காவிரி குறுக்கே மேகதாது அணை- சட்டசபை தீர்மானத்துக்கு கர்நாடகா அமைச்சரவை ஒப்புதல்
பெங்களூரு: காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்ற மாநில சட்டசபை தீர்மானத்துக்கு கர்நாடகா அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதில் கர்நாடகா அரசு உறுதியாக உள்ளது. இது தொடர்பாக மத்திய அரசின் ஒப்புதலைப் பெறுவதில் கர்நாடகா தீவிரம் காட்டுகிறது.

கர்நாடகாவைப் பொறுத்தவரையில் பெங்களூரு மாநகரின் குடிநீர் தேவைக்காக மேகதாது அணை அவசியம் என்கிறது. இதற்கு தமிழ்நாடு அரசின் அனுமதி தேவையே இல்லை என்பது கர்நாடகாவின் நிலைப்பாடு.
ஆனால் கர்நாடகாவின் இந்த முயற்சிக்கு தமிழகம் ஒட்டுமொத்தமாக கடும் எதிர்ப்பை தெரிவிக்கிறது. மேகதாது அணை கட்டும் கர்நாடகாவின் முயற்சிக்கு மத்திய அரசு ஒப்புதல் தரக் கூடாது என வலியுறுத்தி தமிழக சட்டசபையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழக சட்டசபையின் இந்த தீர்மானத்துக்கு எதிராக கடந்த மார்ச் மாதம் கர்நாடகா சட்டசபையிலும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் மேகதாது அணையை கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் எனவும் கர்நாடகா சட்டசபை தீர்மானம் வலியுறுத்தியது.
கர்நாடகா சட்டசபையில் கடந்த மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்ட இத்தீர்மானத்துக்கு அம்மாநில அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. இதனையடுத்து இத்தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. கர்நாடகா சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறும் நிலையில் மேகதாது அணை விவகாரம் முக்கிய பிரச்சனையாக இப்போதே உருவெடுக்க தொடங்கி உள்ளது.












Click it and Unblock the Notifications