பாஜக vs பாஜக.. கொரோனா விவகாரத்தில் உட்கட்சியிலிருந்தே "உள்குத்து.." சிக்கிக் கொண்ட எடியூரப்பா
பெங்களூர்: கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு விவகாரத்தில் பாஜக கட்சி முக்கிய தலைவர்களே முதல்வர் எடியூரப்பாவுக்கு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்துள்ளனர். எதிர்க்கட்சிகள் செய்ய வேண்டிய வேலையை அங்கு ஆளுங்கட்சியே செய்து வருகிறது என்பது கடந்த சில நாட்களில் நடைபெறும் நிகழ்வுகளின் மூலமாக தெள்ளத்தெளிவாக தெரிகிறது.
சில நாட்களுக்கு முன்பு கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 24 நோயாளிகள் அநியாயமாக பலியாகினர்.
இந்த சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த, பாஜக தேசிய செயலாளரும், கர்நாடக முன்னாள் அமைச்சருமான சிடி ரவி, இந்த சம்பவம் மன்னிக்க முடியாத குற்றம் என்று தெரிவித்தார்.

பாடம் கற்கவில்லை
யாரெல்லாம் இந்த சம்பவத்தில் குற்றவாளிகளோ, அவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். பிற மாநிலங்களில் ஆக்சிஜன் இல்லாமல் நோயாளிகள் உயிரிழந்த சம்பவத்தை பாடமாக கற்றுக்கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். ஆனால் கர்நாடகா அதைச் செய்யவில்லை. இது மன்னிக்க முடியாத குற்றம் என்று தெரிவித்தார்.

பெங்களூர் மாநகராட்சி
இந்த நிலையில்தான், பெங்களூர் மாநகராட்சி கட்டுப்பாட்டு அறையில் நோயாளிகளுக்கான படுக்கை, புக் செய்வதில் முறைகேடு நடப்பதாக பாஜக எம்பி தேஜஸ்வி சூரியா குற்றஞ்சாட்டியிருந்தார். பெங்களூர் வளர்ச்சி துறை முதல்வர் எடியூரப்பாவின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. மாநகராட்சி பாஜகவால் ஆளப்படுகிறது.

தர்ம சங்கடம்
இப்படியான சூழ்நிலையில் முறைகேடு நடப்பதாக மீடியாவிடம் சென்று தேஜஸ்வி சூர்யா பேட்டி கொடுத்துள்ளது எடியூரப்பா அரசுக்கு மேலும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. பாஜக மூத்த தலைவர்கள் பசவனகவுடா எத்தனால், உமேஷ் கத்தி போன்றவர்களும், கர்நாடக அரசு நிர்வாகத்தை சமீபகாலமாக விமர்சனம் செய்து வரும் முக்கிய தலைவர்களாகும்.

எடியூரப்பா பதவிக்கு குறி
எடியூரப்பாவை முதல்வர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு வேறு ஒருவரை அந்த பதவிக்கு கொண்டுவர வேண்டும் என்று கர்நாடக பாஜகவில் சில தலைவர்கள் விரும்புவதாகவும், அவர்கள்தான் இந்த நெருக்கடிக்கு காரணமாக இருக்கக்கூடும், எதிர்க்கட்சிகள் செய்யும் வேலையை ஆளும் கட்சிப் பிரமுகர்களே செய்ய தொடங்கியுள்ளனர் என்றும் சில அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள். ஆனால், இவர்கள் செய்த விமர்சனத்தில் உள்நோக்கம் கிடையாது என்று சிலரும் கூறுகிறார்கள். எது உண்மை என்பது இன்னும் சில நாட்களில் வெளிப்பட்டுவிடும்.












Click it and Unblock the Notifications