கர்நாடகா:தம்பியை தோற்கடிப்பீங்களா? 'குமாரசாமி' கோட்டைக்குள் நுழைந்து 'சம்பவம்' செய்த டிகே சிவகுமார்!
பெங்களூர்: கர்நாடகா மாநிலம் சென்னப்பட்டணா சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் மத்திய அமைச்சர் குமாரசாமியின் மகனும் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனுமாகிய ஜேடிஎஸ் வேட்பாளர் நிகில் குமாரசாமி படுதோல்வி அடைந்துள்ளார். இந்த இடைத்தேர்தல் யுத்தம் என்பது பாஜக- ஜேடிஎஸ் vs காங்கிரஸ் இல்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். இந்த யுத்தமே குமாரசாமி vs டிகே சிவகுமார் என்பதுதான் யதார்த்தம்.
கர்நாடகாவின் பெரும்பான்மை ஜாதிகளில் ஒன்றாக ஒக்கலிகா வகுப்பினர்தான் தேவகவுடா குடும்பமும் டிகே சிவகுமார் குடும்பமும். தேவகவுடா குடும்பம், ஜேடிஎஸ் என்ற கட்சியை நடத்தி வருவதே ஒக்கலிகா ஜாதி வாக்குகளை நம்பித்தான். கர்நாடகா மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவரான டிகே சிவகுமார் பக்கமும் பெரும்பான்மை ஒக்கலிகா ஜாதியினர் நிற்கின்றனர் என்பதை அவருக்கு ஆதரவான போராட்டங்கள் மூலம் வெளிப்படுத்தி இருந்ததை கர்நாடகா பார்த்திருக்கிறது.

டிகே சிவகுமாருக்கு அதிர்ச்சி: ஒக்கலிகா வாக்குகளை முற்று முழுதாக காங்கிரஸ் பக்கம் கொண்டு வருவதில் முழுவீச்சில் களமாடுகிறவர் டிகே சிவகுமார். அவருக்கு பக்க பலமாக இருப்பவர் தம்பி டிகே சுரேஷ். கர்நாடகா சட்டசபை தேர்தல், லோக்சபா தேர்தல்களில் இதனை சாதித்தும் காட்டி ஜேடிஎஸ் என்ற கட்சிக்கே முடிவுரை எழுதியவர் டிகே சிவகுமார். ஆனால், லோக்சபா தேர்தலில் தேவகவுடா குடும்பத்தைச் சேர்ந்த டாக்டர் மஞ்சுநாத்திடம் டிகே சிவகுமாரின் தம்பி சுரேஷ் தோல்வியைத் தழுவினார். இது டிகே சிவகுமாரின் இமேஜ் மீது விழுந்த மிகப் பெரிய அடி.
சென்னப்பட்டணா இடைத்தேர்தல்: இதனால் அடிபட்ட புலியாக உறுமிக் கொண்டிருந்த டிகே சிவகுமாருக்கு கிடைத்த அருமையான வாய்ப்புதான் சென்னபட்டணா தொகுதி இடைத்தேர்தல். இந்த இடைத்தேர்தலில் தாமே போட்டியிடுவேன் என்றெல்லாம் கூட அறிவித்திருந்தார் டிகே சிவகுமார். ஒரு கட்டத்தில் டிகே சுரேஷ் போட்டியிடுவார் என்கிற தகவல்களும் வெளியாகின. இன்னொரு பக்கம், சென்னபட்டணா தொகுதி தாம் வென்ற தொகுதி; இடைத்தேர்தலிலும் தமக்குதான் கொடுக்கப்பட வேண்டும் என பாஜகவிடம் குமாரசாமி போராடிக் கொண்டிருந்தார். சென்னபட்டணா தொகுதி எப்படியும் குமாரசாமியின் ஜேடிஎஸ் கட்சிக்குதான் கிடைக்கும்; அவரது மகன் நிகில் குமாரசாமிதான் வேட்பாளர் என்பது எல்லோரும் எதிர்பார்த்த ஒன்றுதான்.
பாஜகவில் கலகம் எழுப்பிய யோகேஷ்வர்: ஆனால் ஜேடிஎஸ்- பாஜக கூட்டணிக்குள் கலகத்தை உருவாக்கிக் கொண்டிருந்தார் பாஜகவில் இருந்த சிபி யோகேஷ்வர். பாஜக, சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏவாக இதே சென்னபட்டணாவில் வென்றவர் யோகேஷ்வர். குமாரசாமி மனைவி அனிதா குமாரசாமியை தோற்கடித்தவர் யோகேஷ்வர். ஆனால் குமாரசாமியிடம் தோல்வியைத் தழுவியிருந்தார். இதனால் சென்னபட்டணா தொகுதியை தமக்காக ஜேடிஎஸ்-க்கு தரவே கூடாது என்பது யோகேஷ்வரின் குரலாக இருந்தது. யோகேஷ்வரின் பலத்தை பாஜக தலைமை அறிந்ததுதான்; ஆனாலும் கூட்டணி கட்சியான ஜேடிஎஸ்ஸை பகைக்க விரும்பவில்லை. இதனால் ஜேடிஎஸ்-க்கு சென்னபட்டணா தொகுதி கொடுக்கப்பட்டது.
இறங்கிப் போன குமாரசாமி: சென்னபட்டணாவில் எப்படியும் யோகேஷ்வர் ஏதோ ஒன்றை செய்து களமிறங்குவார் என்பதை நன்றாகவே உணர்ந்திருந்தார் குமாரசாமி. இதனால் ஒரு கட்டத்தில் ஜேடிஎஸ் சின்னத்தில் யோகேஷ்வர் நின்றாலும் எங்களுக்குப் பிரச்சனையே இல்லை என இறங்கிப் போனார் குமாரசாமி. ஆனால் ஜேடிஎஸ் குமாரசாமியிடம் மண்டியிட யோகேஷ்வர் விரும்பவில்லை.
செம்ம ஸ்கெட்ச்: இதனால் குமாரசாமி - தேவகவுடா குடும்பத்துக்கு எதிரான டிகே பிரதர்ஸுடன் (டிகே சிவகுமார், டிகே சுரேஷ்) கை கோர்த்தார் யோகேஷ்வர். பாஜகவை விட்டு வெளியேறிய யோகேஷ்வர் காங்கிரஸில் இணைந்தார். அதே வேகத்தில் சென்னப்பட்டணா தொகுதி காங்கிரஸ் வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டார் யோகேஷ்வர். இப்போது குமாரசாமி மகன் நிகில் குமாரசாமி சொந்த தொகுதியில்.. தேவகவுடா குடும்பத்தின் இரும்புக் கோட்டையில் வீழ்த்தப்பட்டுள்ளார். இந்த மகா சம்பவத்தின் சூத்திரதாரியே சாட்சாத் டிகே சிவகுமார்தான். தமது தம்பியை லோக்சபா தேர்தலில் தோற்கடித்து தமக்கு தலைகுனிவை உருவாக்கிய குமாரசாமி குடும்பத்துக்கு இடைத்தேர்தலில் செம்ம பதிலடி தந்து 'சம்பவம்' குமார் என உருமாறி நிற்கிறார் கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமார்!












Click it and Unblock the Notifications