சூடாகும் கர்நாடகா முதல்வர் பதவி ரேஸ்.. மாற்றி யோசிக்கும் காங்கிரஸ்
பெங்களூர்: முடா முறைகேடு வழக்கு கர்நாடகா மாநில முதல்வர் சித்தராமையாவுக்கு உச்சகட்ட நெருக்கடியை கொடுத்துள்ளது. இதனால் விரைவில் முதல்வர் பதவியை மாற்ற காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. துணை முதல்வர் டிகே சிவக்குமார், அமைச்சர் சதீஷ் ஜார்கி ஹோலி பெயர்கள் அடுத்த முதல்வருக்கான ரேஸில் இருக்கின்றன.
கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது. சித்தராமையா முதலமைச்சராக இருக்கிறார். இந்நிலையில், சித்தராமையா தனது மனைவிக்காக, மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் மூலம் முறைகேடாக நிலம் ஒதுக்கியதாக புகார் எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக சித்தராமையா மீது வழக்குத் தொடர்வதற்கு அனுமதி வழங்கி, கர்நாடகா மாநில ஆளுநர் தவார் சந்த் கெலாட் உத்தரவிட்டுள்ளார். இது கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்ந்து சித்தராமையாவின் பதவிக்கே ஆபத்து என்றும் தகவல் வெளியானது. இதற்கு பதிலளித்த சித்தராமையா முதல்வர் பதவியை ராஜினாமா செய்வது என்ற பேச்சுக்கே இடமில்லை. என்று கடந்த மாதம் கூறியிருந்தார். மேலும் இதேபோல பாஜக, ஜேடிஎஸ் கட்சி தலைவர்கள் மீது நிலுவையில் உள்ள வழக்குகளையும் அவர் சுட்டி காட்டினார்.
தொடக்கத்தில் காங்கிரஸ் தலைமை சித்தராமையாவுக்கு ஆதரவாக உள்ளதாகவே தகவல் வெளியானது. ஆனால் எதிர்க்கட்சிகளின் அழுத்தம் காரணமாக இந்தப் பிரச்னையை காங்கிரஸ் தீவிரமாக யோசிக்க தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி அனைத்துத் தரப்பிலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒருவரை முதல்வராக நியமிக்கலாம் என்று முடிவில் இருக்கிறார்களாம்.
இதனால் கர்நாடகா அரசியலில் உச்சகட்ட பரபரப்பு நிலவுகிறது. கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள. இந்த முதல்வர் ரேஸில், காங்கிரஸ் கட்சியின் இரண்டு பெயர்கள் தீவிரமாக அடிபடுகின்றன. ஒருவர் கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவக்குமார், மற்றொருவர் பொதுப்பணித்துறை அமைச்சராக உள்ள சதீஷ் ஜார்கி ஹோலி.
கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்ற உடனே, முதல்வர் பதவிக்கு அதிகம் அடிபட்டது சிவக்குமாரின் பெயர்தான். அப்போது அது நடக்கவில்லை. அந்த வருத்தத்தை தற்போது சரிசெய்து கொள்ள அவர் தீவிரமாக முயற்சித்து வருவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மறுபக்கம், காங்கிரஸ் தலைமையின் விருப்பப் பட்டியலில், சதீஷ் ஜார்கியே இருப்பதாக சொல்லப்படுகிறது. சதீஷ் பட்டியலினத்தைச் சேர்ந்தவர். கடந்த சில நாட்களுக்கு முன்பு, காங்கிரஸ் தலைமை அவரை டெல்லிக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது கர்நாடகாவின் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது.
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியும் அவருடன் உரையாடியுள்ளதாக கூறப்படுகிறது. இவர்களை தவிர உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா உள்ளிட்ட சிலரும் முதல்வர் பதவிக்கு முயற்சித்து வருகிறார்களாம். இந்த விவகாரத்தில் காங்கிரஸில் இரண்டு கோஷ்டிகள் இருக்கின்றனவாம். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஒரு மாதிரியும், இளைய நிர்வாகிகள் வேறு மாதிரி யோசிப்பதாகவும் கூறப்படுகிறது.
பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்ற அடிப்படையில், சதீஷ் ஜார்கிக்கு முதல்வர் பதவி வழங்கி நிலைமையை சமாளிக்கும் ஆலோசனையில் இருக்கிறார்களாம். சதீஷ் ஜார்கி, சித்தராமையுடனும் நெருக்கமாக இருக்கிறாராம். அதனால் சித்தராமையாவும் அவரின் பெயரையே பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேநேரத்தில் சிவக்குமார் குறித்தும் தலைமை ஆலோசனை நடத்தி வருகிறதாம். இதனால் அடுத்த சில வாரங்களுக்கு கர்நாடகா அரசியலில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.












Click it and Unblock the Notifications