இந்துத்துவா தீவிரவாத இயக்கமான பஜ்ரங் தள்-க்கு தடை விதிப்போம்: கர்நாடகா காங். தேர்தல் அறிக்கை
பெங்களூர்: கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் இந்துத்துவா தீவிரவாத இயக்கமான பஜ்ரங் தள் அமைப்புக்கு தடை விதிப்போம் என அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் பயங்கரவாத இயக்கங்கள் தடை குறித்து கூறப்பட்டுள்ளதாவது:

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியில் மதம் அல்லது ஜாதி ரீதியான மோதல்களை ஏற்படுத்தக் கூடிய தனிநபர்கள் அல்லது இயக்கங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பஜ்ரங் தள், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா உள்ளிட்ட இயக்கங்கள் சட்டத்தை மீறி செயல்படுவதை அனுமதிக்க முடியாது. ஆகையால் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இத்தகைய இயக்கங்களுக்கு தடை விதித்த உள்ளிட்ட கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் இந்த தேர்தல் அறிக்கைக்கு வலதுசாரி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக விஷ்வ ஹிந்து பரிஷத்தின் மூத்த தலைவர் சுரேந்திர ஜெயின் கூறுகையில், பஜ்ரங் தள் அமைப்பை பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவுடன் ஒப்பிடுவது என்பது துரதிருஷ்டவசமானது. பாப்புலர் பிரண்ட் இயக்கம் தேசவிரோத அமைப்பு. இந்த இரு அமைப்புகளையும் ஒப்பிடுவதை இந்த தேசம் ஏற்காது. காங்கிரஸ் கட்சியின் இந்த சவாலை பஜ்ரங் தள் இயக்கம் ஏற்றுக் கொள்கிறது. காங்கிரஸ் கட்சிக்கு நாங்கள் ஜனநாயக வழியில் பதிலடி கொடுப்போம் என்றார்.
அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா கூறுகையில், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா ஏற்கனவே தடை செய்யப்பட்டுவிட்டது. சித்தராமையாதான் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவுக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெற்றவர். தற்போது சிறுபான்மையினர் வாக்குகளைப் பெறுவதற்காக இப்படியான ஒரு வாக்குறுதியை கொடுத்துள்ளது காங்கிரஸ். பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் தேர்தல் அறிக்கையைப் போலவே இருக்கிறது கர்நாடகா காங்கிரஸ் தேர்தல் அறிக்கை என்றார்.
காஷ்மீர் பண்டிட்டுகள்: காஷ்மீரில் இருந்து இடம்பெயர்ந்த காஷ்மீர் பண்டிட்டுகளுக்கான பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கப்படும் எனவும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் காஷ்மீர் கலாசார மையம் அமைக்க ரூ. 15 கோடி நிதி உதவி ஒதுக்கீடு செய்யப்படும். காஷ்மீர் இளைஞர்கள் தொழில் முனைவோராவதற்கான மேம்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
நாட்டில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு ஏற்கனவே மத்திய பாஜக அரசால் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் கர்நாடகாவில் பல்வேறு வன்முறை சம்பவங்களுக்கு காரணமாக இருந்து வரும் பஜ்ரங் தள் அமைப்புக்கும் தடை விதிக்கப்படும் என்கிறது கர்நாடகா காங்கிரஸ் தேர்தல் அறிக்கை.












Click it and Unblock the Notifications