கர்நாடகா: நந்தினி VS குஜராத் அமுல்-பாஜக வெற்றி கனவுக்கு "பால்" ?நெருப்புக்கு நெய்வார்த்த அண்ணாமலை!
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலில் குஜராத் அமுல் பால் அறிமுகப்படுத்தப்படும் விவகாரம் மிகப் பெரும் பிரச்சனையாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. கர்நாடகாவில் ஆளும் பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்றலாம் என காணுகிற கனவில் பால் ஊற்றப் போகிறது அமுல் விவகாரம் என்று எச்சரிக்கின்றனர்.
கர்நாடகா சட்டசபை தேர்தல் களம் கோடைவெயிலைவிட அனல் பறக்கிறது. காங்கிரஸ் கட்சி, ஜேடிஎஸ் கட்சி ஆகியவை ஏற்கனவே வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. பாஜக இன்று வேட்பாளர்களை அறிவிக்கக் கூடும் என கூறப்படுகிறது.

கர்நாடகா தேர்தல்களில் ஜாதிய வாக்குகள் மிக முக்கியமானவை. அதேபோல கன்னட பெருமிதம் அல்லது கன்னடர் இன உணர்வு என்பதும் காத்திரமான பங்களிப்பு செய்யக் கூடியது. கர்நாடகாவின் தனித்துவமான அடையாளமாக இருப்பது நந்தினி பால் நிறுவனம். கர்நாடகா பால் கூட்டுறவு அமைப்பின் சார்பாக நந்தினி என்ற பெயரில் பால், பால் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் ஆவின், குஜராத்தில் அமுல் போல கர்நாடகாவில் நந்தினி பால், பால் பொருட்கள் முதன்மையானவை.
நந்தினி பால்: கர்நாடகா பால் கூட்டுறவு அமைப்பது மொத்தம் 16 சங்கங்களைக் கொண்டது. கர்நாடகாவின் 22,000 கிராமங்களில் 24 லட்சம் பேரை உறுப்பினராகக் கொண்டது. கர்நாடகா பால் கூட்டமைப்பானது, இந்தியாவின் 2-வது மிகப் பெரிய கூட்டுறவு சங்கமாகும். கர்நாடகா பால் கூட்டுறவு சங்கங்கள் பெரும்பாலும் காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சிகளின் கட்டுப்பாட்டில் உள்ளவை. கர்நாடகாவில் பாஜக ஆட்சியில் இருந்த காரணத்தால் கர்நாடகா பால் கூட்டுறவு சங்கத் தலைவர் பதவியை பாஜக 2019-ல் கைப்பற்றியது. கர்நாடகா பால் கூட்டுறவு சங்கங்களில் ஜேடிஎஸ், காங்கிரஸ் ஆதரவு அதிகம். பாஜகவுக்கு மிக குறைவான ஆதரவுதான் உள்ளது.
குஜராத் அமுல்: இந்நிலையில்தான் கர்நாடகாவில் குஜாரத் மாநிலத்தை சேர்ந்த இந்தியாவின் முன்னணி பால் நிறுவனமான அமுல் பால், பால் பொருட்கள் அறிமுகம் செய்யப்படும் என்கிற அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பானது கர்நாடகா தேர்தல் களத்தில் பெருநெருப்பாக பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. இந்தி மொழி திணிப்பைப் போல குஜராத்தின் அமுல் பால், பால் பொருட்களை கர்நாடகாவில் திணிப்பதா? என்கிற மாநில சுயாட்சி குரல்கள் ஒரு பக்கம்.. 70 லட்சம் கர்நாடகா விவசாயிகளை காவு கொடுத்துவிட்டு குஜராத் விவசாயிகளை வாழ வைக்கத்தான் அமுல் பொருட்களை அறிமுகம் செய்வதா? என கலகக் குரல்கள் மறுபக்கம்.. இந்த பெருந்தீயை அணைக்க முடியாமல் போராடிக் கொண்டிருக்கிறது கர்நாடகா பாஜக. அதாவது கர்நாடகவின் நந்தினி பால் நிறுவனத்தை அழித்துவிட்டு குஜராத்தின் அமுல் பால் கோலோச்ச போகிறது என்கிற அச்சம் கர்நாடகா விவசாயிகளிடத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒரே தேசம், ஒரே பால், ஒரே குஜராத் என்கிற திட்டத்தை பிரதமர் மோடி செயல்படுத்த முனைகிறார் என்பதும் குற்றச்சாட்டு.
நெய்வார்க்கும் அண்ணாமலை: இதனை கர்நாடகா பாஜக தலைவர்கள் ஒருவழியாக சமாளித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் கர்நாடகா மாநில இணை தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையோ, காங்கிரஸ் ஆட்சியில் தமிழ்நாட்டில் நந்தினி பால் அறிமுகம் செய்யப்பட்டதே என நியாயப்படுத்தி பேசி இருக்கிறார். இது ஒட்டுமொத்த கர்நாடகா அரசியல் தலைவர்களையும் கொந்தளிக்க வைத்திருக்கிறது.
கர்நாடகாவில் இப்போது பால் விவகாரம் போராட்ட வடிவங்களாக வெடித்திருக்கிறது. கர்நாடகா ரக்ஷன வேதிகே அமைப்பினர் நேற்று அமுல் விற்பனைக்கு எதிராகப் போராட்டம் நடத்தினர். கர்நாடகா மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் டிகே சிவகுமார், நந்தினி பால் பொருட்கள் விற்பனையகத்துக்கு சென்று இனிப்புகளை சுவைபார்த்தார். நந்தினி பால் நிறுவனத்துடன் காங்கிரஸ் துணை நிற்கும் என உறுதியளித்தார். கர்நாடகாவில் எப்படியாவது வெல்லலாம் என பாஜக கனவு காண்கிறது.. இந்த கனவில் நந்தினிvs அமுல் விவகாரம் 'பால்' ஊற்றி கதையை முடிக்கப் போகிறது என எச்சரிக்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications