என் மனைவிக்கு சீட் கொடுக்கலைன்னா நானும் தேர்தலில் போட்டியிடமாட்டேன்: தேவகவுடா மகன் ரேவண்ணா 'சவுண்டு'
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலில் மனைவி பவானிக்கு சீட் தராவிட்டால் தாமும் தேர்தலில் போட்டியிடப் போவது இல்லை என ஜேடிஎஸ் நிறுவனரும் முன்னாள் பிரதமருமான தேவகவுடாவின் மகன் ரேவண்ணா மிரட்டல் விடுத்துள்ளார்.
கர்நாடகாவில் ஜேடிஎஸ் கட்சி கிங் மேக்கராகவே இருந்து வருகிறது. 1999-ம் ஆண்டு ஜேடிஎஸ் கட்சி தொடங்கப்பட்டது முதலே தனித்து ஆட்சி அமைத்தது இல்லை. பாஜக அல்லது காங்கிரஸுடன் இணைந்து முதல்வர் பதவியை பெற்றுவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறது.

தேவகவுடா குடும்பத்துக்கு ஒக்கலிகா கவுடா வாக்காளர்களிடையே செல்வாக்கு இருப்பதால் ஒவ்வொரு தேர்தலிலும் ஆகக் குறைந்தது 30 இடங்களாவது கிடைத்துவிடுகிறது. இது பிரதான எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், பாஜகவுக்கு நெருக்கடியை தருகிறது. சில தேர்தல்களில் தொங்கு சட்டசபைக்கும் காரணமாகிவிடுகிறது. இதனை பயன்படுத்தி ஜேடிஎஸ் முதல்வர் பதவியையும் பெற்றுவிடுகிறது.
தற்போது 224 சட்டசபை தொகுதிகளுக்கும் மே 10-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலிலும் ஜேடிஎஸ் கணிசமான இடங்களைக் கைப்பற்றும் என்கின்றன கருத்து கணிப்புகள். மேலும் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றலாம் அல்லது மீண்டும் தொங்கு சட்டசபைக்கு சாத்தியம் இருக்கிறது என்றும் கருத்து கணிப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.

ஜேடிஎஸ் கட்சியைப் பொறுத்தவரை ஏற்கனவே 93 வேட்பாளர்களை அறிவித்துவிட்டது. ஆனால் 2-ம் கட்ட வேட்பாளர்களை அக்கட்சியால் அறிவிக்க முடியவில்லை. ஹாசன் சட்டசபை தொகுதி வேட்பாளர் யார் என்பதில்தான் பெரும் முட்டுக்கட்டையே நீடிக்கிறது. ஹாசன் தொகுதி, தேவகவுடா குடும்பத்தின் கோட்டையாகவே கருதப்படுகிறது. கடந்த தேர்தலில் பாஜகவிடம் இத்தொகுதியை பறிகொடுத்தது. இதனால் இம்முறை தேவகவுடாவின் மருமகள் அதாவது மகன் ரேவண்ணாவின் மனைவி பவானி தமக்குதான் ஹாசன் தொகுதி கொடுக்க வேண்டும் இல்லை எனில் சுயேட்சையாகவே போட்டியிடுவோம் என மிரட்டி வருகிறார். இதனை ஜேடிஎஸ் தலைவர் குமாரசாமி ஏற்க மறுக்கிறார்.
இந்த கோதாவில் இப்போது ரேவண்ணாவும் இணைந்துள்ளார். என் மனைவிக்கு ஹாசன் தொகுதி சீட் தராவிட்டால் நான் தேர்தலில் போட்டியிடமாட்டேன் என மிரட்டல் விடுக்கிறார் ரேவண்ணா. இதனால் ஜேடிஎஸ் கட்சியில் உச்சகட்ட குழப்பம் நீடிக்கிறது.












Click it and Unblock the Notifications