கர்நாடகா: அமித்ஷா ராஜினாமா கோரி கலபுரகியில் 'பந்த்- கொடும்பாவி எரிப்பு- இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
பெங்களூர்: அண்ணல் அம்பேத்கரை இழிவுபடுத்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக கர்நாடகா மாஃநிலம் கலபுரகியில் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது. இந்த முழு அடைப்புப் போராட்டத்தின் போது அமித்ஷாவின் கொடும்பாவிகள் எரிக்கப்பட்டன. கலபுரகியில் காலை முதல் மாலை ஹோட்டல்கள், கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் இயல்பு வாழ்க்கை முழுமையாக பாதிக்கப்பட்டன. மேலும் சாலைகளில் பல இடங்களில் டயர்கள் எரித்து வீசப்பட்டு போக்குவரத்து முழுமையாக தடை செய்யப்பட்டிருந்தன.
அரசியல் சாசனம் மீதான நாடாளுமன்ற விவாதத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா, அண்ணல் அம்பேத்கருக்கு எதிராக பேசிய பேச்சுக்கான எதிர்ப்பு இன்று வரை தொடருகிறது. ராஜ்யசபாவில் பேசிய அமித்ஷா, அம்பேத்கர்.. அம்பேத்கர் என கோஷம் போடுவது பேஷனாகிவிட்டது.. அம்பேத்கர் பெயரை உச்சரிக்காமல் கடவுள் பெயரை உச்சரித்திருந்தால் சொர்க்கம் கிடைத்திருக்கும் என பேசினார்.

இத்தகைய இழிவான விமர்சனத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் தொடருகின்றன. ஏற்கனவே நாடாளுமன்றம் முடக்கப்பட்டது. நாடாளுமன்ற வளாகத்திலும் பெரும் மோதல் ஏற்பட்டது. தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அத்துடன் தமிழ்நாட்டுக்கு வரும் 27-ந் தேதி வருகை தரும் அமித்ஷாவுக்கு கறுப்புக் கொடி காட்டும் போராட்டமும் நடத்தப்பட உள்ளது.
இதேபோல கர்நாடகா மாநிலத்திலும் அமித்ஷாவுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. கர்நாடகாவின் கலபுரகி (குல்பர்க்கா) மாவட்டத்தில் பல்வேறு தலித் அமைப்புகள் இணைந்து அமித்ஷா ராஜினாமா செய்ய கோரி நேற்று முழு அடைப்புப் போராட்டம் நடத்தின. இம்மாவட்டத்தில் நேற்று காலை முதல் மாலை வரை முழுமையான பந்த் போராட்டம் நடத்தப்பட்டது.

இந்தப் போராட்டத்தில் அனைத்து மக்களும் பங்கேற்றனர். வர்த்தக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. அரசு, தனியார் பேருந்துகளும் இயக்கப்படவில்லை. கலபுரகி மத்திய பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் தலித் அமைப்பினர் ஒன்று திரண்டு அமித்ஷா ராஜினாமா செய்ய வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர்.
மேலும் அமித்ஷாவின் கொடும்பாவியையும் எரித்தனர். சாலைகளின் நடுவே பல இடங்களில் டயர்கள் எரிக்கப்பட்டு வீசப்பட்டு போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் கலபுரகி மாவட்டத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முழுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தது.













Click it and Unblock the Notifications