ஜெகதீஷ் ஷெட்டர் அரசியல் வாழ்க்கை அஸ்தமனம்..காரணம் இதுதானாம்..ஜாதக கட்டங்கள் சொல்வதென்ன?
பெங்களூரு: மன்னாதி மன்னர்கள் எல்லாம் மண்ணை கவ்வுவது இப்போது சகஜமாகிவிட்டது. ஆறு முறை எம்எல்ஏவாகவும், திடீர் முதல்வராகவும் தேர்வு செய்யப்பட்டு சில மாதங்கள் கர்நாடக மாநிலத்தில் முதல்வர் நாற்காலியில் அமர்ந்து ஆட்சி செய்தவருமான ஜெகதீஷ் ஷெட்டரின் அரசியல் வாழ்க்கை அஸ்தமனமாகும் சூழ்நிலை உருவாகியுள்ளது. பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜெகதீஷ் ஷெட்டர் இப்போது தோல்வி முகமாக அறியப்பட்டுள்ளார்.
அரசியல் ரீதியாக அவரது தோல்விக்கான காரணங்களை ஆராய்வது ஒருபுறம் இருந்தாலும் ஜோதிட ரீதியாக ஜெகதீஷ் ஷெட்டர் ஜாதகத்தை ஆராயும் போது அவரது தோல்விக்காக அரசியல் அஸ்தமனத்திற்கான காரணம் தெரியவந்துள்ளது.

ஜெகதீஷ் ஷெட்டர் ஜாதகத்தை பார்த்தால் அவர் 1955ஆம் ஆண்டு டிசம்பர் 17ஆம் தேதி பிறந்துள்ளார். கும்ப லக்னம், மகர ராசி, தனுசு ராசியில் சூரியன், சுக்கிரன், புதன்,விருச்சிகத்தில் ராகு, சனி,துலாம் ராசியில் செவ்வாய், ரிஷப ராசியில் கேது, சிம்ம ராசியில் குரு பகவான் என கிரக நிலைகள் உள்ளன.
லக்னத்திற்கு லாப ஸ்தானத்தில் ராஜ கிரகங்கள் இணைந்துள்ளன. தொழில் ஸ்தானத்தில் சனி, ராகு கூட்டணி பாக்ய ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகங்கள் பயணம் செய்வது அவரது பல வழிகளில் உதவி செய்துள்ளது. அதே நேரத்தில் அஷ்டம ஸ்தானத்தில் குருவின் பயணம் பல தடைகளையும் வெற்றியை கொடுத்த நேரத்தில் பறித்துக்கொண்டதும் நிகழ்ந்துள்ளது.
ஜெகதீஷ் ஷெட்டருக்கு இப்போது கோச்சார ரீதியாக கிரக நிலைகள் சரியில்லாத நிலையிலேயே உள்ளன. அதில் லக்னப்படி ஜென்ம சனி நடக்கிறது. ராசிப்படி ஏழரை சனியில் பாத சனி நடக்கிறது. குரு பகவான் தற்போது நான்காம் வீட்டில் பயணம் செய்கிறார் என்றாலும் அவர் ராகு உடன் பயணம் செய்கிறார். சுகத்தை கொடுக்க முடியாத நிலையில் இருக்கிறார் குரு பகவான்.

கிரகங்களின் சாதகமற்ற நிலையினாலே ஷெட்டருக்கு பாஜகவில் போட்டியிட சீட் மறுக்கப்பட்டது. தனது சூழ்நிலையை உணர்ந்து அவர் பாஜகவில் நீடித்திருந்தால் சில ஆண்டுகளில் மிகப்பெரிய பதவியை கூட ஷெட்டர் பெற்றிருக்க முடியும். கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிட தனக்கு வாய்ப்பு வழங்காததால் அதிருப்தியில் இருந்த ஜெகதீஷ் ஷெட்டர் தேர்தலுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அதுதான் அவர் செய்த மிகப்பெரிய தவறு.
பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று ஆறு முறை எம்எல்ஏவாக இருந்த ஜெகதீஷ் ஷெட்டர், கர்நாடக மாநிலத்தில் பாஜக ஆட்சியில் இருந்த போது அமைச்சரவையில் பதவி வகித்தவர். திடீர் முதல்வரானவர் சில மாதங்கள் மட்டுமே முதல்வராக அவரால் நீடிக்க முடிந்தது. எளிமையான தலைவராக அறியப்பட்டவர் ஜெகதீஷ் ஷெட்டர்.
லிங்காயத் சமூகத்தின் முக்கிய தலைவரும், ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் நீண்டகால உறுப்பினருமான ஜெகதீஷ் ஷெட்டர், ஹூப்ளி-தர்வாட் மத்திய தொகுதியில் தனக்கு டிக்கெட் மறுக்கப்பட்டபோது, அதிருப்தியில் பாஜகவில் இருந்து விலகினார்.
1994ஆம் ஆண்டில் ஜெகதீஷ் ஷெட்டர் முதல்முறையாக பாஜக எம்.எல்.ஏவாக வெற்றி பெற்று கட்சியில் முக்கியப் பதவிகளை வகித்துள்ளார் ஷெட்டர். கடந்த 2008 ஆம் ஆண்டில் எடியூரப்பா முதல்வரானபோது கர்நாடக சட்டசபையின் சபாநாயகராகவும் இருந்தார், பின்னர் பதவியை ராஜினாமா செய்து விட்டு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சரானார்.
எடியூரப்பா ஊழல் வழக்கில் சிக்கிய போது லிங்காயத்து வாக்கு வங்கியின் பலத்தைக் காட்டி சதானந்த கவுடாவிற்கும் பின்னர் ஜெகதீஷ் ஷெட்டருக்கும் முதல்வர் பதவியை பெற்றுக்கொடுத்தார். கடந்த 2012 ஆம் ஆண்டு ஜூலை முதல் 2013 மே மாதம் வரை கர்நாடகாவின் 15வது முதல்வராக அவர் பதவி வகித்தார், அப்போது அவருக்கு கிரகங்கள் சாதகமான நிலையில் இருந்தாலேயே எடியூரப்பாவின் ஆதரவுடன் முதல்வராக அரியணையில் அமர முடிந்தது. 2013ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாஜக தோல்வியடையவே மக்களின் தீர்ப்பினை ஏற்று ஜெகதீஷ் ஷெட்டர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். பத்தாண்டுகளில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றம் அவரை பாஜகவில் இருந்தே வெளியேற்றியுள்ளது.
ஹூப்ளி-தர்வாட் மத்திய தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டார் ஜெகதீஷ் ஷெட்டர். எந்த தொகுதியில் பாஜக எம்எல்ஏவாக போட்டியிட்டு வெற்றி பெற்றாரோ அதே தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டார். ஆனால் மக்களின் ஆதரவு அவருக்கு கிடைக்கவில்லை என்பதுதான் சோகம்.
கர்நாடகா மாநில சட்டசபை தேர்தல் கடந்த 10ஆம் தேதி நடைபெற்றது. இன்றைய தினம் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி மெஜாரிட்டிக்கு தேவையான இடங்களைப் பெற்று முன்னிலையில் இருந்தாலும் தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸ் கட்சியில் இணைந்து போட்டியிட்ட ஜெகதீஷ் ஷெட்டர் பின்னடைவை சந்தித்துள்ளார். ஜெகதீஷ் ஷெட்டருக்கு அரசியல் வாழ்க்கை அஸ்தமனமாகிக்கொண்டு வருவதையே இது காட்டுகிறது.












Click it and Unblock the Notifications