பள்ளிகளை சுற்றி 144 தடை உத்தரவு அமல்; ஹிஜாப் விவகாரத்தால் கர்நாடக அரசு அதிரடி உத்தரவு
பெங்களூர்: ஹிஜாப் சர்ச்சைக்கு மத்தியில் கர்நாடகத்தில் நாளை (பிப்.,14) பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதனால் முன்னெச்சரிக்கையாக பெங்களூரை தொடர்ந்து உடுப்பி மாவட்டத்தில் அனைத்து உயர்நிலை பள்ளிகளை சுற்றி 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு பியூ கல்லூரியில் ஹிஜாப் அணிய எதிர்ப்பு கிளம்பியது. ஹிஜாப்புக்கு ஆதரவாக ஒருதரப்பும், எதிர்ப்பு தெரிவித்து இன்னொரு தரப்பும் போராட்டத்தை முன்னெடுத்தது. இதன் எதிரொலியாக பிற மாவட்ட கல்லூரிகளிலும் போராட்டங்கள் வெடித்தன.
ஹிஜாப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவ, மாணவிகள் காவி ஷால் அணிந்து கல்லூரிகளுக்குள் சென்றனர். இதனால், சில கல்லூரிகளில் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. மேலும் பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் சீருடை அணிய கர்நாடக அரசு உத்தரவிட்டது. இது சர்ச்சைக்குள்ளானது.

ஐகோர்ட்டில் வழக்கு
ஹிஜாப் தடையை எதிர்த்து உடுப்பி மாவட்ட மாணவிகள் கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு கர்நாடக ஐகோர்ட் தலைமை நீதிபதி ரிது ராஜ் அஸ்வதி, நீதிபதிகள் கிருஷ்ணா தீட்சித், ஜெஎம் காஸி ஆகியோர் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டது. இந்த அமர்வு தற்போது விசாரித்து வருகிறது.சில நாட்களுக்கு முன்பு, மாநிலத்தில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள பள்ளி, கல்லூரிகளை திறக்க வேண்டும். வழக்கு நிலுவையில் உள்ளதால் மதம்சார்ந்த ஆடைகள் அணிந்து மாணவ-மாணவிகள் பள்ளி, கல்லூரிகளுக்கு வரக்கூடாது என இடைக்கால உத்தரவை நீதிபதிகள் பிறப்பித்தனர்.

பள்ளி திறப்பு
வழக்கு விசாரணையை பிப்.,14(நாளை)க்கு ஒத்திவைத்தனர். ஆனால் இன்னும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவில்லை. நாளை முதற்கட்டமாக உயர்நிலை பள்ளிகள் 10ம் வகுப்பு வரை திறக்கப்பட உள்ளது. ஐகோர்ட்டில் வழக்கு விசாரணையை பார்த்து பியூ உள்பட டிகிரி கல்லூரிகள் திறப்பது குறித்து முதல் அமைச்சர் பசவராஜ் பொம்மை ஆலோசனை நடத்தி நடவடிக்கை எடுக்க உள்ளார்.

144 தடை உத்தரவு
இந்நிலையில் நாளை பள்ளிகள் திறக்க உள்ளதால் ஹிஜாப் பிரச்னை உருவான உடுப்பி மாவட்டத்தில் அனைத்து உயர்நிலை பள்ளிகளை சுற்றியும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவு நாளை காலை 6 மணி முதல் பிப்., 19 வரை மாலை 6 மணி வரை நடைமுறையில் இருக்கும். ஏற்கனவே பெங்களூரில் உள்ள பள்ளிகள், பியூ, டிகிரி கல்லூரிகள் உள்பட பிற கல்வி நிறுவனங்களை சுற்றியும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

சட்ட நடவடிக்கை
இந்த உத்தரவு பிப்.,22 வரை நடைமுறையில் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் தடை உத்தரவு உள்ள பள்ளி, கல்லூரிகளை சுற்றிய 200 மீட்டர் தூரத்தில் கூட்டம் கூட, ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தவும் கூடாது. மீறினால் போலீசார் சட்ட நடவடிக்கை மேற்கொள்வது உறுதி.












Click it and Unblock the Notifications