதால் அவர் மூலம் காய்நகர்த்தினார். ஆனால் அந்த முயற்சி கைகூடவில்லை. இப்படியான சூழலில்தான் மல்லிகார்ஜூன கார்கே கர்நாடகாவின் முதல்வராக வந்தால் வரவேற்போம் என்று பரமேஸ்வர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+